மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளில் 4-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், உள்ளூர் மக்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹர் மாவட்டம், சித்லாகுச்சி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிடிஐ நிறுவனம், கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிதலாகுச்சியில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி மத்திய பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்ததாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் டோலா சென், மத்திய படைகள் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டினார். முதலில் "மாதபங்காவின் (கூச் பெஹர்) தொகுதியில் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர், பின்னர் சிதலாகுச்சி தொகுதியில் நடத்திய தாக்குதலில் , மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்” என்றார்.
மேலும் அவர், ``மத்திய படைகள் மக்களுக்கு அநீதி இழைக்கின்றன. அவர்கள் வரம்புகளை மீறிவிட்டனர். முதல்வர் அவர்களை அழைத்துள்ளார். தேர்தல் கமிஷன், இதுகுறித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளது” என்று மேற்கோள் காட்டினார்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க கோரியுள்ளதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் பாஜக மற்றும் திரிணாமுல் தொழிலாளர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க வினர் சிதல்குச்சி, நடல்பரி, துபங்கஞ்ச், தின்ஹாட்டாவில் உள்ள பல தொகுதிகளில் பிரச்னைகளை ஏற்படுத்த உள்ளதாகவும், அதை திரிணாமுல் கட்சி முகவர்கள் தடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய படைகளின் தாக்குதலை கண்டித்து அதே பகுதியில் நாளை மம்தா பேரணி ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, நாங்கள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தவில்லை என சி.ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு காரணமாக ஒரு சில வாக்குச் சாவடிகளின் வாக்குப்பதிவு நிறுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குபதிவு ஐந்து மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளுக்கு இன்று நடந்து வருகிறது. எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் முடிவுகள் மே 2 ஆம் தேதி, தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் முடிவுகளுடன் அறிவிக்கப்படும்.
source https://www.vikatan.com/news/politics/4-dead-as-central-force-opens-fire-outside-booth-in-west-bengal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக