Ad

புதன், 7 ஏப்ரல், 2021

மகாராஷ்டிரா: லாக்டெளன் விதிகளால் அதிருப்தி - வியாபாரிகள் போராட்டம்; அரசுக்கு 24 மணி நேரம் கெடு!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் வரும் 30-ம் தேதி வரை இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பகலிலும் ஏராளமான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் படி மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருக்கவேண்டும் என்றும் மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திங்கள் கிழமை இரவு 8 மணியில் இருந்து இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த கட்டுப்பாடுகளுக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராவி தடுப்பூசி மையம்

கோலாப்பூர், புனே போன்ற நகரங்களில் அரசின் உத்தரவை மீறி கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. இதனால் போலீசாருக்கும்,வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாக்பூர், மும்பை போன்ற நகரங்களில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா முழுவதும் 750 வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லையெனில் 8-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மகாராஷ்டிரா அரசை எச்சரித்துள்ளனர்.

இந்த வர்த்தக அமைப்புகளில் மொத்தம் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அரசு விதிகளை தளர்த்தவில்லையெனில் கடைகளை திறந்து வைத்திருப்போம் என்றும் கடை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். அரசின் புதிய உத்தரவால் மாநிலத்தில் 90 சதவிகித ஹோட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ஹோட்டல் தொழில் பேரழிவை சந்தித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்க்கட்சித்தலைவர் தேவேந்திர பட்நவிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ``வாராந்திர விடுமுறை நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த பொதுமுடக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வார நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பொதுமுடக்கத்தை போன்று இருக்கிறது. இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிறிய கடைகள், சிறிய உணவு விடுதிகள், சலூன்களை அடைக்கவேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு

இதற்கிடையே கட்டுப்பாடுகள் குறித்து அரசு சில விளக்கங்களை அளித்திருக்கிறது. அதன்படி, `` வீட்டு வேலை செய்ய வருபவர்கள், பேப்பர் போட வருபவர்கள், டிரைவர்கள், டெலிவரிபாய்கள், குப்பை எடுக்க வருபவர்கள் நேரடியாக கட்டிடத்திற்குள் செல்வதை தடுக்கவேண்டும். அவர்கள் முகக் கவசம் அணிந்து, கையை கழுவி சானிட்டைசரை தெளித்து, கையுறை அணிந்து செல்வதை கட்டிட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெளியில் 2 அல்லது 3 பேராக வருபவர்கள் 6 அடி இடைவெளிவிட்டு இருக்கவேண்டும். லிப்ட் பட்டன்களை கூட கையுறை அணிந்து அல்லது டிஷு பேப்பர் கொண்டுதான் அழுத்தவேண்டும். கார்கள் மற்றும் வாகனங்கள் வெளியில் எடுத்து செல்வதாக இருந்தால் அதற்கு சானிட்டைசர் அடித்த பிறகே வெளியில் எடுக்கவேண்டும்" போன்ற கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், கொரோனா விதிகளை மீறும் கட்டிடங்களுக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையே அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனும் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Also Read: புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு:

மும்பையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுடிருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசி மட்டுமே கையிருப்பு இருப்பதாக மும்பை மேயர் கிஷோரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, மத்திய அரசிடமும், முதல்வரிடமும், எதிர்க்கட்சி தலைவர்களிடமும் பேசியிருப்பதாகத் தெரிவித்தார். மும்பையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா அரசு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/maharashtra-traders-protest-on-streets-due-to-lockdwon-rules

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக