Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

மகாராஷ்டிரா: ரூ.100 கோடி லஞ்சப் புகார்; சி.பி.ஐ வழக்கு பதிவு! - சிக்கலில் முன்னாள் அமைச்சர்

மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவரிடம் மும்பையிலுள்ள பார் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சச்சின் வாஸ் இது குறித்து மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங்கிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு வெளியில் பிப்ரவரி 25-ம் தேதி வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்று கூறி பரம்பீர் சிங் கமிஷனர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். கமிஷனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் பரம்பீர் சிங் அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தெரிவித்த 100 கோடி லஞ்சப் புகார் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அனில் தேஷ்முக்

அதோடு நிறுத்தாமல் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட் உயர் நீதிமன்றத்தை அனுகும்படி தெரிவித்துவிட்டது.

அதன்படி மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பரம்பீர் சிங் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தும்படி கூறி சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. இதையடுத்து அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சி.பி.ஐ தனது ஆரம்பகட்ட விசாரணையை 15 நாள்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் சி.பி.ஐ., இது குறித்து பரம்பீர் சிங், சச்சின் வாஸ் ஆகியோரிடம் விசாரித்துவிட்டு இம்மாதம் 14-ம் தேதி அனில் தேஷ்முக்கிடம் வாக்குமூலம் பெற்றது. எட்டு மணி நேரம் நடந்த விசாரணையில் அனில் தேஷ்முக் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

முன்னதாக தேஷ்முக்கின் உதவியாளர் குந்தன் ஷிண்டே, தனிச் செயலாளர் சஞ்சீவ் பாலண்டே ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதால் இதை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க, சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அனில் தேஷ்முக் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அனில் தேஷ்முக், பரம்பீர் சிங்

அதோடு இன்று அதிகாலையிலேயே அனில் தேஷ்முக்குக்குச் சொந்தமான மும்பை, நாக்பூர் இல்லங்கள் உட்பட நான்கு முக்கிய இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சி.பி.ஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் அனில் தேஷ்முக் மட்டுமல்லாமல் மேலும் சிலரது பெயரும் இடம் பெற்றுள்ளன. சி.பி.ஐ தனது ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அடுத்த வார தொடக்கத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது. வழக்கு பதிவு செய்திருப்பதால், மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சி.பி.ஐ மேற்கொள்ளும் என்று தெரிகிறது. விரைவில் அனில் தேஷ்முக் கைதுசெய்யப்படுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே அனில் தேஷ்முக் மீது லஞ்ச ஊழல் புகார் தெரிவித்த மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/rs-100-crore-bribery-scam-cbi-files-case-against-former-maharashtra-minister-anil-deshmukh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக