Ad

திங்கள், 26 ஏப்ரல், 2021

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கொள்ளை... ஆந்திராவில் அதிரடி... தமிழகத்தில் பரிதாபம்!

கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இடைவிடாது எரியும் சடலங்களும், ஆக்ஸிஜனுக்காக நடக்கும் போராட்டமும் நெஞ்சை உலுக்குகின்றன. அந்தளவுக்கு மோசமாக இல்லையென்றாலும் தமிழகத்தில் நாளுக்குநாள் பாதிப்பின் தீவிரம் அதிகரித்தே வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் கணக்கில்லாமல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழத் தொடங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

கடந்த ஆண்டு, தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டணம் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், ``லேசான அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களிடம் நாளொன்றுக்கு 15,000 ரூபாய் வரையும் வசூலிக்கலாம். அதற்கு மேல் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த அறிவிப்பை பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் துளியும் பொருட்படுத்தவில்லை. அரசு நிர்ணயித்த தொகையைவிடப் பல மடங்கு அதிகமான கட்டணங்கள் வசூலித்ததாக அப்போதே பல புகார்கள் எழுந்தன. ஆனால், தமிழக அரசு அந்தப் புகார்களைத் துளியும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, `எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்’ எனத் தனியார் மருத்துவமனைகள் இஷ்டத்துக்கும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தன. இப்போதும் இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பண பலம் படைத்தவர்கள், `எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும்’ என்று கட்டணத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். வெளியில் சொல்ல முடியாமல் தங்களது சேமிப்பையெல்லாம் அழித்து சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும் இருக்கின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டி

இதுகுறித்துக் கேட்டோமானால், `அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறதே’ என்று மெத்தனமாகப் பதில் சொல்வார்கள் அதிகாரிகள். அல்லது அப்படி எதுவும் புகார் வரவில்லை, வந்தால் நடவடிக்கை எடுக்கிறோம். விசாரிக்கிறோம்’ என்று எதையாவது சொல்லி நழுவிக்கொள்வார்கள். ஆனால், நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் அப்படி அல்ல. இங்குள்ள `அம்மா மருத்துவ காப்பீட்டு திட்டம்’ போல ஆந்திராவில் செயல்பாட்டில் உள்ள `ஆரோக்கியஸ்ரீ’ திட்டத்தின் மூலம் பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவசமாகவே சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்ததுமே கொரோனா சிகிச்சையையும் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தில் சேர்த்தார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த வாரத்தில் அந்தத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறது. ``இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்களுக்கு அரசு செலுத்திய தொகை பெரும்பாலும் சிகிச்சை எடுத்தவரின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமான தொகையாக இருந்திருக்கிறது. அதிதீவிர பாதிப்பில் மோசமான நிலையிலிருந்த நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருத்துவம் வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

உதாரணத்துக்கு, நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான மந்தா ராமையா அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மருத்துவ கட்டணமான 5,87,534 ரூபாயை மாநில அரசு செலுத்தியது. அதேபோல், ஷேக் நஸ் ரீன் என்பவருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 4,68,312 ரூபாய் மருத்துவக் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தனியார் மருத்துவமனைக்கான கட்டணமாக 309 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாக ஆந்திராவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே.கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா - ஆக்ஸிஜன்

Also Read: ஸ்டெர்லைட் இன்றியே நம்மால் சமாளிக்க முடியுமா... ஆக்ஸிஜன் உற்பத்தியில் நடப்பது என்ன? #Explainer

5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்கள் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் மூலம் பலனடைந்து கொள்ளலாம். அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த வருடம் ஆந்திர அரசும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டணத்தை வரையறுத்தது. ஐ.சி.யு- இல்லாமல் வென்டிலேட்டர் வசதி தேவைப்படுவோருக்கு நாளொன்றுக்கு 5,480 ரூபாயும், ஐ.சி.யு வசதியுடன் NIV (Nasal O2, CPAP, BIPAP, HFNO) சிகிச்சை தேவைப்படுவோருக்கு 5,980 ரூபாயும், ஐ.சி.யு-வில் வென்டிலேட்டர் வசதி தேவைப்படுவோருக்கு 9,580 ரூபாயும், sepsis without ventilator-க்கு 6,280 ரூபாயும், sepsis with ventilator-க்கு 10,380 ரூபாயும் septic shock/ MODS with ventilator-க்கு 10,380 ரூபாயும் ஒரு நாள் கட்டணமாக அறிவித்திருந்தது.

ஆனால், தமிழக அரசைப்போலக் கட்டண நிர்ணய அறிவிப்பு வெளியிட்டதோடு தன் கடமை முடிந்தது என ஒதுங்கிக் கொள்ளவில்லை ஆந்திர அரசு. அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளைச் சந்தித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ``தனியார் மருத்துவமனைகள் எக்காரணத்தைக் கொண்டும் அரசு நிர்ணயத்ததைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிக்க முயற்சி செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இது ஆபத்தான காலம்… பேரிடர் காலம். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனை மீது புகார் பதிவு செய்து மூடுவதற்குக்கூட உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதாவது, அந்த மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு

Also Read: கொரோனா உதவி கேட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள்... அவசர காலத்தில் இப்படியும் அவலங்கள்!

அதுமட்டுமல்ல, எந்தத் தனியார் மருத்துவமனையாவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1902 என்கிற எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம். தனியார் மருத்துவமனைகள் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் புகார்களை விசாரிப்பதற்காக அபிஷேக் மொஹந்தி என்ற ஐ.பி.எஸ் அதிகாரியை பிரத்யேகமாக நியமித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. ஒரு கட்டுப்பாட்டை அறிவித்தால் அதை நடைமுறைப்படுத்த இப்படி முனைப்புடன் செயலாற்ற வேண்டும். ஆந்திராவால் முடிகிறது தமிழ்நாட்டால் ஏன் முடியவில்லை?

வெறும் இரண்டு ரூபாய் மாத்திரையில் முடியக்கூடிய சளித்தொல்லையாக இருந்தால்கூட, `உனக்கு கொரோனா... உள்ளே போய் படு' என்று சொல்லி, ஒன்றரை லட்ச ரூபாய், இரண்டரை லட்ச ரூபாய் என ஆளுக்குத் தகுந்தாற்போல பேக்கேஜ் போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன தமிழகத்திலிருக்கும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள். இந்த விஷயங்கள் எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன. இருந்தும் சுகாதாரத்துறையும், அரசும் அரசியல்வாதிகளும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/how-andhra-regulated-pvt-hospitals-in-covid-19-treatment-and-why-tamilnadu-failed-in-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக