Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கொரோனா: படுக்கை எண் குளறுபடி ; தாய் உயிரோடிருக்க வேறொரு பெண்ணை மாற்றி தகனம் செய்த மகள்!

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் மிகப்பிரம்மாண்டமான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தடுப்பூசி போடுவது மற்றும் கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு சேர்க்கப்படும் நோயாளிகளுடன் அவர்களின் உறவினர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

அபய் என்பவர் தனது தாயார் சங்கீதாவை கொரோனா சிகிச்சைக்காக கடந்த 14-ம் தேதி இந்த சிகிச்சை மையத்தில் சேர்த்தார். அவரை சேர்க்கும் போது அவருக்கு டி58 படுக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்நேரம் அந்த படுக்கை காலியாகாததால், அந்த படுக்கையில் சேர்க்காமல் டி-78 படுக்கையில் சங்கீதாவைச் சேர்த்து சிகிச்சையளித்தனர் .

பாந்த்ரா-குர்லா கொரோனா சிகிச்சை மையத்தில் உறவினர்கள்

மறுநாள் அபய் தனது உறவினரிடம், தனது தாயாரின் உடைகளைக் கொடுத்து தனது அம்மாவுக்குகு கொடுத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டார். அவர் உடைகளைக் கொண்டு சென்றபோது, மருத்துவமனை ஊழியர்கள் அறிவிப்பு மூலம் சங்கீதாவை வந்து ஆடைகளை பெற்றுச் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் சங்கீதா வந்து ஆடைகளை வாங்கவில்லை.

இதையடுத்து ஆடைகளை எடுத்துச் சென்றவர், தனக்கு கொரோனா தடுப்பு கவச ஆடைகளை அணிவித்து உள்ளே அனுமதிக்க வேண்டுமென்றும், தான் சென்று தேடிக் கொடுத்து வருவதாகவும் கோரினார். ஆனால் அதற்கு மருத்துவ ஊழியர்கள் மறுத்துவிட்டனர். சங்கீதா நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மறுநாளும் அங்கு சென்று சங்கீதாவை அவரது குடும்பத்தினர் தேடினர். ஆனாலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிவசேனா எம்.எல்.ஏ-வின் துணையோடு சங்கீதாவின் மகன் அபய் மருத்துவமனைக்குள் சென்று தனது தாயாரை தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சோதனையிடப்பட்டது. இதில் சங்கீதா ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வேறு பிரிவிற்கு மாற்றுவது தெரிய வந்தது.

ஆனால் மருத்துவமனை ஆவணங்களில் சங்கீதாவின் படுக்கை எண் மாற்றப்பட்டது குறித்த விபரம் பதிவாகவில்லை. இதனால் ஏதோ குளறுபடி நடந்திருப்பதாக அபய் கருதினார். 19-ம் தேதிதான் சிகிச்சை மையத்தின் முழுமையான குளறுபடி தெரிய வந்தது.

படுக்கை எண் குளறுபடியால் சங்கீதாவின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து, வேறு ஒரு நோயாளியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு சங்கீதா இறந்த பிறகும், அதே குடும்பத்துக்கே தகவல் கொடுக்கபட்டு வரவழைக்கப்பட்டுள்ளனர். இறந்து போன பெண்ணின் மகளை அழைத்து உடலை அடையாளம் காணும்படி மருத்துவ ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அவர் தாய் இறந்த சோகத்தில், பிணவறைக்குள் வந்து பார்க்க மறுத்துவிட்டார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உடலை பாதுகாப்பாக பேக் செய்து கொடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்.

Also Read: மஹாராஷ்டிரா: மது கிடைக்காததால் போதைக்கு சானிடைஸரை குடித்த 7 பேர் பலி!

கொரோனா காரணமாக, இறந்த பெண்ணின் முகம் பெரிதாக தெரியாதபடி மறைக்கப்பட்டிருந்தது. இதனால் யாரும் சரியாக கவனிக்கவில்லை. இறுதிச்சடங்கும் செய்யப்பட்டு விட்டது. ஆனால் உடலை எடுத்து சென்று எரித்தவரின் தாயார் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக, மருத்துவ பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து இறந்து போன சங்கீதாவின் மகன் அபய் கூறுகையில், ``படுக்கை எண்ணை சரியாக பராமரித்து இருந்தால் இந்த குளறுபடி ஏற்பட்டு இருக்காது" என்று ஆதங்கப்பட்டார். உடலை சரியாக அடையாளம் காணாமல் எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளை செய்ததற்காக சங்கீதாவின் குடும்பத்தினரிடம் உடலை எடுத்துச் சென்ற குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டனர்.



source https://www.vikatan.com/news/accident/mumbai-women-accidentally-cremates-corona-dead-mother-of-another-family

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக