Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

திருப்பதி, பழநி போன்ற கோயில்களில் நாம் காணிக்கையாக அளிக்கும் முடி என்ன ஆகிறது தெரியுமா?

திருப்பதி, பழனி, திருத்தணி, திருசெந்தூர், திருவண்ணாமலை, சமயபுரம் என பெரிய கோயில்கள் அனைத்திலுமே காலங்காலமாக முடி காணிக்கை கொடுப்பது நிகழ்ந்து வருகிறது. இறைவனுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை. மனிதருக்கு அழகு முடிதான். அதையே கொடுப்பதால் நம்முடைய அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது எனலாம். மேலும் முடி கொடுப்பதால் மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கிவிடுவதாக மனப்பூர்வமாக நம்புகிறோம். முடி இறக்குவது உடல் நலனுக்கும் நல்லதும் கூட. உயிர் ஆற்றல் மேல் நோக்கி எழும்ப தலை முடியை நீக்கிக் கொள்வது நல்லது என்றும் ஆன்மிகம் கூறுகிறது. இப்படி நாம் காணிக்கை அளிக்கும் முடி என்னவாகிறது தெரியுமா? இதன் பின்னால் இருக்கும் வர்த்தகம் மிகவும் பிரமாண்டமானது.

முடி காணிக்கை

நேற்று ஒரு செய்தி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். அது, சீன எல்லை அருகே காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள மனித முடி பறிமுதல் செய்யப்பட்டது என்னும் செய்திதான் அது. உண்மையில் முடி வர்த்தகத்தில் இருக்கும் பண மதிப்பீட்டை அறிந்து கொண்டால் காணிக்கை முடியின் மதிப்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கோயில்களில் காணிக்கையாக நாம் கொடுக்கும் முடி இணைய வர்த்தகத்தில் அபாரப் பண வரவை அளிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சென்ற ஆண்டில் கோயில்கள் லாக்டௌனால் மூடப்பட்டிருந்தபோது பக்தர்கள் முடி காணிக்கை கொடுக்கக் கோயிலுக்கு வரவில்லை. அதனால் முடியின் வரத்து குறைந்ததால், தேவை அதிகமாகிவிட்டது. உலகிலேயே முடி வணிகத்தில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். கூந்தல் பராமரிப்பு மற்றும் அழகு சார் தொழில் துறையின் அபரிமிதமான வளர்ச்சியினால், தரமான முடிகளுக்கான தேவை உலக சந்தையில் அதிகரித்துள்ளது.

உண்மையில் முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் தென் இந்தியர்களிடம்தான் அதிகம் உள்ளது. இதனால் நீளமான, அழகிய, வலுவான முடிகள் ஏற்றுமதி செய்யப்படுவது இங்குதான் எனலாம். என்ன தான் சலூன்களில் ஓரளவு முடிகள் திரட்டப்பட்டாலும் அங்கு பெருமளவு சேருவதில்லை. ஆனால் ஆலயங்களில் பெண்களும் முடி காணிக்கை கொடுப்பதால் அதிகமான அளவுக்கு முடி வர்த்தகப் பயன்பாட்டுக்கு வருகிறது.

முன்பெல்லாம் சவுரி முடி தயாரிக்க, விக் தயாரிக்க மட்டுமே முடி தேவைப்பட்டது. இப்போதும் வீதிகளில் 100 கிராம் முடி 200 ரூபாய்க்கு வாங்கப்படுகின்றன. இது மிக மிக குறைவான விலைதான். இப்போதைக்கு தரம் பிரித்த ஒரு கிலோ முடி 80,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முடியின் நீளம், வலு, நிறம் பொறுத்து விலை தீர்மானமாகிறது.

திருப்பதி ஏழுமலையான்
ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவர் தலையிலிருந்து சராசரியாக 283.5 கிராம் முடி கிடைக்கிறது. இது உலக சந்தையில் 20,000 ரூபாய் மதிப்பு கொண்டதாம். தென் இந்தியாவிலேயே அதிகம் முடி ஏலம் விடப்படுவது திருப்பதியில். பிறகு பழநியில்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், மத்திய அரசுக்கு சொந்தமான எம்.எஸ்.டி.சி. லிமிடெட் நிறுவனம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இணைய தளம் வழியே ஏல முறையில் முடி விற்பனை செய்கிறது. திருப்பதியில் ஆண்டுக்கு 500 டன் அளவுக்கு பக்தர்களால் முடி காணிக்கை வருகிறதாம். இதன் மூலம் ஆண்டுக்கு 300 முதல் 400 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். முடி காணிக்கையின் மதிப்பு ஒட்டு மொத்த திருப்பதி கோயிலின் வருமானத்தில் 10 சதவிகிதம் என்பது குறிப்பிடத் தக்கது.

கூந்தல் பராமரிப்புத் துறையில் விக்குகள் தயாரிக்கும் தொழில் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாகும். சர்வதேச அளவில் முடி வர்த்தகத்தின் மதிப்பு ஒரு ஆண்டுக்கு சுமார், 250 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செல்லும் எனப்படுகிறது. இதில் இந்திய முடியில் தயாரான விக்குகள் பெரும் மதிப்பு கொண்டவை.

விக் தயாரிக்க மட்டுமல்ல, ஹேர் எக்ஸ்டென்சன் எனப்படும் செயற்கையாக முடியை நடும் தொழிலிலும் இயற்கை முடியை பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பயன்படுத்தப்படும் தரமான உயர்வகை முடியின் விலை கிட்டத்தட்ட 3,000 பவுண்டு வரை விலையாகிறது. அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சம் ருபாய்.

இந்திய முடி பயன்படாத துறைகளே இல்லை எனும் அளவுக்கு எல்லா துறையிலும் இந்திய முடிகள் பயன்படுகின்றன என்று கேள்விப்பட்டதும் அதிர்ந்து போனோம்.

அதில் சில...

தலை முடி

திரவ உரங்கள் தயாரிக்கவும், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் கூட முடி பயன்படுகின்றன. தரமான பிரஷ்கள் தயாரிக்க, கட்டுமானத் துறையில் களிமண்/முடி கொண்ட கலவை ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இது கட்டட விரிசலை அதிகம் கட்டுப்படுத்துகிறதாம். தோட்ட வளர்ப்பில் இந்திய முடிகள் அதிகம் பயன்படுகின்றன. முடிகளால் உருவாகும் தரை விரிப்புகள் தோட்டப் பயிர்களை பூச்சிகளிடம் இருந்தும் அதிக உஷ்ணத்தில் இருந்தும் காக்கின்றனவாம்.

கடலில் இருந்து பெறப்படும் கசடு எண்ணெய்யை சுத்தப்படுத்தவும், எண்ணெய் - நீரை பிரிக்கவும் மனித முடி பயன்படுகின்றன. வண்ணங்கள் தயாரிக்கும் துறை, மருந்து தயாரிக்கும் துறையிலும், உலோக சுத்திகரிப்புத் துறையிலும் கூட முடியின் பயன்பாடு வியக்கத் தக்கது. மாறிவரும் உடை அலங்கார நவீன உலகில் உடைகள் தயாரிக்கவும் முடி பயன்படுகின்றது. மேலை நாடுகளில் வீட்டு அலங்காரப் பொருள்கள், இருக்கை போன்ற உபயோகப் பொருள்களிலும் முடிகள் பயன்படுகின்றன. வளர்ப்பு பிராணிகளின் கூடுகள், கைப்பைகள் என பல விதங்களிலும் முடி பயன்படுகின்றன. பொம்மைகள் தயாரிப்பு, அலங்கார கயிறுகளாகவும் குதிரை ஏற்றம் போன்ற பொழுது போக்கு அம்சங்களில் பயன்படுகின்றன.

அலங்கார முடி

சொன்னால் நம்புவீர்களா? சீனா போன்ற நாடுகளில் உணவு உற்பத்தியில் கூட மனித முடிகள் பயன்படுகின்றன. குறிப்பாக விதவிதமான சாஸ்கள் தயாரிக்க பயப்படுகின்றனவாம். அதிக புரதம் கொண்டிருக்கும் முடிகள், அமினோ அமிலங்களை உருவாக்குவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால் சோயா சாஸ் போன்ற உணவு பொருள்கள் தயாரிக்க பெரிதும் உதவுகின்றனவாம்.



source https://www.vikatan.com/spiritual/news/what-happens-to-the-hair-rendered-to-temples-as-a-form-of-prayer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக