சில தினங்களுக்கு உலகின் முக்கிய கப்பல் வழித்தடமான சூயஸ் கால்வாயில் `எவர்க்ரீன்` என்ற ராட்ச கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டு சர்வதேச பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தது. அந்த ஒரு கப்பலால் பல கப்பல்கள் தேங்கி நின்று `ட்ராஃபிக் ஜாம்` ஆனதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சரக்குகளும் சிக்கிக் கொண்டன.
பின் ஒருவழியாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட கப்பல் மீட்கப்பட்டது. சரி அதுதான் மீட்கப்பட்டுவிட்டதே தற்போது ஏன் செய்தியில் அடிப்படுகிறது என நீங்கள் யோசிக்கலாம். இந்த செய்தி சூயஸ் கால்வாயை பற்றியோ அல்லது அதில் சிக்கிக் கொண்ட கப்பலை பற்றியோ அல்ல. ஆனால் அந்த சம்பவத்திற்கு காரணம் என தவறாக ஒரு பெண் குறித்து வலம் கொண்டிருக்கும் செய்தி குறித்துதான்.
யார் அந்த பெண்?
அவரின் பெயர் மார்வா எல்ஸ்லேடார். அவர்தான் எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன். சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிக் கொண்ட சம்பவத்தின்போது மார்வா, பல மைல்களுக்கு அப்பால் மத்திய தரைக்கடலின் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் Aida IV என்ற கப்பலில் கேப்டனுக்கு அடுத்தப்படியான அதிகாரம் கொண்ட `ஃபர்ஸ்ட் மேட் இன் காமாண்ட்` பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த கப்பல் எகிப்தின் கடற்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு சொந்தமானது. செங்கடலில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல் அது. தன்னைப் பற்றி வலம் வந்த தவறான செய்தியை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக மால்வா பிபிசி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எங்கு தொடங்கியது இந்த போலிச் செய்தி?
மார்வா குறித்த அந்த போலிச் செய்தி அராப் நியூஸ் தளத்தில் வெளியான ஒரு செய்தியை போன்று பரப்பப்பட்டுள்ளது. அதில் அவர்தான் சூயஸ் கால்வாய் சம்பவத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த போலி செய்தியில் வெளியாகியுள்ள படம் அராப் நியூஸ் தளத்தில் மார்ச் 22ஆம் தேதியன்று, எகிப்தின் முதல் பெண் கேப்டன் மார்வாவின் வெற்றிக் கதை குறித்து வெளியான செய்தியின் புகைப்படம். இந்த புகைப்படம் ட்விட்டர் மற்றும் முகநூலில் பலமுறை பகிரப்பட்டுள்ளது.
தன்னை குறித்து யார் இந்த போலிச் செய்தியை பரப்புகிறார்கள்? ஏன் பரப்புகிறார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்கிறார் மார்வா. ஆண்களே அதிகம் கொண்ட இந்த துறையில் மார்வாவால் பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் கால்பதிக்க முடிந்துள்ளது.
போராட்டத்துக்கு பின் கிடைத்த வாய்ப்பு!
கடலின் மீது தனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது என்கிறார் மார்வா. ஆனால் அவர் இந்த துறையில் பயில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கப்பற் போக்குவரத்துக்கான அரபு அகாதமியில் சேர்ந்ததே ஒரு சட்ட போராட்டத்துக்கு பின் தான். அந்த அகாதமி அங்கு பயில ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிக் கொண்டிருந்தது. அதன்பின் அப்போதைய எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அந்த சட்ட போராட்டத்தில் தலையிட்ட பின் தான் மார்வாவிற்கு அனுமதி கிடைத்தது.
அனுமதி கிடைத்தப்பின் மார்வாவின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. ஆண்கள் மட்டுமே அங்கு இருந்ததால், தன்னை போன்ற மனப்பான்மை கொண்டவர்களிடம் பேசுவதற்குகூட அங்கு யாரும் இல்லை என்கிறார் மார்வா. பெண்கள் தங்கள் குடும்பங்களை விட்டு வெளியே, அதுவும் கப்பலில் பணிப்புரிவதை பெரிதாக யாரும் விரும்புவதில்லை என்கிறார் மார்வா.
தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் மார்வா `ஃபர்ஸ்ட் மேட்` பொறுப்பிற்கு உயர்ந்தார். Aida IV என்ற கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அந்த கப்பல்தான் 2015ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயை விரிவுப்படுத்தியபின் சென்ற முதல் கப்பல். கால்வாயை கடந்த முதல் இளம் மற்றும் பெண் கேப்டன் மார்வா. தன்னை குறித்த போலிச் செய்திக்கு எதிர்மறையான கமெண்டுகள் வந்திருந்தாலும், பல நேர்மறையான மற்றும் தனக்கு ஆதரவான கருத்துக்களும் வந்துள்ளது என்கிறார் மார்வா. அதுமட்டுமல்லாமல் முன்பை காட்டிலும் தற்போது தான் மிகவும் பிரபலமடைந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
“கப்பல்துறையில் சாதிக்க விரும்பும் அனைத்து பெண்களும், எதிர்மறையான கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு நீங்கள் நேசிப்பதை அடைய போராடுங்கள். இதுவே பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி” என நம்பிக்கையுடன் கூறுகிறார் மார்வா.
- திலகவதி
source https://www.vikatan.com/news/international/who-is-marwa-elselehdar-blamed-for-suez-canal-blockage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக