மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் இளைஞர்கள் சிலர் பள்ளி மாணவர்களுக்கு மது வாங்கித் தந்து குடிக்கவைத்து, அதை செல்போனில் ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி, பணம், நகைகளைப் பறித்ததோடு, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்திய விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் எஸ்.பி-யிடம் அளித்துள்ள புகாரில், `` எங்கள் 16 வயது மகன், 11- ம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் தன்னுடன் பள்ளியில் படித்த சக நண்பர்கள் இருவருடன் விளையாட சென்றுவந்தான். அப்போது, அவனுக்கு தரங்கம்பாடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகன் சமீர், திடீர்குப்பத்தைச் சேர்ந்த மதி என்பவரின் மகன் அசோக், நகுதா தெருவைச் சேர்ந்த எபினேசர் என்பவரின் மகன் ஆல்வின் ஆகிய இளைஞர்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞர்கள் சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீர் வகை மதுவைக் குடிக்கப் பழக்கி, அதை அவர்களுக்குத் தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை சிறுவர்களின் பெற்றோரிடமும் , சமூக வலைதளங்களிலிலும் காண்பித்துவிடப்போவதாக சிறுவர்களை மிரட்டியும், அடித்துத் துன்புறுத்தியும் உள்ளனர். எங்கள் மகன் மூலம் சுமார் எட்டு சவரன் தங்க நகைகள், ரூ.80,000 ரொக்கம் ஆகியவற்றை வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரச் சொல்லி பங்கு பிரித்து எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், மகனுக்கு வாங்கித் தந்திருந்த ரூ.61,000 மதிப்புடைய ஆப்பிள் ஐ-போனையும் பிடுங்கியிருக்கிறார்கள்.
இதையடுத்து, தகவல் தெரிந்த நாங்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அணுகிக் கேட்டதற்கு போனையும், ரூ.15,000-ஐ மட்டும் திருப்பித் தந்திருக்கிறார்கள். தரங்கம்பாடி பகுதியில் மேலும் இரண்டு பள்ளி மாணவர்களிடம் இதே போன்று செயல்களைச் செய்து பணத்தை பறித்திருக்கின்றனர்.
எனவே, சிறுவர்களுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் மூலமாக வீட்டிலிருந்த நகை, பணத்தைத் திருடியது, திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து, நகை மற்றும் பணத்தை மீட்டுத் தர வேண்டும் "என்று தெரிவித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/social-affairs/education/mayiladuthurai-school-students-blackmailed-with-videos-of-having-liquor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக