Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஒன்றல்ல, மூன்று ஃபைனல்ஸ்... 2011 உலகக்கோப்பையை வெல்ல கேப்டன் தோனி என்னவெல்லாம் செய்தார்?! #CWC2011

2003-ம் ஆண்டு கைக்கு அருகில் வந்த உலககோப்பை தவறிப்போக 2011-ம் ஆண்டு மீண்டும் அதேமுறையில் கைக்கு வந்த வாய்ப்பு தவறிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தவர்களை ஆர்ப்பரிக்க வைத்தவர்தான் கேப்டன் தோனி!

ஒரு நாயகன் உதயமாகிறான்!

2007 உலகக்கோப்பையில் இந்தியா, அவமானகரமான தோல்வியைச் சந்தித்து, ரசிகர்களுக்கு, ஜீரணிக்கவே முடியாத வலியைப் பரிசளித்திருந்தது. எனினும் தோனியின் தலைமையிலான, உத்வேகம் உந்தித்தள்ளிய இளைஞரணி, அதே ஆண்டில் டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களை ஆனந்தக்கூத்தாட வைத்தது. எனினும் 50 ஓவர்கள் கோப்பைக்கு மாற்றாக, இன்னொரு 50 ஓவர் கோப்பைதானே இருக்க முடியும்?! அதற்கான மைக்ரோ பிளானிங்கைத்தான், தலைமையேற்ற தருணத்திலிருந்து, அடுத்த நான்கு ஆண்டுகள் தோனி செய்துவந்தார்.

சீனியர் பிளேயர்கள் வெளியேற்றம்!

'பிளேயிங் இட் மை வே' இந்தப் புத்தகம் சச்சினைப் பற்றியதாகவே இருந்தாலும், இந்த வாக்கியம் அச்சுப்பிசகாமல் தோனிக்கும் பொருந்திப் போகும். கோப்பைக்கான காய் நகர்த்தலில், அவர் வெட்டி எறிந்த ராஜாக்கள், எதிரணியுடையதல்ல, இந்தியாவுடையதுதான். டிராவிட், கங்குலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்களின் வாய்ப்பை வாங்கி, அதனை இளைஞர்களின் கையில் கொடுக்க விரும்பினார். காரணம், வயது அதிகமான வீரர்களால், துடிப்பாக ஃபீல்டிங் செய்ய முடியாமல் போக, அதன்பரிசாக, இந்தியா ஒவ்வொரு போட்டியிலும், 20-25 ரன்களை ஃபீல்டிங்கில் வாரிவழங்க, போட்டிகள் கையை விட்டுநழுவ அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இதற்காக சீனியர் பிளேயர்களை வெளியேற்ற வேண்டுமென தோனி வேண்டுகோள் விடுக்க, இதற்குப் பெரிய எதிர்ப்பலையே சுனாமியாய்க் கிளம்பி அச்சுறுத்தியது‌. ஆனாலும் தன்முடிவில் உறுதியாக இருந்த தோனி, இறுதியில் அதை நிகழத்தியும் காட்டினார்.

#CWC2011

கோர் அணியைக் கட்டமைத்தல்!

'மிடாஸ் டச்' எனச் சொல்லப்படும் தொட்டதைத் தங்கமாய், துலங்கச் செய்யும் திறமை தோனியிடம் நிரம்பவே இருந்தது. சூதாட்டப் புகாரினால் சிதைவடைந்த அணியைச் சீர்திருத்தி, உலகக்கோப்பையின் இறுதிவரை கங்குலி அழைத்துச் சென்றதைப்போல், தனக்கான கோர் அணியை, தானே உருவாக்கத் தொடங்கினார் தோனி. உலகக்கோப்பையில் கண்வைத்தே, கோலி, அஷ்வின், ரெய்னா உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட அணியை அவர் கட்டமைத்தார், அந்த அணி அத்தோடு நிற்காமல், கிட்டத்தட்ட அடுத்த பத்தாண்டுகளாய், இந்தியக் கிரிக்கெட் வரலாற்றையே வெற்றிகளாலும், சாதனைகளாலும் எழுதிக் கொண்டுள்ளது.

யுவியும் யூசுஃபும்!

இந்தத் தொடரில், பெரும்பாலான போட்டிகளில், நான்கு முக்கிய பௌலர்களுடன் மட்டுமே களத்தில் இறங்கினார் தோனி. நாக் அவுட் போட்டிகள்‌ உள்பட நடந்த ஒன்பது போட்டிகளில், ஆறு போட்டிகளில், இந்த சூத்திரத்தைத்தான் பயன்படுத்தினார் அவர். அவர்களுக்கு சப்போர்ட்டிங் ரோலாக, ஆல் ரவுண்டர்களாக, ரன்களைக் குவிப்பது மட்டுமின்றி, பந்து வீசுவதையும், யூசுஃப் பதானும், யுவராஜும் பார்த்துக் கொண்டனர். இது பேட்டிங் டெப்த்தை இன்னமும் ஆழப்படுத்த உதவியது, ஏழாவது வீரர் வரை பேட்ஸ்மேன்கள் இருந்தது, விக்கெட்டுக்கான எதிரணி பௌலர்களின் ஓட்டத்தை, நீண்ட நெடியதாக்கியது. அதுமட்டுமின்றி, பௌலிங்கில் வேரியேஷன்களை அவர்கள் கொண்டு வர, அது எதிரணியைத் தாக்கித் தகர்க்கும் வகையில், பௌலிங்படையை பயமேற்படுத்துவதாக மாற்றியது.

பார்ட்டைம் பௌலரிலிருந்து ப்ரைம் பௌலராக!

யுவராஜை இந்தத் தொடரில், ஒரு பௌலராக, மிக அற்புதமாகப் பயன்படுத்தி இருந்தார் தோனி. ஐந்து ஓவர்களாவது போட்டாலே போதுமானது எனக் கருதாமல், யுவராஜை, அவரது 'தி பெஸ்ட்டை' நோக்கி நகர்த்திக் கொண்டே இருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி தவிர்த்து, மற்ற அத்தனை போட்டியிலும், யுவராஜை, ஏழுக்கும் அதிகமான ஓவர்களையே வீச வைத்திருந்தார். குறிப்பாக, நாக் அவுட் போட்டிகள்‌ மூன்றிலுமே, 10 ஓவர்கள் என ஒரு முழு கோட்டாவையும், யுவராஜையே வீச வைத்தார் தோனி. அவரும் தோனியின் நம்பிக்கையைப் பொய்யாக்காது, தொடர் முழுக்க 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான மிகமுக்கிய அரையிறுதிப் போட்டியில், மற்ற நான்கு பௌலர்களோடு, ஐந்தாவது பௌலராக, யுவராஜ் மட்டும் இருந்தார். அவர்களைப் போலவே இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இந்தியாவின் ஆஸ்தான பௌலரான ஜாகீர் கான், தொடரில், 21 விக்கெட்டுகளை எடுத்திருக்க, அவருக்கு அடுத்ததாக தோனி அதிகம் பயன்படுத்தியது யுவராஜைத்தான்!

ஜாகீரும் நக்குல் பாலும்!

இந்தத் தொடரில், தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்த ஜாகீரையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தார், தோனி. குரூப் ஸ்டேஜில், இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக, கோலியின் சிறப்பான ஆட்டத்தால், முதல் வெற்றியைச் சுவைத்திருந்தது. அதற்கடுத்த போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 339 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா, வென்று விடலாம் என நம்பிக் கொண்டிருக்க, ஸ்ட்ராஸ் இந்தியாவின் வெற்றிக்கு முடிவுரை எழுத இருக்கிறேன் என்பதைப்போல, 150 ரன்களையும் கடந்தும் ஆடிக்கொண்டிருக்க, 43-வது ஓவரில், ஒரு பௌலிங் சேஞ்சை அங்கே கொண்டு வந்தார் தோனி. தான் வீசிய அந்தக் குறிப்பிட்ட ஓவரில், நான்காவது பந்தில் பெல்லின் விக்கெட்டை வீழ்த்திய ஜாகீர், ஐந்தாவது பந்திலோ ஸ்ட்ராஸை நக்குல் பால் மூலமாக வெளியேற்றினார். ஏற்கெனவே யார்க்கர் ஸ்பெஷலிஸ்டாக பேட்ஸ்மேன்களின் ஸ்டரைக் ரேட்டைச் சரியச் செய்து கொண்டிருந்த ஜாகீரை, நக்குல் பால்களை, அதிலும் சரியான தருணங்களில் எல்லாம் தோனி வீச வைக்க, வெற்றி வசப்பட்டது.

#CWC2011

ஆஸ்திரேலியாவுக்கான ஆஃப் ஸ்பின் ஆஃபர்!

இந்தத் தொடரில் இதற்கு முன்னதாக, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் மட்டுமே, தோனி, அஷ்வினைப் பயன்படுத்தி இருந்தார். அவர் அப்போதும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அது சென்னையில் நடந்தப்போட்டி.

இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சந்தித்த காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கான ஆபத்து ஆஃப் ஸ்பின்னிங்கில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அஷ்வினை அந்தக் குறிப்பிட்ட போட்டியில் களமிறக்கினார் தோனி. அஷ்வினும் ஏமாற்றாமல், ஸ்லோவான விக்கெட்டுகளில் மிக ஆபத்தானவரான வாட்சனை 25 ரன்களுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், சதத்தைக் கடந்து பயமேற்படுத்திக் கொண்டிருந்த பான்ட்டிங்கையும் வெளியேற்றினார். இந்தப் போட்டியின் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது வாட்சனின் விக்கெட்தான்.

பௌலிங் ரொட்டேஷன்!

இந்தத் தொடர் முழுவதும், பேட்டிங் லைன் அப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யாத தோனி, பௌலிங்கில் ஜாகீர் மற்றும் யுவராஜைத் தவிர்த்து எல்லோரையும் மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருந்தார்‌. நெஹ்ரா, முனாஃப் பட்டேல், ப்யூஷ் சாவ்லா என சூழலுக்குத் தகுந்தாற்போல் வீரர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" - இதுதானே தலைமைப்பண்பின் முதன்மைப் பண்பே! இம்மைதானத்தில், இந்நேரத்தில் இவர் விக்கெட் எடுப்பார் என அறிந்து அவரிடம் தோனி பந்தைக் கொடுக்க, விக்கெட் விழாமல் போகுமா? இந்தத் தொடரில், ஒன்பது போட்டிகளில், மொத்தம் 76 விக்கெட்டுகளை இந்திய பௌலிங் படை வீழ்த்தியிருந்தது. அதிலும் குறிப்பாக, நான்கு முறை எதிரணி வீரர்களை, இந்தியா ஆல்அவுட் செய்திருந்தது கூடுதல் சிறப்பு.

ரெய்னா - தி ஃபினிஷர்!

லீக் போட்டிகளில், யூசுஃப் பதான் விளையாடிக் கொண்டிருந்ததால், ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை‌. ஆறு போட்டிகளில், வெறும் 74 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர், ஒரு விக்கெட்டை மட்டும் வங்கதேசத்துக்கு எதிராக வீழ்த்தி இருந்தார். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், ரிஸ்க் எடுத்து, ரெய்னாவை ஃபினிஷிங் ரோலை ஆட வைத்தார் தோனி. அன்றைய நாளில், 28 பந்துகளில், 34 ரன்களைக் குவித்திருந்தார் ரெய்னா. அஷ்வினை இறக்கியது போல, இதுவும் ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான். ஏற்கனவே இறங்கியிருந்த வீரர்களுக்கு ஆஸ்திரேலியா திட்டங்களை வகுத்து வைத்திருக்க, அவுட் ஆஃப் சிலபஸில், ரெய்னாவைக் கொண்டு வந்தார் தோனி. இதே போல், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், பின்வரிசை வீரராகவே ரெய்னாவை ஆடவைத்தார். 39 பந்துகளில் 36 ரன்களைக் எடுத்து, அணியை வெல்ல வைத்து, இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் ரெய்னா. அவருக்கான சரியான இடத்தில், தோனி ரெய்னாவைப் பொருத்தி வைக்க, இலக்கு எட்டக்கூடியதானது‌.

#CWC2011

மாஸ்டர் மூவ்!

தோனியின் எல்லா ஸ்ட்ராடஜிக்கல் மூவையும் விட மாஸ்டர் மூவ் என்றால், இறுதிப் போட்டியில், தோனி யுவராஜுக்கு முன் களமிறங்கியதுதான். இந்த ஒருவிஷயத்தைப் பற்றிப் பேசாத, வாதம் செய்யாத, கிரிக்கெட் வல்லுனர்களே இல்லையெனுமளவு அத்தனை பேரும் இதனை விமர்சித்தனர். உண்மையில், தன்னால் முத்தையா முரளிதரனின் சுழல் பந்துகளைச் சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்பதற்காகவே. 2007 டு 2011 தோனி, இலங்கையுடன் ஆடிய போட்டிகள் மொத்தம் 29. அதில் அவர் எடுத்த ரன்கள் 1,332. சராசரி, 57. இதில் 12 அரைசதங்களும், ஒரு சதமும் அடக்கம். இதேபோல, 2008 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அஜந்தா மெண்டிஸ் சுழலில் சிக்கி, அனைவரும் ஆட்டமிழக்க தோனி மட்டும் தாக்குப்பிடித்து 49 ரன்கள் எடுத்திருந்தார். 2010 ஆசிய கோப்பை ஃபைனலிலும், தோனி இலங்கையுடன் டூ டவுனாக இறங்கி, நன்றாக ஆடினார். இப்படிப் பல சம்பவங்களைச் செய்த துணிச்சலால் மட்டுமே அவர் முன்வந்து ஆடினாரே ஒழிய, சுய லாபத்துக்காகக் கண்டிப்பாக இல்லை. இந்தத் துணிவான முடிவுக்கு இந்தியா எந்த விலையையும் கொடுக்கவில்லை, மாற்றாக கோப்பையைக் கையகப்படுத்தியது!

கணைகள் செலுத்தும் உளிகள்!

தன்னை நோக்கி எறியப்படும் கணைகளை தன்னைச் செதுக்கும் உளிகளாகக் கருதி அதன்மூலம் சாதனைகளைத் தனதாக்கிக் கொள்வதுதான் தோனியின் பாணி. கோப்பை எனும் பெருங்கனவு மிக எளிதாக வசப்படவில்லை இந்தியாவுக்கு. லீக் போட்டிகளில், ஆறில், நான்கில் வென்று, ஒன்றில் தோற்றில், ஒன்றில் டை செய்திருந்தது. இந்தப் போட்டிகள் அத்தனையிலும், வீரர்கள் தேர்வு சரியில்லை, ஃபீல்டிங் மோசம், பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, மத்திய பின்வரிசை வீரர்கள் மோசமான முறையில் ஆட்டமிழந்தார்கள் என பல விமர்சனங்கள் தோனியின் மீது அக்னிப் பிழம்பாக வீசப்பட்டன. அத்தனைக்குமான பதிலை நாக் அவுட் போட்டிகள் ஒவ்வொன்றிலும் கொடுத்துக் கொண்டே இருந்தார் தோனி.

#CWC2011

ஃபீல்டிங்கில் ஃபயர்!

லீக் சுற்றுகளில் இந்தியா மீது வைக்கப்பட்ட மிக முக்கிய விமர்சனம், ஃபீல்டிங் பற்றியதே. நாக் அவுட் போட்டிகளில், ரெய்னாவை தோனி கொண்டு வந்தது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. யுவராஜ், ரெய்னா, கோலி ஆகிய மூவரும் ஃபீல்டிங்கில் மிகத் துடிப்பாகச் செயல்பட, புத்துயிர் கொண்டது இந்திய ஃபீல்டிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கிட்டத்தட்ட 15 - 20 ரன்கள் எதிரணியின் கணக்கில், கூடுவதை இந்தக் கூட்டணி தடுத்தது. பான்ட்டிங் தங்களது தோல்விக்குக் காரணமாக இருந்தது, இன்னும் ஒரு 15-20 ரன்களைச் சேர்க்கத் தவறியதே என்று சொன்னார். இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம் இந்தியா கணக்கை எப்படி நேர்செய்தது என்று.

பௌலிங் யூனிட் அப்டேட்டட் வெர்ஷன்!

லீக் போட்டிகளில், இந்தியாவின் பௌலிங் பற்றிப் பேசும்போது, ஜாகீர் தவிர்த்து மற்ற யாரும் மேட்ச் வின்னர்கள் இல்லை என பரவலான கருத்து நிலவியது. ஆனால், தோனி, இருக்கும் வீரர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றிக் காட்டினார். முனாஃப் பட்டேலில் இருந்து, அஷ்வின் வரை எல்லோரையும் ஏதோ ஒரு சிறந்த ஸ்பெல்லை சரியான நேரத்தில் வீச வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய பௌலிங் அட்டாக்கைப் பார்த்து அசந்து போன பான்ட்டிங், இந்தியாவின் வேகப்பந்து வீச்சை பாகிஸ்தானுடையதுடன் ஒப்பிட்டுப் பாராட்டி இருந்தார்.

தன்னிகரற்ற தலைவன்!

தவறுகளை ஏற்றுக்கொள்வது, அழுத்தத்தைத் தாக்குப்பிடிப்பது, ஒவ்வொருவரையும் அவர்களது பெஸ்ட்டைக் கொடுக்க வைப்பது, ரிஸ்க் எடுக்க துணிச்சல், விட்டுக் கொடுத்து வெளியேறா மனோதிடம், பொறுப்பை எடுத்துக் கொள்ளுதல், தோல்வியை தன் தலைமேல் போட்டுக் கொள்ளுதல் என தலைமைப் பண்புக்குரிய அத்தனையும் தோனியிடம் இருந்தது. கோப்பையை நோக்கி, அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், கோப்பையை அவரை நோக்கிக் கொண்டு வர வைத்தது.

எல்லா நாடுகளும், ஒரு இறுதிப் போட்டியில் விளையாடும் என்றால், இந்தியா மட்டும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை என மூன்று வலிமையான முன்னாள் சாம்பியன்களுடன் மூன்று இறுதிப்போட்டிகளுக்குச் சமமான சவாலைச் சந்தித்தது. அத்தனை அழுத்தத்தையும் அணிக்குள் கடத்தாமல், தானே உள்வாங்கி, வெற்றிக்கான வித்தாய் மாற்றினார் தோனி. கிரிக்கெட் கடவுள் சச்சின் ''நான் விளையாடிய கேப்டனின்களிலேயே சிறந்த கேப்டன் தோனியே'' என்கிற புகழாரம் சொல்லும் தோனியின் சிறப்பை!



source https://sports.vikatan.com/cricket/how-dhoni-bulit-team-india-for-2011-cricket-world-cup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக