மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் தின தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எந்த வித பயனும் அளிக்கவில்லை. அதோடு கொரோனா தடுப்பூசி போடுவதும் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் மாநில அரசு கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ரயில்வே நிர்வாகம் 200 ரயில் பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேற்கு ரயில்வே 152 பெட்டிகளையும், மத்திய ரயில்வே 48 பெட்டிகளையும் இதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது. இது தொடர்பாக மேற்கு ரயில்வே பொது மேலாளர் அலோக் கன்சால் அளித்த பேட்டியில், ``152 பெட்டிகள் அனைத்து உபகரணங்களும் பொருத்தப்பட்ட நிலையில் தயாராக இருக்கிறது. மாநில அரசு கேட்டுக்கொண்டால் உடனே 24 மணி நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்” என்று தெரிவித்தார்.
மத்திய ரயில்வே தலைமை மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் இது குறித்து கூறுகையில், ``ஜனவரி மாதமே இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசிடம் தெரிவித்தோம். அவர்களும் குறிப்பிட்ட அளவு பெட்டியை தயார்நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டனர். எனவே ரயில் பெட்டியில் நடுவில் இருக்கும் படுக்கையை அப்புறப்படுத்திவிட்டு ஆக்ஜிசன் சிலிண்டர் உட்பட அனைத்துவிதமான மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. இரண்டு கேபின்களுக்கு இடையே பிளாஸ்டிக் விரிப்பால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் நான்கு கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று குளியல் அறையாகவும் மாற்றப்பட்டுள்ளது” என்றார்.
இந்த ரயில் பெட்டிகள் அவசர காலத்துக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அருகில் உள்ள நகரங்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அரசு உத்தரவிட்டால் 24 மணி நேரத்தில் பெட்டிகளை வழங்கிவிடுவோம் என்றும் தெரிவித்தனர். டெல்லியிலும் இதே போன்று நூற்றுக்கணக்கான ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவை கடைசி வரை பயன்படுத்தப்படவே இல்லை.
இதற்கிடையே மும்பையில் உள்ள வைர மார்க்கெட்டில் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய மார்க்கெட் உரிமையாளர்கள் தேவையான வசதிகளை செய்துள்ளனர். அதோடு யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் பாரத் டைமண்ட் மார்க்கெடில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். தற்போது அதில் 20 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது,
ஆர்.எஸ்.எஸ்.தலைவருக்கு கொரோனா
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நாக்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி மோகன் பகவத் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது தடுப்பூசி இன்னும் போடப்படவில்லை. அவருக்கு தற்போது கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.மரணம்
இதற்கிடையே கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பை மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ராவ்சாஹேப் அந்தாபுர்கர் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். நாண்டெட் மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ராவ்சாஹேப் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து செயற்கை சுவாசம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/india/200-train-carriages-ready-in-mumbai-to-isolate-corona-patients
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக