தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவும், அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., மோகனும், புதியதமிழகம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியும் போட்டியிட்டுள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக மீடியாக்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, “இதே ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க கட்சி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் ஊழல் கறை படிந்தவர்கள். தி.மு.க வேட்பாளர் சண்முகையா, மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்து காற்றாலைகளுக்கு விற்றவர். அ.தி.மு.க வேட்பாளர் மோகன், தொகுதிக்குட்பட்ட வாய்க்கால்கள், கண்மாய்கள் உள்ளிட்டவைகளில் இயற்கை வளமான மணலைக் கொள்ளை அடித்தவர். ஆனால், நான் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவன்” எனப் பேசினார். கிருஷ்ணசாமியின் இந்தப் பேச்சு தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
”தேர்தல் வரும் நேரத்தில் மட்டும்தான் தொகுதிக்குள் தலை காட்டுவார் கிருஷ்ணசாமி. கொரோனா பாதிப்பு காலத்தில்கூட மக்களை சந்திக்கவோ, நிவாரணப் பொருட்கள் வழங்கிடவோ முன்வரவில்லை. தேர்தல் வந்ததனால்தான் அவரைப் பார்க்க முடிகிறது. அவருக்கு பதவி மட்டுமே முக்கியம்” என இரு கட்சியினரும் கிருஷ்ணசாமி மீது குற்றம்சாட்டினர். மும்முனைப் போட்டியிலும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று மீடியாக்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, ”இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்களிக்க வாக்காளர்களுக்கு தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே ரூ.500 முதல் ரூ.1,000 வரை பணப்பட்டுவாடா செய்துள்ளனர். சில வி.ஐ.பி தொகுதிகளில் கூடுதலாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் போட்டியிட்ட ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் பணம் தாராளமாக வாரி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவிற்கு 4 நாட்கள் முன்னதாக மக்களின் முகபாவனையே மாறிவிட்டது. பிரசாரத்தை நான் துவக்கும் போது எனக்கிருந்த வரவேற்பு அதன் பின்பு இல்லை. இதுபோன்ற ஒரு தேர்தலை நான் சந்தித்ததே இல்லை. தேர்தல் ஆணையம் என ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடித்துக் கொடுத்தால், பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பிடித்துக் கொடுத்தவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வாக்குரிமை சுதந்திரம் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்கிற்காக பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதால், வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தொகுதிகளில் கள ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/counting-in-tamil-nadu-should-not-be-held-because-of-money-factor-says-drkrishnasamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக