Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

மாவோயிஸ்டுகளின் `மாஸ்டர் மைண்ட்' - யார் அந்த மாத்வி ஹித்மா?

ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் அதிகம். ஆயுதப் போராட்டத்தின் மூலமாக நாட்டின் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்ட்களின் லட்சியம். நக்சலைட் என்ற பெயரில் இயங்கிவந்தவர்கள்தான் தற்போது மாவோயிஸ்ட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பாதுகாப்புப் படையினர்

ஆயுதம் ஏந்திப் போராடுவது சட்டவிரோதமானது. ஆகவே, மக்கள் யுத்தக் குழு மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்ற பெயர்களில் செயல்பட்டுவந்த நக்சலைட் இயக்கங்களுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. அதையடுத்து, அவர்கள் 2004-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் புதிதாக ஒரு கட்சியைத் தோற்றுவித்தனர். இதுவும் அரசால் தடைசெய்யப்பட்டது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, குண்டுவைத்து அவரைக் கொலை செய்வதற்கு நக்சலைட்கள் முயற்சி செய்தனர். காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இவர்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளன என்றாலும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்றன.

சந்திரபாபு நாயுடு

மேற்கு வங்கத்தில் புத்ததேவ் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்றபோது, மாவோயிஸ்ட்கள் துணையுடன் தங்கள் கட்சியினர் மீது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர். மேற்கு வங்கத்தில் 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாக, அந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் அதிகமாகவே இருந்தது.

அதேபோல, மாவோயிஸ்ட்களின் தாக்குதல்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக சத்தீஸ்கர் இருந்துவருகிறது. 2010-ம் ஆண்டு தண்டேவாடா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 76 பேர் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அப்போது, சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சியும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் நடைபெற்றன.

அப்போது, மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்கான பல நடவடிக்கைகளை அன்றைய மத்திய உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்டார். ஆனாலும், அதன் பிறகு சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் மீது பல தாக்குதல்களை மாவோயிஸ்ட்கள் நடத்தியிருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சிதம்பரம்

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 3-ம் தேதி) நடைபெற்ற தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உள்பட 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநில அதிரடிப்படை, மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா படை, மாவட்ட ஆயுதப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

மாவோயிஸ்ட்கள் தாக்குதலை ஆரம்பித்தவுடன், ​பாதுகாப்பான இடங்களை நோக்கி படைவீரர்கள் ஓடியிருக்கிறார்கள். தாக்குதலிலிருந்து தப்பிக்க எங்கெல்லாம் படைவீரர்கள் வருவார்கள் என்பதை முன்பே கணித்திருந்த மாவோயிஸ்ட்கள், அங்கு வந்த படைவீரர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தினர். துப்பாக்கியால் மட்டுமல்லாமல், கூர்மையான ஆயுதங்களாலும் அவர்கள் குத்தியிருக்கிறார்கள். பாதுகாப்புப்படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே மூன்று மணி நேரத்துக்கு மேலாக கடும் மோதல் நடைபெற்றுள்ளது .

Also Read: ரூ. 236 கோடி பணம்; 2.90 லட்சம் லிட்டர் மதுபானம் - தேர்தல் ஆணையத்தின் `பறிமுதல்' ரிப்போர்ட்!

சத்தீஸ்கரில் நடைபெற்றுள்ள பெரும்பாலான மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்கு ‘மாஸ்டர் மைண்ட்’ ஆக செயல்பட்டிருப்பவர் மாத்வி ஹித்மா. இவருக்கு சந்தோஷ், இந்துமுல், போதியம் பீம, மணிஷ் என வேறு பெயர்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1990-களில் நக்சலைட் குழுக்களுடன் இணைந்து செயல்பட்ட இவர், பிறகு தானே ஆயுதக்குழுக்களை உருவாக்கியிருக்கிறார்.

2010-ம் ஆண்டு தண்டேவாடா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 76 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர் முக்கியக் குற்றவாளி. அந்த சம்பவத்திலிருந்து சத்தீஸ்கரின் அடர்ந்த காடுகளில் மாத்வி ஹித்மா தலைமறைவாகவே வாழ்ந்துவருகிறார். அவர் கொல்லப்பட்டதாகவும் அவ்வபோது பேசப்பட்டது. ஆனால், அவர் உயிருடன் இருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். அவரது தலைக்கு ரூ. 35 லட்சம் வெகுமதி தரப்படும் என ஏற்கெனவே அரசு அறிவித்தது.

அமித் ஷா

கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய தாக்குதல் சம்பவம் எதுவும் நிகழவில்லை. எனவே, மாவோயிஸ்ட்கள் பலவீனமடைந்துவிட்டனர் என்று பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் அரசு கூறிவந்தது. இந்த நிலையில்தான், தற்போது 22 பேரை பலிகொண்ட தாக்குதல் சம்பவத்தை மாவோயிஸ்ட்கள் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியிருக்கிறார் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா. பதிலடி கொடுப்பதால் மட்டுமே மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு முடிவுகட்டிவிட முடியுமா?



source https://www.vikatan.com/government-and-politics/chattisgarh-maoist-attack-who-is-madvi-hidma

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக