ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவன் கொல்லப்பட அவனின் மகன் தந்தையின் சொத்துகளைக் கைப்பற்ற முற்படுகிறான். அதற்கு அந்தப் பணம் குறித்த ரகசியம் அறிந்த அவன் தந்தையின் கணக்கை ஒரு கூலிப்படையின் உதவியுடன் கடத்த திட்டமிடுகிறான். அவரையும் அவரின் குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறது ஜாக்கி சானின் தனியார் செக்யூரிட்டி சர்வீஸான 'வேன்கார்ட்'. இறுதியில் யார் வென்றார்கள் என்பதைப் பரபர வேகத்துடன் நிறையச் சண்டைக் காட்சிகளுடன் சொல்லி முடிக்கிறார்கள்.
சீனியர் சிட்டிசன் ஜாக்கி சான்... இந்த ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் இன்னமும் ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்கிறார், சிரிக்க வைக்கிறார், ஓய்வில்லாமல் நடிக்கிறார். 'வேன்கார்ட்'-க்கு பிறகு ஒரு முழுநீளப் படத்தை இயக்கவும் இருக்கிறார். ஐந்துக்கும் மேற்பட்ட புதிய படங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். என்ன வயதானாலும் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுப்பதுதான் குறைந்திருக்கிறதே தவிர, அவரின் டைமிங்கும் அந்த நகைச்சுவை உணர்வும் அப்படியேதான் இருக்கின்றன.
இந்தப் படத்தில் இவருக்குக் கிட்டத்தட்ட இரண்டாம் நாயகன் பாத்திரம்தான் என்றாலும் அந்த ஒரு சில சண்டைக் காட்சிகளிலும் கைத்தட்டலை அள்ளிவிடுகிறார். ஆப்பிரிக்கா காடுகளில் நடக்கும் சண்டைக் காட்சி, அருவியில் நடக்கும் சாகசங்கள், கார் சேஸ், இறுதியில் மாலில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி என எல்லாவற்றிலும் ஜாக்கியைவிட சாகசங்கள் செய்ய இளம்வயது நாயகர்கள் இருப்பினும், நம் கண்கள் ஏனோ ஜாக்கியிடம்தான் செல்கின்றன. இது ஜாக்கி ரைடு!
ஜாக்கியின் 'வேன்கார்ட்' டீமில் நம்மை ஈர்ப்பது இந்த கதையின் நாயகன் யாங் யாங். விடுமுறையை விட்டுவிட்டு கடமையே கண்ணாகக் களத்தில் குதிக்கும் ஹீரோ சண்டை செய்கிறார், ஹீரோயினைக் காப்பாற்றுகிறார், காதலிக்கிறார், சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் என அப்படியே டெம்ப்ளேட்டான வேலைதான்.
ஸ்டன்ட் காட்சிகளில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் 'வேன்கார்ட்' டீமில் இருக்கும் மியா முகி. தன்னைவிட திடகாத்திரமாக இருக்கும் வில்லனின் அடியாட்களிடம் அவர் செய்யும் சண்டை சாகசங்களில் ஒருவித அழகியல்! "அந்தப் பொண்ணுக்கு நான்தான் டிரெய்னிங் குடுத்தேன்" என தன் பாணியில் நகைச்சுவையுடன் ஜாக்கி பெருமை கொள்ளும் காட்சி சிரிப்பொலி!
இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, துபாய் எனப் பல நாடுகளுக்குப் பயணிக்கும் திரைக்கதையில் வேகத்துக்கு எந்த குறையுமில்லை. ஆப்பிரிக்கக் காடுகள், அருவி எனப் பயணிக்கும் டிரோன் ஷாட்கள் பிரமிப்பு! தொடக்கத்தில் அதிரவைக்கும் பின்னணி இசை, பின்னர் ஏனோ அடக்கியே வாசிக்கிறது. ஒரு வரிக்கதையை வைத்துக் கொண்டு ஒன்றரை மணிநேரம் சண்டைக் காட்சிகளை வைத்து நிரப்ப முற்பட்டிருக்கிறார்கள்.
'ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்' டெம்ளேட்தான் என்றாலும் துபாய், தங்கக் கார்கள், பரபர சேஸிங் என அப்படியேவா?! கார் சேஸிங்கின் கோரியோகிராபி நன்றாக இருந்தாலும் கிராஃபிக்ஸில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதுவும் ஆப்பிரிக்காவில் அட்டாக் செய்ய வரும் சிங்கம் எல்லாம்... இங்கேயே நல்லா கிராஃபிக்ஸ் பண்ணுவாங்களே ஜாக்கி?!
ஜாக்கி சானை வைத்து ஏற்கெனவே போலீஸ் ஸ்டோரி 3, 4-ம் பாகங்கள், ஸ்டன்ட் ரீதியாக அவரின் கம்பேக் படங்களான குங்ஃபூ யோகா, சைனீஸ் ஸோடியாக் போன்ற படங்களை இயக்கிய ஸ்டான்லி டாங்க்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ஜாக்கியின் 'போலீஸ் ஸ்டோரி' போன்ற படங்கள் வெற்றி பெறக் காரணம் அதன் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல. அதில் இருக்கும் எமோஷனலான கதை களத்துக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.
'வேன்கார்ட்' கேங்க் பணத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள், கொண்ட மிஷனுக்காக உயிரையே தியாகம் செய்வார்கள் என்றெல்லாம் இந்தப் படத்தில் நிறுவ முயன்றாலும் அதற்கான வலிமையான காட்சியமைப்புகள் ஏதுமின்றி படம் தத்தளிக்கிறது. அதனாலே நம்மால் இந்தப் படத்தை சீரியஸாக அணுகவே முடியவில்லை. முழுக்க முழுக்க ஒரு கேம் ஆடிய ஃபீல் மட்டுமே மிஞ்சுகிறது. அப்ப அப்ப 'தி கராத்தே கிட்' போன்ற படங்களும் பண்ணுங்க ஜாக்கி!
அப்பறம் இன்னும் எத்தனை படங்களுக்கு வில்லன்களை மயக்க பெண்களின் கவர்ச்சியைப் பயன்படுத்த போகிறோமோ?! நாம் 2020-ல் இருக்கிறோம் ஸ்டான்லி!
ஒரு காட்சியில் நாயகன் யாங் யாங் மாலின் மேல் மாடியிலிருந்து கீழே குதிக்கிறார். ஜாக்கியும் பின்னாலேயே குதிக்கத் தயாராகும்போது "எஸ்கலேட்டரிலேயே இறங்கலாமே?" எனக் கேட்கிறார் அருகிலிருக்கும் துபாய் கமேண்டர். ஜாக்கியும் தன் இயல்பான நகைச்சுவையுடன் அதை ஆமோதித்து பின்னாலேயே ஓடுகிறார்.
அப்போதுதான் ஜாக்கி சான் எனும் கலைஞனுக்கு 66 வயது என்பதே உறைக்கிறது... என்ன பண்ண, 90ஸ் கிட்ஸுக்கே கிட்ஸ் பிறந்தாச்சே!
source https://cinema.vikatan.com/international/all-stunts-and-no-story-jackie-chan-vanguard-movie-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக