Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

மகாராஷ்டிரா: `ஆக்ஸிஜன் பெற மத்திய அரசின் காலில்கூட விழத் தயார்!’ - சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றால், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்துகொண்டிருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற உதவும்படி மகாராஷ்டிரா அரசு அண்டை மாநிலங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசும் தொழிற்சாலைகளிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று மருத்துவமனைகளுக்கு அனுப்பிவருகிறது. மகாராஷ்டிரா அரசு மத்திய அரசிடம் கூடுதலாக ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், ``மக்களுக்காக ஆக்ஸிஜன் பெற நாங்கள் எந்த மட்டத்துக்கும் செல்ல தயாராக இருக்கிறோம்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

ஆக்ஸிஜன் பெற மத்திய அரசின் காலில்கூட விழத் தயாராக இருக்கிறோம். மக்களைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். திரவ ஆக்ஸிஜன் பெற காலைப் பிடிக்கக்கூட தயாராக இருக்கிறோம். மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் பகிர்ந்து கொடுப்பது மத்திய அரசின் பொறுப்பு. அந்தக் காரியத்தை சரியான முறையில் செய்ய வேண்டும். மத்திய அரசு தனது கடமையைச் செய்ய வேண்டும். மகாராஷ்டிராவுக்கு கூடுதல் அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் வைக்கிறேன். ஆக்ஸிஜன் டேங்கர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு விரைவாகச் செல்ல சாலையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

இதற்கிடையே மும்பை அருகே கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் தீப்பிடித்து 13 பேர் இறந்ததற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்களில் ஒருவரன கிரீத் சோமையா கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் மற்றும் தீயணைப்பு வசதிகள் குறித்து உடனே தனிக்கை செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் உதவியை மகாராஷ்டிரா அரசு கோர வேண்டும் என்றும் கிரீத் சோமையா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தீ விபத்துக்காக அமைச்சர் ராஜேஷ் தோபேயைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சோமையா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

மேலும், மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு மீண்டும் இ-பாஸ் முறையை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது. வாகனங்களில் மாவட்டம்விட்டு வேறு மாவட்டம் செல்பவர்கள், வெளி மாநிலம் செல்பவர்கள் இந்த அவசர இ-பாஸ் எடுத்துச் செல்லாம். அவசர அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இ-பாஸ் எடுத்துச் செல்லும்படி மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வாகனங்களில் மாவட்டம்விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தால் ஆன்லைனில் தகுந்த காரணத்தைச் சொல்லி இ-பாஸ் பெற்றுச் செல்லலாம். ஆன்லைனில் முடியாதவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்றால் அவர்கள் பதிவு செய்து இ-பாஸ் பெற உதவி செய்வார்கள் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/maharashtra-ministers-says-he-will-fall-on-central-government-feet-for-oxygen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக