Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

'பாஜக கொடியும் வேண்டாம்; மோடி படமும் வேண்டாம்!' - பயந்து ஒதுங்குகிறார்களா பாஜக வேட்பாளர்கள்?

''பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வருகிறாரோ அந்த அளவுக்கு பாஜகவுக்கு தேர்தலில் வாக்கு குறையப் போகிறது'' எனச்சொல்லி தமிழக தேர்தல் களத்தையே அதிரவைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

அழுகை, கோபம், ஆவேசம், சென்டிமென்ட் என நவரசங்களையும் கொட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியான பா.ஜ.க-வின் அகில இந்திய தலைவர்களும் தங்கள் கூட்டணிக் கட்சிக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் செய்துவருகின்றனர். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு இடம் கூட வெல்லமுடியாமல் பலத்த தோல்வியை சந்தித்த கட்சி பா.ஜ.க. நீட் தேர்வில் ஆரம்பித்து, மீத்தேன் திட்டம், எட்டு வழிச்சாலை என அடுத்தடுத்து மத்திய அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கொதிநிலையில் இருந்தனர். மக்களின் இந்த 'எதிர்ப்பு மனநிலை' தேர்தலின்போது 'மோடி எதிர்ப்பு அலை'யாக மாறி, பா.ஜ.க-வுக்கு பெரும் தோல்வியைப் பெற்றுத்தந்தது.

பா.ஜ.க சுவர் விளம்பரம்

இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய சூழலிலும் தமிழ்நாட்டில், 'மோடி எதிர்ப்பு மனநிலை' மக்களிடையே வேரூன்றி இருப்பதாக அரசியல் நிலவரங்கள் ஆரூடம் சொல்லிவருகின்றன. இந்தக் கூற்றை மெய்ப்பிப்பதுபோல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களேகூட, வாக்கு சேகரிப்பின்போது அகில இந்திய பா.ஜ.க தலைவர்களது பெயர்களை உச்சரிக்கத் தயங்குகின்றனர். குறிப்பாக சுவர் விளம்பரம், துண்டறிக்கை உள்ளிட்ட விளம்பரங்களில் பா.ஜ.க-வின் டெல்லி தலைவர்களது படங்கள் மிஸ்ஸிங்! கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க தலைவர்களது பெயர்களைப் பயன்படுத்தியே வாக்கு சேகரித்து வருகின்றனர். பா.ஜ.க வேட்பாளர்களின் இந்தத் பயத்தைத்தான் வெளிப்படையாகப் போட்டுடைத்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தங்கள் கட்சி உறுப்பினர்களை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் அனுப்பிவைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டிவரும் பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர்களோ, தொடர்ந்து தமிழ்நாட்டு பிரசார மேடைகளை அலங்கரித்து வருகின்றனர். நேற்று முன் தினம் தாராபுரம் பிரசாரத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி, மீண்டும் ஏப்ரல் 2-ம் தேதி பிரசாரத்துக்காக மதுரைக்கு வருகைதர இருக்கிறார். இந்த சூழ்நிலையில், மு.க.ஸ்டாலின் தெரிவித்தபடி, தமிழ்நாட்டு மக்களிடையே 'மோடி எதிர்ப்பு மனநிலை' இன்னமும் தொடர்கிறதா என்ற கேள்வியை பத்திரிகையாளரும் அரசியல் விமசகருமான ப்ரியனிடம் கேட்டபோது,

பா.ஜ.க துண்டறிக்கை

``தமிழ்நாட்டு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வருகைபுரிவதால், பா.ஜ.க-வுக்கு அல்லது அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்கு குறையத்தான் செய்யும் என்று தி.மு.க சொல்வதில் ஓர் அரசியல் இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியல் மனநிலையில் இருந்துவரும் தி.மு.க-வினர் இப்படிச் சொல்வதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்களேகூட, 'ஓட்டு கேட்டுப்போகும்போது எங்களோடு பா.ஜ.க கொடியைப் பிடித்துக்கொண்டு யாரும் வராதீர்கள்' என்று ஏன் சொல்கிறார்கள்?

பல்லாவரம் அ.தி.மு.க வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வாக்கு கேட்டுப் போகும்போது அவரோடு சுமார் 150 பேர் வரையிலும் செல்கிறார்கள். அவர்களில் ஒருவரது கையில்கூட பா.ஜ.க கொடி இல்லை. கேட்டால், 'பா.ஜ.க கொடியுடன் யாரும் வராதீர்கள்' என்று உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதேபோல், சிவகங்கை தொகுதியில் உள்ள அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனும்கூட 'பா.ஜ.க கொடியுடன் யாரும் வராதீர்கள்' என்று சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆக, தமிழக மக்களிடையே 'பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை' இன்னமும் நீடிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர்தான் இப்படி சொல்கிறார்கள் என்றில்லை.... பா.ஜ.க வேட்பாளர்களேகூட 'பா.ஜ.க கொடி வேண்டாம்; மோடி படம் வேண்டாம்' என்றுதானே பிரசாரம் செய்துவருகிறார்கள். சுவர் விளம்பரத்தில்கூட பா.ஜ.க தலைவர்களது பெயரை எழுதாமல் ஓட்டு கேட்கிறார்கள். இன்றைக்குக்கூட வானதி சீனிவாசன் வாக்கு கேட்கும் துண்டு பிரசுரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் படம்கூட இல்லை என்றால் இதற்கு என்ன அர்த்தம்?

பிரதமர் மோடி தாராபுரத்துக்கு வருகைதந்தபோதுகூட 'கோ பேக் மோடி' ஹேஸ்டேக்கை 2 லட்சத்துக்கும் அதிமானோர் ட்ரென்ட் செய்கிறார்கள். காரணம் தமிழ் மொழியை ஓரங்கட்டுவது, மத்திய அரசுப் பணியில் தமிழர்களைப் புறக்கணிப்பது என தமிழ்நாட்டு மக்களை உணர்வு ரீதியாகவே மத்திய பா.ஜ.க அரசு வஞ்சித்து வருவதுதான். இதுமட்டுமல்ல... எட்டு வழிச்சாலை - வேளாண் சட்டம் என நேரடியாக விவசாயிகளை பாதிக்கின்றனர், கொரோனா ஊரடங்கினால் சம்பளக் குறைப்பு - வேலையிழப்பு, சிறுகுறு தொழில்கள் பாதிப்பு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு என ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடையே ஆழ வேரூன்றியிருக்கிறது.

ப்ரியன்

கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகத்தான் தி.மு.க-வினரே இதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனால்தான் 'மோடி எதிர்ப்பு' என்று மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதாவது, 'அ.தி.மு.க-வுக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும், பா.ஜ.க-வுக்கு போடுகிற ஓட்டுதான்' என்று அழுத்தமாகச் சொல்லி பிரசாரம் செய்கிறார்கள். ஆக, இன்றைய சூழ்நிலையில், பா.ஜ.க மீது மக்களுக்கு இருக்கும் இந்த வெறுப்புணர்வை தி.மு.க மட்டுமல்ல... அ.தி.மு.க., பா.ஜ.க தலைவர்களுமே புரிந்திருக்கிறார்கள்தான்!'' என்கிறார் தெளிவாக.

இதையடுத்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம், இதே விவகாரம் பற்றி விளக்கம் கேட்டுப் பேசினோம்... ``ஜல்லிக்கட்டுக்கு தடை, நீட் அறிமுகம், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, காட்டுப்பள்ளி துறைமுகம் என அனைத்தையும் கொண்டுவந்தது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சிதான். ஆனால், இந்தத் திட்டங்களையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு இப்போது தொடர்கின்ற சூழலில், தங்களுக்கு இதுநாள் வரையில் கிடைத்துவந்த பொருளாதார பலன்கள் கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில், பா.ஜ.க அரசு மீது தவறான விஷயங்களை எடுத்துச் சொல்லி 'இந்த ஆட்சி தமிழக மக்களுக்கு விரோதமாக இருக்கிறது' என்பதுபோன்ற மாயையை ஏற்படுத்துகிறார்கள்.

Also Read: காரைக்குடி: கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது தெரியாமல் வாக்குறுதி அளித்த ஹெச்.ராஜா!

'தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை காலூன்ற விடமாட்டோம்' என்று இத்தனை நாட்களும் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இப்போது 'காலூன்ற விட்டுவிடாதீர்கள்' என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறது. மற்றபடி அ.தி.மு.க தலைவர்கள், 'பா.ஜ.க கொடியைக் கொண்டுவராதீர்கள்' என்றெல்லாம் சொன்னதாக வதந்திகள்தான் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், உண்மையில் பா.ஜ.க வேட்பாளர்களுக்காக அ.தி.மு.க-வினரும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்காக பா.ஜ.க-வினரும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர்.

நாராயணன் திருப்பதி

பா.ஜ.க விளம்பரங்களில்கூட, பா.ஜ.க அகில இந்திய தலைவர்களது படங்கள் இடம் பெறுவதில்லை என்ற பொய்யை தி.மு.க-வினர் பரப்பிவருகிறார்கள். கேட்கும்போதே இது நம்பும்படியாக இல்லையே! பா.ஜ.க-வினர் 10 சுவர் விளம்பரங்கள் செய்கின்றனர் என்றால், அதில் 2 விளம்பரங்களில் கூட்டணிக் கட்சியினர் படங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதை வைத்துக்கொண்டு 'பா.ஜ.க தலைவர் படங்கள் இந்த விளம்பரத்தில் இல்லை பாருங்கள்' என்று தவறாக செய்தி பரப்புகிறார்கள்.

இன்னும் சில இடங்களில், எங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வினர் தங்கள் கட்சித் தலைவர் படங்களை பிரதானமாக அச்சிட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். அதுபோன்ற விளம்பரங்களில் பா.ஜ.க வேட்பாளர் மற்றும் பா.ஜ.க-வின் தாமரை சின்னம் ஆகியவை மட்டும்தான் இடம்பெற்றிருக்கும். அதை பா.ஜ.க-வின் நோட்டீஸ் என்று நீங்கள் நினைத்தால்... நாங்கள் என்ன செய்யமுடியும்? அடுத்து நாங்கள் எப்படி விளம்பரம் செய்யவேண்டும் என்று தி.மு.க-வினர் எங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை!'' என்று உறுதியாக மறுக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-admk-candidates-avoid-bjp-logo-and-flag

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக