Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தோனி vs ரோஹித்... ப்ளேயிங் லெவன் என்ன, ஃபேன்டஸி டீமில் மிஸ் பண்ணக்கூடாதவர்கள் யார்?! #MIvsCSK

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா. முதல் போட்டியில் சென்னையும், மும்பை என இரண்டு வலுவான அணிகள் மோதுகின்றன. நான்கு முறை கோப்பையை வென்றவர்களுக்கும், மூன்று முறை வென்றவர்களுக்கு இடையிலுமான யுத்தம் இது. இரண்டு கேப்டன்களும் முதல் போட்டியில் எந்த வீரர்களையெல்லாம் ப்ளேயிங் லெவனில் வைப்பார்கள், யாரெல்லாம் உங்கள் டிரீம் லெவனில் இருக்கவேண்டும்?!

செம ஃப்ரெஷ் தோனி!

"தோனி செம ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். மனதளவில் மிகவும் ஸ்ட்ராங்காக, ஃபிட்டாக இருக்கிறார்" என்று நேற்று பேட்டியளித்திருக்கிறார் சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங். தோனியே சென்னையின் பலம், நம்பிக்கை. அதனால், தோனி செம பாசிட்டிவிட்டியில் இருக்கிறார் என்பது சென்னைக்கான சந்தோஷச் செய்தி.

Dhoni

மும்பையைப் பொருத்தவரை அவர்களின் ஒரே பலவீனம் அனுபவ ஸ்பின்னர்கள் இல்லாதது மட்டுமே. மற்றபடி பல ஆண்டுகளாக டி20-யில் ஊறிப்போன, சிறப்பாக செட் ஆன டீம் அவர்களிடம் இருக்கிறது. நல்ல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என மிகவும் பலம்வாய்ந்த அணியாக இருக்கிறார்கள்.

கடைசியாக சென்னை மும்பை மோதிய 10 போட்டிகளில் 8 போட்டிகளில் மும்பையே வென்றிருக்கிறது. அதுவும் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் இரண்டு லீக் போட்டிகள், குவாலிஃபையர், இறுதிப்போட்டி என நான்கு முறையுமே சென்னையைத் தோற்கடித்திருக்கிறது மும்பை. அந்த சோகம் இந்த முறையும் தொடரக்கூடாதென்றால் தோனியின் கேம்பிளான் இந்த முறை வேறு மாதிரி இருக்கவேண்டும்.

ப்ளேயிங் லெவன் என்ன?!

மும்பையைப் பொருத்தவரை, "குவின்டன் டி காக்குடன் நான் ஓப்பனிங் ஆடுவேன்" என்று சொல்லிவிட்டார் ரோஹித். அதனால் மும்பையின் பேட்டிங் ஆர்டர் தெளிவாக இருக்கிறது. 1 டவுனில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட் என கடந்த ஆண்டின் பேட்டிங் ஆர்டரை அவர்கள் அப்படியே இந்த ஆண்டும் பயன்படுத்தலாம். இவர்களுக்கு அடுத்தபடியாக க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார் என இரண்டு ஸ்பின்னர்கள். இவர்களுக்கு அடுத்து பும்ரா, நாதன் கூல்ட்டர் நைல் மற்றும் ட்ரென்ட் போல்ட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஸ்பின் பிரச்னையை வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே தீர்க்கலாம் என்பதுதான் மும்பையின் ஐடியா!

Rohit

சென்னையின் ப்ளேயிங் லெவன் என்ன?!

ஹார்ஸஸ் ஃபார் கோர்ஸஸ் என்பதுதான் தோனியின் தியரி. பிட்ச்சின் தன்மையைப் பொருத்து, அன்றைய நாளின் சூழலைப் பொருத்தே ப்ளேயிங் லெவனை தீர்மானிப்பார். ஆனால், தற்போது துபாயில் தங்கியிருக்கும் சென்னை அணி, இன்று மதியம்தான் போட்டி நடக்க இருக்கும் அபுதாபிக்குள்ளேயே நுழைய இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்கு முன்னதாகத்தான் சென்னை அணி ஸ்டேடியத்துக்குள் நுழையும் என்கிறார்கள். அதனால் பிட்சை சரியாகக் கணிக்கக்கூடிய கால அவகாசம் தோனிக்கு இல்லை. ஆனால், ரெய்னாவைத்தவிர தனக்கு எப்போதும் செட்டாகும் ப்ளேயிங் லெவனோடேயே தோனி இன்றும் பயணிப்பார் என எதிர்பார்க்கலாம். ரித்துராஜ் கெய்க்வாட்டுக்கு இன்னும் கொரோனா குணமாகவில்லை என்பதால் அவர் அணித் தேர்வுக்கு இல்லை.

Also Read: #CSK சோதனை மேல் சோதனை... சென்னையை மீண்டும் சாம்பியனாக்குவாரா தோனி?! LEAGUE லீக்ஸ் - 8

டுப்ளெஸ்ஸியும், ஷேன் வாட்சனும்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். ரெய்னா இடத்தில் இந்த முறை அம்பதி ராயுடு இறங்கலாம். நான்காவது வீரராக இந்த முறை தோனியே களமிறங்கலாம். முரளி விஜய் போன்ற முழுமையான பேட்ஸ்மேனா அல்லது ஓரளவுக்கு மிடில் ஓவர்களைத்தாக்குப்பிடித்து ஆடி, ஸ்பின்னும் போடக்கூடிய கேதர் ஜாதவா என்றால் தோனி கேதரையே தேர்ந்தெடுப்பார். அதனால் முரளி விஜய் முதல் மேட்ச்சில் விளையாடுவது கஷ்டம்தான். ஆனால், தோனி எப்போதும் ப்ளேயிங் லெவனில் கடைசிகட்ட சர்ப்ரைஸ்கள் வைத்திருப்பார்.

அதனால் ஜாதவுக்கு பதில் திடீரென விஜய்யே அணிக்குள் நுழையலாம். நான்காவது பேட்ஸ்மேனாக தோனி அடுத்து கேதர், இவருக்கு அடுத்து ட்வெய்ன் பிராவோ, அடுத்து ரவீந்திர ஜடேஜா என்பதுதான் அணியின் ப்ளானாக இருக்கும். ஸ்பின்னைப் பொருத்தவரை இன்று வலது கை லெக் ஸ்பின்னர்களான இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா என இருவருமே ப்ளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள். நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஏற்கெனவே ப்ளேயிங் லெவனில் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி எங்கிடி அணியில் இருக்கமாட்டார். தீபக் சஹார், ஷ்ர்துல் தாக்கூர் இருவரும்தான் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

#MIvsCSK

ஆட்டம் எப்படியிருக்கும்?!

150-160 ரன்கள் என்பதே அபுதாபி பிட்சில் டிஃபெண்ட் செய்யக்கூடியதாக இருக்கும். டாஸ் வென்றால் யோசிக்காமல் பேட்டிங்கைத் தேர்வு செய்யவே இரண்டு அணிகளும் விரும்பும். அதனால் வெற்றிக்கு டாஸ் வெல்வது மிகவும் முக்கியம். பொல்லார்ட்தான் மும்பையின் துருப்புச்சீட்டு. கரீபியன் லீகில் சிக்ஸர்கள் வெளுத்து செம ஃபார்மில் இருக்கிறார். கடந்த ஆண்டின் இறுதிப்போட்டியிலும் பொல்லார்டே சென்னையின் தோல்விக்குக் காரணம். அதனால் பொல்லார்டை சரியான கேம் பிளான் கொண்டு வீழ்த்தவேண்டும். அதேபோல் ஹர்திக் பாண்டியா. இவரை டெத் ஓவர்களில் ஆடவிட்டுவிட்டால் ஆட்டம் கைவிட்டுப் போய்விடும். இவர்கள் இருவரையும் விரைவில் வீழ்த்துவது சென்னைக்கு நல்லது.

உங்கள் ஃபேன்டஸி லெவனில் யாரெல்லாம் இருக்கவேண்டும்?!

டி20 போட்டிகளைப் பொருத்தவரை பெளலர்களுக்குத்தான் அதிக பாயின்ட்டுகள் கிடைக்கும். அதுவும் அரபு பிட்ச்கள் என்பதால் விக்கெட்டுகள் எடுக்கக்கூடிய பெளலர்கள், ஆல்ரவுண்டர்களை உங்கள் டிரீம் லெவனில் வைப்பது அவசியம்.

விக்கெட் கீப்பர்களில் தோனி, டிகாக் என இருவரையுமே அணிக்குள் வைத்துக்கொள்ளலாம். இந்த இருவருமே எப்படியும் 30-40 ரன்கள் அடிக்கக்கூடியவர்கள். பேட்ஸ்மேன்களில் டுப்ளெஸ்ஸியைவிடவும் ராயுடுவை வைத்துக்கொள்வது பலன் தரலாம். இன்னொரு பேட்ஸ்மேன் வாட்ஸன். மும்பையைப் பொருத்தவரை ரோஹித், சூர்யகுமார் யாதவ். இதில் ரோஹித்தை நம்ப முடியாது. 100 ரன்களும் அடிப்பார் இல்லையென்றால் சட்டென டக் அவுட் ஆகியும் கிளம்பிவிடுவார்.

#MIvsCSK

ஆல்ரவுண்டர்கள்தான் கஷ்டமான ஏரியா. பேட்ஸ்மேன்களில் வாட்ஸன், ராயுடு, யாதவ் என மூன்று பேரை மட்டுமே எடுத்துக்கொண்டால் ஆல் ரவுண்டர்களில் பொல்லார்ட், பாண்டியா, ஜடேஜா என மூவரையும் எடுக்கலாம். பேட்ஸ்மேன்கள் நான்கு பேரை எடுத்தால் பொல்லார்டையும், ஜடேஜாவையும் வைத்துக்கொள்ளலாம். பெளலர்களில் தாஹிரும், மும்பையின் ராகுல் சஹாரும் அவசியம். விக்கெட்டுகள் எடுக்கிறாரோ இல்லையோ பும்ரா எக்கனாமிக்கலாக இருப்பார். ஆனால், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் ஓவர்களில் நிச்சயம் 1 விக்கெட்டாவது விழும் என எதிர்பார்க்கலாம். அதனால் இந்த மூவரில் யாரை அணிக்குள் வைப்பது என்பது உங்கள் சாமர்த்தியம்.

டாஸுக்குப் பிந்தைய ப்ளேயிங் லெவனைப் பொருத்து இந்த வீரர்களில் மாற்றம் இருக்கும். அதற்கேற்றபடி அணியைத் தேர்வு செய்யவும்.

வெற்றியோடு ஆரம்பிக்கப்போவது சென்னையா, மும்பையா? உங்கள் கருத்துகளையும், உங்கள் ஃபேன்டஸி லெவனையும் கமென்ட்டில் சொல்லுங்கள்!


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-chennai-super-kings-vs-mumbai-indians-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக