Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

நாகை - மயிலாடுதுறை - திருவாரூர் - தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

நாகப்பட்டினம்

அ.தி.மு.க-வில் தங்க.கதிரவனும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆளூர் ஷாநவாஸும் மோதுகிறார்கள். அ.தி.மு.க நகரச் செயலாளரான தங்க.கதிரவனுக்கு மண்ணின் மைந்தர் என்ற முறையில் தொகுதிக்குள் ஆதரவு இருக்கிறது. பணபலமும் கைகொடுக்கிறது. பெரிதும் எதிர்பார்த்திருந்த தொகுதி தங்களுக்குக் கிடைக்காததால், பிரசாரத்தில் தி.மு.க-வினர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வி.சி.க-வுக்கு ஏரியாவில் இருக்கும் கெட்ட பெயரும், பெரிதாகப் பிரபலமில்லாத பானைச் சின்னமும், வெளியூர் வேட்பாளர் என்ற பெயரும் ஆளூர் ஷாநவாஸுக்கு எதிராக இருக்கின்றன. எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இரட்டை இலையே முந்துகிறது.

கீழ்வேளூர் (தனி)

சி.பி.எம் சார்பில் மாலியும், பா.ம.க சார்பில் வடிவேல் ராவணனும் போட்டியிடுகிறார்கள்.கம்யூனிஸ்ட்டுகளுக்குச் செல்வாக்கான ஏரியா, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர், தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டுவருபவர், தி.மு.க கூட்டணி பலம் ஆகியவை மாலிக்குப் பெரும் பலமாக இருக்கின்றன. கிளை அமைப்புகளே இல்லாதது, வெளியூர் வேட்பாளரை நிறுத்தியது ஆகியவை பா.ம.க-வுக்கு மைனஸ். எனவே, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.எம் முந்துகிறது.

வேதாரண்யம்

அ.தி.மு.க-வில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், தி.மு.க-வில் வேதரத்தினமும் மோதுகிறார்கள். கஜா புயல் நேரத்தில் சுவர் ஏறிக் குதித்து தப்பிச் செல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, ஓ.எஸ்.மணியனுக்கு இப்போதும் தொடரவே செய்கிறது. அதோடு அவரின் சொந்த ஏரியாவான தலைஞாயிறு ஒன்றியத்திலும் குடும்பத்தினரின் ஆதிக்கம் காரணமாக எதிர்ப்பு மனநிலையே நிலவுகிறது. இந்தத் தொகுதியில் ஏற்கெனவே மூன்று முறை வென்ற வேதரத்தினத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு. எனவே, உதயசூரியன் முந்துகிறது.

மயிலாடுதுறை

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரும், பா.ம.க-வின் சித்தமல்லி பழனிச்சாமியும் மோதுகிறார்கள். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர் வாக்குகள், தி.மு.க கூட்டணி பலம் ஆகியவை ராஜ்குமாருக்கு பலமாக இருக்கின்றன. பா.ம.க-வுக்குத் தொகுதியில் உள்ள கெட்ட பெயர், தொகுதியில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதது ஆகியவை சித்தமல்லி பழனிச்சாமிக்கு மைனஸ். எனவே, கையே ஓங்குகிறது.

சீர்காழி (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பாரதி மீண்டும் களமிறங்கியிருக்கிறார். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதிகளைக்கூடச் செய்து தரவில்லை என்று வாக்கு கேட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் எதிர்ப்பு வலுக்கிறது. மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த, அனைவருக்கும் நன்கு அறிமுகமான பன்னீர்செல்வம் தி.மு.க சார்பில் களமிறங்கியுள்ளார். தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் தவறாமல் கலந்துகொள்பவர் என்பதால், பன்னீர்செல்வத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது. உதயசூரியனே முந்துகிறது.

பூம்புகார்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பவுன்ராஜும், தி.மு.க-வில் நிவேதா முருகனும் போட்டியிடுகிறார்கள். தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருக்கும் பவுன்ராஜ் மீது கான்ட்ராக்ட், கமிஷன் விவகாரங்களில் சொந்தக் கட்சியினரே ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுவதால், தி.மு.க-வினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஒன்றிய சேர்மனாக இருந்து நற்பெயர் பெற்றவர் என்பது நிவேதா முருகனுக்கு ப்ளஸ். இஸ்லாமியர் வாக்குகளும் சாதகமாக இருப்பதால், உதயசூரியனுக்கே தொகுதி சாதகமாக இருக்கிறது.

மன்னார்குடி

அ.தி.மு.க-வில் சிவா. ராஜமாணிக்கம், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, அ.ம.மு.க-வில் காமராஜ் களத்தில் இருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு அதிருப்தி இல்லாததும், எளிமையான அணுகுமுறையால் மக்களைக் கவர்ந்திருப்பதும் ராஜாவுக்கு ப்ளஸ். தி.மு.க-வின் வாக்குவங்கி பலமாக இருக்கும் இந்தத் தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் பலம், அ.ம.மு.க பிரிக்கும் அ.தி.மு.க வாக்குகள் ஆகிய காரணங்களால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் மன்னார்குடியைத் தக்கவைக்கிறார் ராஜா.

நன்னிலம்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான காமராஜ், தி.மு.க-வில் ஜோதிராமன், அ.ம.மு.க-வில் என்.ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்திருப்பதால், காமராஜுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இது அவருக்கு ப்ளஸ். ஜோதிராமனுக்கும் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதுடன், தி.மு.க கூட்டணியின் வாக்குவங்கியும் பலமாக இருக்கிறது. ஆனாலும் இறுதி ரேஸில் முந்துகிறார் காமராஜ்.

திருத்துறைப்பூண்டி (தனி)

அ.தி.மு.க-வில் சுரேஷ்குமார், சி.பி.ஐ கட்சியில் மாரிமுத்து மோதுகிறார்கள். தி.மு.க., சி.பி.ஐ ஆகிய இரு கட்சிகளுமே பலத்துடன் இருக்கும் தொகுதி என்பதுடன், எளிமையான வேட்பாளர் என்று நல்ல பெயர் இருப்பதும் மாரிமுத்துவுக்கு ப்ளஸ். முத்துப்பேட்டை, கத்திமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 இஸ்லாமியர் வாக்குகள் தி.மு.க-வுக்குச் செல்லும் என்பதும் மாரிமுத்துக்கு ப்ளஸ். சுரேஷ்குமாருக்கு உட்கட்சிப் பூசல்களும் குடைச்சல் தருகின்றன. இவையெல்லாமே மாரிமுத்துவை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் கரை சேர்க்கின்றன.

திருவாரூர்

அ.தி.மு.க-வில் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், எஸ்.டி.பி.ஐ கட்சியில் நஸிமா பானு போட்டியிடுகின்றனர். திருவாரூர் தி.மு.க-வின் கோட்டை என்பது கலைவாணனுக்குப் பெரும் பலம். தொகுதியில் கணிசமாக உள்ள சோழிய வெள்ளாளர் சமூகத்தினரின் வாக்குவங்கி பன்னீர்செல்வத்துக்கு ப்ளஸ். அதேசமயம், அ.ம.மு.க கூட்டணியில் போட்டியிடும் நஸிமா பானு அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பது பன்னீர்செல்வத்துக்கு மைனஸ். தி.மு.க-வின் பலம், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு, பூத்வாரியாகச் செய்திருக்கும் பக்காவான தேர்தல் பணிகளால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூரைத் தக்கவைக்கிறார் பூண்டி கலைவாணன்.

திருவிடைமருதூர் (தனி)

தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கோவி.செழியன், அ.தி.மு.க-வின் யூனியன் வீரமணி மோதுகிறார்கள். இரண்டு முறையுமே பார்டரில் பாஸ் செய்த கோவி.செழியன் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. தொகுதியில் வன்னியர்கள் நிறைந்திருப்பது பா.ம.க-வைக் கூட்டணியில் வைத்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ். அ.ம.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசனும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான புரட்சி மணியும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால், தொகுதியில் இழுபறிநிலைதான்!

கும்பகோணம்

தி.மு.க-வில் மூன்றாவது முறையாக சாக்கோட்டை அன்பழகன், அ.தி.மு.க கூட்டணில் மூவேந்தர் மூன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அன்பழகன் கட்சிப் பாகுபாடின்றி பழகக்கூடியவர். கொரோனா காலத்தில் இவர் செய்த பணிகள், தொகுதி மக்களால் இன்றைக்கும் பேசப்படுவது இவருக்கான ப்ளஸ். சாதிசங்கத் தலைவர் அடையாளம், வெளியூர் வேட்பாளர் என்பதும் தர் வாண்டையாருக்கு மைனஸ். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அ.ம.மு.க-வின் பாலமுருகனும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால் அன்பழகன் முந்துகிறார்.

பாபநாசம்

அ.தி.மு.க-வில் கோபிநாதன், தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி போட்டியிடுகிறார்கள். இஸ்லாமிய வாக்குகளைக் குறிவைத்து ஜவாஹிருல்லா பிரசாரம் செய்தாலும், வெளியூர் வேட்பாளர் என்பது அவருக்கு மைனஸ். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பெரும் ப்ளஸ். மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மகன் அய்யப்பனின் ஆதரவாளர்கள் உள்ளடி வேலை செய்வது கோபிநாதனுக்கு மைனஸ். அ.ம.மு.க-வின் ரெங்கசாமி கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால், ஜவாஹிருல்லா வெற்றிபெறுகிறார்.

திருவையாறு

பி.ஜே.பி-யில் பூண்டி.வெங்கடேசன், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான துரை சந்திரசேகரன், அ.ம.மு.க-வில் வழக்கறிஞர் வேலு.கார்த்திகேயன் ஆகியோரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க-விலிருந்து பி.ஜே.பி-க்குச் சென்ற பூண்டி வெங்கடேசன் தி.மு.க வாக்குகளைப் பிரிக்கிறார். இருப்பினும், பி.ஜே.பி-க்கு எதிரான மனநிலை நிலவுவது இவருக்கு மைனஸ். எம்.எல்.ஏ-வாக இருந்து தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவினாலும், சந்திரசேகரனுக்கு நெகட்டிவ் இமேஜ் கிடையாது. தனிப்பட்ட செல்வாக்குகொண்ட வேலு.காத்திகேயனுக்கு அ.தி.மு.க-வினரின் மறைமுக ஆதரவு இருக்கிறது. வாக்குகள் பிரிவதால், தொகுதியில் சூரியன் உதிக்கிறது.

தஞ்சாவூர்

அ.தி.மு.க-வின் அறிவுடைநம்பி, தி.மு.க-வின் டி.கே.ஜி.நீலமேகம், அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வின் டாக்டர் ராமநாதன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கட்சியினரை அரவணைத்துச் செயல்படுதல் அறிவுடைநம்பிக்கு ப்ளஸ் ஆக இருந்தாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காகக் குடியிருப்புகள் காலிசெய்யப்பட்டதால், மக்கள் மத்தியில் அ.தி.மு.க-வுக்கு அதிருப்தி நிலவுவது மைனஸ். பிரசாரத்தில் நீலமேகம் சுணக்கம் காட்டினாலும், தே.மு.தி.க-வின் ராமநாதன் கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால், தி.மு.க முந்துகிறது.

ஒரத்தநாடு

அ.தி.மு.க சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், தி.மு.க-வில் கடந்த தேர்தலில் அவரைத் தோற்கடித்த எம்.ராமச்சந்திரன், அ.ம.மு.க-வில் மா.சேகர் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தோல்வியடைந்த பிறகு தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வைத்திலிங்கம் மீது இருக்கிறது. எளிமையானவர் என்ற அடையாளம், தொகுதிவாசிகளின் சுக துக்கங்களில் கலந்துகொள்வது ஆகியவை ராமச்சந்திரனின் ப்ளஸ். மா.சேகர் பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பார் என்பதால், ராமச்சந்திரனுக்கே வெற்றி.

பட்டுக்கோட்டை

த.மா.கா-வின் என்.ஆர்.ரெங்கராஜன், தி.மு.க-வின் அண்ணாதுரை ஆகியோர் மோதுகிறார்கள். என்.ஆர்.ரெங்கராஜன் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தும், தொகுதிக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. எளிமையானவர், சாதி, மதம் பார்க்காமல் பழகக்கூடியவர் என்பது அண்ணாதுரையின் ப்ளஸ். அ.ம.மு.க வேட்பாளரான மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் மகன் எஸ்.டி.எஸ்.செல்வம், ம.நீ.ம வேட்பாளரான டாக்டர் சதாசிவம், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பிரிப்பதால் அண்ணாதுரையே முந்துகிறார்.

பேராவூரணி

அ.தி.மு.க-வில் திருஞானசம்பந்தம், தி.மு.க-வில் அசோக்குமார், அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வின் முத்து.சிவகுமார் போட்டியிடுகிறார்கள். திருஞானசம்பந்தம் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தும் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. த.மா.கா-விலிருந்து வந்தவர் என்பதால் அ.தி.மு.க நிர்வாகிகளே உள்ளடி வேலை செய்கிறார்கள். கஜா புயல், கொரோனா நேரத்தில் தன் சொந்தச் செலவில் மக்களுக்கு உதவியவர் என்பது அசோக்குமாருக்கு ப்ளஸ். உட்கட்சி கோஷ்டிப்பூசல் மைனஸ். முத்து.சிவகுமார் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். அதனால், இழுபறிநிலைதான்!



source https://www.vikatan.com/news/election/nagappattinam-mayiladuthurai-tiruvarur-thanjavur-district-assembly-election-survey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக