Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தஞ்சாவூர்: `பார்சலில் வந்த வெடிபொருள்கள்; தந்தை, மகன் அதிர்ச்சி!’ - போலீஸ் விசாரணை

ஒரத்தநாடு அருகே இளைஞரான விவசாயி ஒருவருக்கு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய மூலப்பொருள்கள் பார்சலில் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர், தன்னை மிரட்டுவதற்காக வெடிப்பொருள்களை அனுப்பியதாக அந்த இளைஞர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்

ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேற்கு ,வடக்குத் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (27). இவருடைய தந்தை கருணாநிதி. அறிவழகன் பொறியியல் படித்துவிட்டு, தனது தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அறிவழகனுக்கு, திருச்சியிலிருந்து கொரியர் மூலம் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதனை அறிவழகனின் தந்தை பெற்று வீட்டில் வைத்துள்ளார்.

Also Read: சென்னை: ஒரே நாளில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள்! - அதிர்ச்சியில் திமுக, தேமுதிக பிரமுகர்கள்

இதையடுத்து கொரியரில் வந்த பார்சலை பிரித்த அறிவழகன் அதிர்ச்சியடைந்தார். அந்த பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர், உடனடியாக அறிவழகன், தனது தந்தை கருணாநிதியுடன் சேர்ந்து அவற்றை தங்களது தென்னந் தோப்பிலேயே குழிதோண்டி புதைத்தார்.

போலீஸ் விசாரணை

பின்னர், இருவரும் ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் எஸ்.எஸ்.ஐ கணேசமூரத்தி உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்டதுடன், வெடிபொருள்களை கைப்பற்றி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கார்த்திபன்,தென்னுார் ஹைரோடு,10.சி. வெள்ளாளர் தெரு, திருச்சி என்ற முகவரியிலிருந்து அறிவழகனுக்கு பார்சல் வந்துள்ளது. விசாரணையில் அந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. கனெக்டிங் டெட்டனேட்டர் (10கிராம்) மற்றும் ஜெலட்டீன் செல் 19 (125 கிராம்) ஆகிய இரண்டும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களாகும். இவைதான் பார்சலில் வந்துள்ளது. இதனை யார், எதற்காக அறிவழகனுக்கு அனுப்பி வைத்தார்கள் என விசாரணை செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

பார்சலில் வந்த பொருள்

இது குறித்து அறிவழகனிடம் பேசினோம்.``நான் திருச்சி, மன்னார்புரம், கல்லுக்குழியிலுள்ள எல்பின் ஈகாம் பிரைவேட் தனியார் நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். அத்துடன் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சிலரையும் உறுப்பினராக சேர்த்துவிட்டேன். நான் அந்த நிறுவனத்திடம் சுமார் ரூ.54.76 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளேன்.

Also Read: நெல்லை: `தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரமா?’ - டி.ஜி.பி திரிபாதி பதில்

நான் செலுத்திய பணத்துக்கு 10 மாதத்தில் 3 மடங்காக பணம் தருவதாகக் கூறினார்கள். ஆனால், கூறியபடி பணம் வழங்க வில்லை. மேலும், அவர்கள் கொடுத்த செக்கும் திரும்பி வந்து விட்டது. இதனால் நான் சேர்த்து விட்டவர்கள், என்னிடம் பணம் கேட்கத் தொடங்கினர். இதையடுத்து நான், கடந்த 1ம் தேதி தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை எஸ்.பி-யிடம் புகாரளித்தேன்.

வெடிபொருள்

எனக்கு வெடிகுண்டு மூலப்பொருள் பார்சல் அனுப்பியது. தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்தான். நான் பணம் கேட்டு விடக்கூடாது என்று என்னை மிரட்டுவதற்காக வெடிகுண்டு பார்சலை அனுப்பியுள்ளார். எனவே, எங்களுடைய பணத்தை திருப்பிப் பெற்றுத்தர வேண்டும். வெடிகுண்டு பார்சல் அனுப்பியதற்காக அவர் மீது தகுந்த நடவடிக்கையை போலீஸார் எடுக்க வேண்டும்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/orathanadu-youth-receives-bombing-materials-in-parcel-files-police-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக