இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு, இந்தியாவுடன் துணையாக நிற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்த நாட்டில் வாழும் மக்கள் ட்விட்டர் மூலமாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி தனது கொடூர முகத்தைக் காட்டிவருகிறது. இந்தியாவில், பல்வேறு மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துவருவதுடன், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு இழப்புகளை நாடு எதிர்கொண்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 25 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் மூலம் இறந்துள்ளனர், மேலும் 60 நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த ஆக்ஸிஜன் அழுத்தமே இறப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் புது டெல்லியிலுள்ள பல தனியார் மருத்துவமனைகள் கடந்த நான்கு நாள்களாகத் தங்களது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிரப்பப் போராடிவருகின்றன. அவர்களில் சிலர் நோயாளிகளை மற்ற சுகாதார வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறும் டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன், கொரோனா மருந்துகள், மற்றும் ரெடெசிவிர் ஜாப்ஸ் போன்றவற்றிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறுகையில், மத்திய அரசு இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மருந்துகளைக் கையால்வது குறித்தும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையிலும், கொரோனா பாதித்த நோயாளிகளை மேலாண்மை செய்வது தொடர்பாகவும் தேசிய அளவிலான சட்டத்தை இயற்றும் என நம்பிக்கை தெரிவித்தது.
இந்தநிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவை என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளன. தொடர்ந்து #indianeedsoxygen என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்த நெருக்கடி நிலையைப் போக்குமாறும், இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உதவுமாறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நாட்டு மக்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளனர். பாகிஸ்தானில் இந்த ஹாஷ் டேக் டிரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/pakistan-people-asking-their-pm-in-helping-oxygen-to-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக