நாட்டில் கொரோனா தொற்று எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் டேங்கர்களை அனுப்பி வருகின்றன. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இறப்புக்கள் அதிகமாக இருக்கிறது. இது குறித்து டெல்லியில் நிதி அயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் அளித்த பேட்டியில், ``வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று வந்திருந்தால் அந்த நபர் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம். நமது வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணிந்து கொண்டிருக்கும் நேரம் வந்து விட்டது. நாம் வீட்டுக்கு வெளியில் முகக்கவசம் அணிவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதை பார்த்தால் நமது வீட்டில் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் முகக்கவசம் அணிந்து கொண்டிருப்பது நல்லது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர் நிச்சயம் முகக்கவசம் அணியவேண்டும். வீட்டில் இருக்கும் மற்றவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டவரை தனி அறையில் தனிமைப்படுத்தவேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு அறை இல்லாத பட்சத்தில் அரசின் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. அதோடு விருந்தினர்களை வீட்டிற்கு அழைக்கக்கூடாது. கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவது குறைக்கப்படவோ அல்லது சுணக்கமோ ஏற்பட விடமாட்டோம். அரசின் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிக்கொள்கையின் படி கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படுவது விரைவுபடுத்தப்படும்" என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப், ``கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று மக்களிடம் தேவையற்ற பயம் இருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்து லேசான அறிகுறிகள் இருந்தாலும், அவர்களும் தங்களை மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனால்தான் மருத்துவமனையில் தேவையில்லாமல் அதிக கூட்டம் கூடுகிறது. எனவே உண்மையிலேயே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கவேண்டிய கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. மருந்தை பதுக்கி வைப்பதால் தேவையில்லாமல் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இம்மருந்தினால் கொரோனா சிகிச்சைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இம்மருந்து உயிரிழப்பை கட்டுப்படுத்துவதில்லை.
ரெம்டெசிவிர் மருந்தை கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் பக்கவிளைவு ஏற்படும். கொரோனா பாதிப்பு மிதமாக மற்றும் கடுமையாக இருக்கும் போது 5-வது நாளில் இருந்து 7-வது நாட்களுக்குள் பயன்படுத்தலாம். 85 சதவீத கொரோனா மிகவும் லேசானதாகவே இருக்கிறது. எனவே வழக்கமான காய்ச்சல் அல்லது சளிக்கு பயன்படுத்தும் மருந்தை கொண்டே இதற்கு சிகிச்சையளிக்கலாம் என்று தெரிவித்தார். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருந்த கொரோனா எண்ணிக்கையை விட இப்போது அதிகரித்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி கட்டணத்தை குறைக்கும்படி அதனை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களிடமும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு முதல் கொரோனா அலைக்கு மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தது. ஆனால் இரண்டாவது அலை பெரிதாக இருக்காது மத்திய அரசு தவறாக கணக்குப்போட்டுவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/wear-a-mask-inside-the-house-do-not-invite-anyone-into-the-house-federal-government-instruction
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக