Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மும்பை: கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏ.சி வெடித்து தீ விபத்து! - நோயாளிகள் 13 பேர் உயிரிழப்பு

மும்பை அருகிலுள்ள விரார் என்ற இடத்தில் விஜய் வல்லப் மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. இன்று (23ம்தேதி) அதிகாலை 3 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஏ.சி ஒன்று வெடித்து மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்துக் கேள்விப்பட்டதும் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 5 ;30 மணிக்குத்தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இதற்டையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 13 கொரோனா நோயாளிகள் தீ விபத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் ஆண்கள் 5 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் பலர் தீ விபத்து மூலம் பரவிய புகையால் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 21 நோயாளிகள் அருகிலுள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி டாக்டர் திலிப் ஷா தெரிவித்துள்ளார். இந்தத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

வேறு மருத்துவமனிக்கு நோயாளி மாற்றம்

மாநில அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோரும் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்துவரும் விபத்துகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இரண்டு நாள்களுக்கு முன்புதான் நாசிக் மாநகராட்சி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 24 பேர் உயிரிழந்தனர். இது தவிர பீட் மாவட்டத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே விரார் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்தர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மகாராஷ்டிரா அரசு கொரோனாவைச் சரியாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. இப்போது அடுத்தடுத்து கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்டுவரும் விபத்துகள் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.



source https://www.vikatan.com/news/accident/early-morning-fire-at-hospital-near-mumbai-13-patients-die

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக