Ad

திங்கள், 5 ஏப்ரல், 2021

மதுர மக்கள்: பகல்ல கேரம் மாஸ்டர், ராத்திரில மார்க்கெட்ல அக்கவுன்ட்டன்ட்... கோச் ஆறுமுகத்தின் கதை!

"விவரம் தெரியுற வயசுக்கு முன்னாலேயே இவுங்க தெரிஞ்சுகிட்டது கேரம் போர்டுதான்னு நினைக்கிறேன். ரெண்டு பேருமே ஒரே வயசுலதான் விளையாட ஆரம்பிச்சுருக்காங்க. அதாவது நாலாவது படிக்கும்போதுல இருந்து. இப்போ ரெண்டு பேருமே கேரம்ல தேசிய அளவிலான சாம்பியன்ஸ். ரெண்டு பேருமே என்னோட ஸ்டூடண்ட்டுங்கறது பயிற்சியாளரா எனக்கு இன்னும் பெருமைதானே!" பேசும் போதே ஆறுமுகம் முகத்தில் அத்தனை பெருமிதம். மித்ரா மற்றும் மனுராஜ் இருவரும் கேரம் போர்டு நேஷனல் சாம்பியன்கள். மூவருடனும் உரையாடியதில் இருந்து...

"நான் சிம்மக்கல் சாரதா ஸ்கூல்ல இப்போ எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போகப்போறேன். அப்பா ஆட்டோ ஓட்டுறாங்க அம்மா வீட்டுல இருக்காங்க. வீட்டுல இருக்காங்கனு சிம்பிளா சொல்றத விட நான் எங்கெல்லாம் டோர்னமெண்ட்டுனு கிளம்பி நிக்கிறனோ அம்மாவும் எனக்கு சமமா தன்னை வருத்திக்கிட்டு என்னோட கிளம்பி வந்துருவாங்க. சின்ன வயசுல பக்கத்து வீட்டு பசங்க எல்லாரும் கேரம் போர்டு விளையாடுறத பார்த்து கேரம் போர்டு கேட்டதால முதன் முதலா அறுநூறு ரூபாய்க்கு வாங்கி குடுத்தாங்க. அதுக்கப்பறம் இன்னும் அதிகமா போர்டு கூட பேச ஆரம்பிச்சுட்டேன்.

கேரம் பயிற்சி

சின்ன சின்ன டோர்னமென்ட்டா ஜெயிக்கவும் எனக்கும் நம்பிக்கை அதிகமாச்சு. அப்போ இன்னும் முறையா கத்துக்க பயிற்சியாளர் கிட்ட போங்கனு சொல்லவும் ஆறுமுகம் சார்கிட்ட வந்தோம்.

அப்பாவுக்கு வாடகை ஆட்டோதான். போக வர்றதுக்கு பணம் இல்லாம நிறைய மேட்செல்லாம் போகாம இருந்துருக்கேன். ஆனா எல்லாத்தையும் தாண்டி இப்போ நேஷனல் லெவல்ல ஜெயிச்சது ரொம்பவே சந்தோஷம். இன்னும் அடுத்தடுத்த உயரம் போகணும்" என்கிறார் மித்ரா.

"எனக்கு கேரம் விளையாட ஆசை வந்ததே எங்க அண்ணனோட ஃப்ரெண்ட்ஸ் விளையாடுறத பார்த்துதான். இப்போ நான் மங்கையற்கரசி ஸ்கூல்ல ப்ளஸ் 1 படிக்கிறேன். காலையில மூணு மணிக்கு எந்திரிக்கணும். பிராக்டீஸ் முடிச்சுட்டு ஸ்கூலுக்குக் கிளம்பணும். திரும்ப சாயங்காலம் ப்ராக்டீஸ்... அது முடிச்சுட்டு படிக்கணும். இப்படி நேரம் போறதே தெரியாது. விளையாடதானே போறோங்கிறதால எனக்கும் எந்தக் கஷ்டமும் தெரில" எனச் சொல்லும் மனுராஜ் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

"நான் பதினேழு வருஷமா கேரம் ஆடிக்கிட்டு இருக்கேன். நேஷனல் லெவல் பிளேயர்தான் நானும். அப்பா போக்குவரத்து துறைல வேலை பார்த்தாங்க. அஞ்சுல இருந்து ஏழு மணிவரைக்கும் பயிற்சி கொடுப்போம். நாங்க பிளேயரா இருந்த காலத்துல சர்ட்டிபிகேட் மட்டும்தான் இருக்கும். இப்போ நிறைய பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... இது இப்போ உள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய ஊக்கத்த குடுத்திருக்கு!" என்கிறார் கோச் ஆறுமுகம்.

கோச் ஆறுமுகம், மனுராஜ்

'ஆறுமுகம் சார் எப்படி?' என்று கேட்டால், மித்ராவும் மனுராஜும் 'அய்யய்யோ அவரா பயங்கரமான ஆளாச்சே' என ஆறுமுகத்தை நக்கலடிக்க, பின் அவர்களே, "அச்சோ அப்படி எல்லாம் இல்ல... சார் பார்க்கத்தான் சாஃப்ட்... ஆனா ட்ரெயினிங் அப்போ சேட்ட பண்ணுனா செம்ம வயலண்ட்டா மாறிடுவாங்க. எங்க சார் பகல்ல கேரம் கோச்சா இருக்காங்க. இரவுல பரவை மார்க்கெட்டுல வேலை பார்க்குறாங்க. இப்படி பகல் இரவுன்னு வேலை பார்க்குறதனால அவரு தூங்கிருவாருன்னு நாம அவர ஏமாத்த முடியாது. காலையில நாலு மணிக்கு நாங்க அவருக்கு போன் பண்ணலைன்னா அடுத்த அஞ்சு நிமிஷத்துல எங்களுக்கு அவருக்கிட்ட இருந்து போன் வந்துரும். அவரோட சொந்த தம்பி தங்கச்சிங்க மாதிரிதான் ரொம்ப கவனமா எங்கள பார்த்துக்கிடுவாரு. இதை ரொம்பவே பாதுகாப்பாவும் உணர்றோம்" என்று உணர்வுபூர்வமாகப் பேசுகின்றனர்.

Also Read: மதுர மக்கள்: "காதுபடவே எங்க உருப்படப் போறான்னு பேசினாங்க... ஆனா இப்ப..?" - சைவா பார்மஸி மணிமாறன்

இப்போது ஆறுமுகம் தொடர்கிறார். "முதன் முதலா அபிநயாங்கிற மாணவிதான் என்னோட ஸ்டூடண்ட்டா அறிமுகம் ஆனாங்க. அவுங்க மாவட்ட அளவுல மாநில அளவுலன்னு அடுத்தடுத்த லெவல் போகவும் மனுராஜும் மித்ராவும் என்கிட்ட வந்தாங்க. மனுராஜ் வந்து சேர்ந்த மூணாவது மாசத்துலயே மாவட்ட அளவுல சாம்பியன் ஆனாரு... பசங்க சொல்றமாதிரி பயிற்சி அப்போ ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டா இருந்துருக்கேன். ஏன்னா இதுல மனச ஒருமுகப்படுத்தி விளையாடணும், கவனம் சிதறுன கேம் நம்மளோடது இல்ல! இப்போ என்கிட்ட எட்டு மாணவர்கள் இருக்காங்க.

கேரம் விளையாட்டில் வென்ற கோப்பைகள்
கேரம் விளையாட்டில் வென்ற கோப்பைகள்
கேரம் பயிற்சி
கேரம் விளையாட்டில் வென்ற கோப்பைகள்
கேரம் விளையாட்டில் வென்ற கோப்பைகள்

பகல்ல கேரம் மாஸ்டர், ராத்திரில மார்க்கெட்ல அக்கவுன்ட்டன்ட் வேலைன்னு ஓய்வே இல்லாமதான் ஓடிக்கிட்டு இருக்கேன். என் வீட்டு மாடியிலயே கேரம் பயிற்சிக்காக வாடகைக்கு இடம் பிடிச்சு சொல்லிக்குடுத்துக்கிட்டு இருக்கேன். இதுல நல்ல திறமையான மாணவர்கள் இருக்காங்க. ஆனாலும் பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாத அளவு வறுமையிலயும் இருக்காங்க. அதனால பெரும்பாலும் நான் பணத்த முதன்மையா வச்சு பயிற்சி குடுக்குறது இல்ல. மதுரையில் இருந்து நிறைய சாம்பியன்களை உருவாக்கணும். 'எப்படிப்பா'னு கேட்டா அந்த மாணவர்கள் என்பேர சொல்லணும்! அவ்வளவுதான் கனவு, ஆசை எல்லாம். உருவாக்குவேன்!" என்கிறார் அத்தனை நம்பிக்கையுடன்.

வாழ்த்துக்கள் சாம்பியன்ஸ்!



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/madurai-people-meet-coach-arumugam-who-trains-the-young-generation-on-carrom-board

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக