Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

செங்கோட்டையனுக்கு `டிக்’ முதல் ஈயாடிய துரைமுருகன் வீடு வரை... கழுகார் அப்டேட்ஸ்

அ.தி.மு.க-வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீவிரமாகியிருக்கிறது சசி அண்ட் கோ.

செங்கோட்டையன்

சத்தமில்லாமல் நடக்கின்றன அதிருப்தி அமைச்சர்களின் மீட்டிங். யுத்தம் செய்வதில் பிரசித்திபெற்ற மூத்தவர் ஒருவர் தலைமையில் மூவ்கள் வேகமெடுத்திருக்கின்றன. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், `திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, இப்போ இருக்குற பதவியே போதும்; செங்கோட்டையனை முன்னிறுத்துறதல எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை; எடப்பாடி மாதிரி என்னை டார்ச்சர் பண்ணாம இருந்தா சரி’ என்று வாய்மலர்ந்தாராம் யுத்த பிரமுகர். சசி தரப்பில் செங்கோட்டையன் பெயருக்கு தற்காலிகமாக `டிக்’ அடிக்கப்பட்டிருக்கிறதாம்.

டிக்.... டிக்.... டிக்!

செளகார்பேட்டையில் நம்பர் 2 பிசினஸ் செய்யும் ஒருவருக்குக் கடந்த வாரம் வட மாவட்ட அமைச்சர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அமைச்சரைச் சந்திக்க கிரீன்வேஸ் சாலை வீட்டுக்குச் சென்றிருக்கிறார் நம்பர் 2 பிரமுகர். ``எனக்கு ஒரு வாரத்துக்குள்ள ஒரு பவுன் மதிப்புள்ள ஐந்தாயிரம் தங்கக் காசுகள் வேண்டும். அர்ஜென்ட்” என்று முன்பணமாக, பெரும் தொகை ஒன்றையும் தந்தாராம்.

தங்கக் காசு

இன்றைய தேதிக்கு ஒரு பவுன் தங்க நாணயத்தின் மதிப்பு சுமார் 42,800 ரூபாய். ஐந்தாயிரம் காசுகளுக்கு தொகை இருபது கோடியைத் தாண்டுகிறது. இந்த நாணயங்களைத் தனது தென்னந்தோப்பில் புதைத்துவைத்துவிட்டு, தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறதாம் அமைச்சர் தரப்பு.

சொக்கா... ஒண்ணா, ரெண்டா அஞ்சாயிரம் தங்கக் காசாச்சே!

சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரது சென்னை வீட்டுக்குத் தொண்டர்கள் கூட்டம் குவிந்துவிடும் என்று ஏகப்பட்ட போலீஸாரை வரவழைத்தார்கள்; வீட்டைச் சுற்றிவளைத்து, பேரிகார்டெல்லாம் போட்டு பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தினார்கள். ஆனால், அன்று இரவு வரை காவலர்கள் `தேவுடு காத்ததுதான்’ மிச்சம்.

துரைமுருகனுக்கு வரவேற்பு

தொண்டர் ஒருவர்கூட வந்து எட்டிப்பார்க்கவில்லை. நொந்துபோன துரை, `சரி... கொரோனா பீதியாக இருக்கும்’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டதுடன், தனது ஆதங்கத்தையும் அடிப்பொடிகள் சிலரிடம் கொட்டியிருக்கிறார். ``கவலைப்படாதீங்க தலைவரே... சொந்த ஊர்ல ஜாமாய்ச்சிடலாம்” என்று சொன்ன அடிப்பொடிகள், துரைமுருகன் காட்பாடிக்குச் சென்றபோது ஏகத்துக்கும் கூட்டம் கூட்டி, தடபுடல் வரவேற்பு அளித்து துரைமுருகனை மனம் குளிரவைத்துவிட்டார்களாம்.

இதுவும் துரைமுருகன் தொடர்பான செய்திதான். தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருக்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் வருகின்றன. `விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்பட்சத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்’ என்கிறது ஆளும்தரப்பு. இதில் துரைமுருகனுக்கு என்ன கவலை என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.

துரைமுருகன்

இதை முன்வைத்துப் பேசும் அ.தி.மு.க-வினர், ``ஒரு வருடத்துக்கு முன்பு துரைமுருகன், `திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ஊற்றெடுக்கிறது. மக்களைத் திரட்டி ஊழலைச் சந்தி சிரிக்கவைப்பேன்’ என்று சவால்விட்டார். இப்போது புதுக்கரடியை வெளியே விட்டிருக்கிறார்.

வெள்ளைக்கார துரைங்களைவிட `தொல்லை’க்கார துரையா இருக்காரே!

சசிகலா விடுதலையானவுடன் பெங்களூருக்கே சென்று அவரை மாலை, மரியாதையுடன் வரவேற்று, நூற்றுக்கணக்கான கார்களுடன் கான்வாய் கணக்காக அழைத்துவர பத்து அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ-க்கள் தயாராக இருக்கிறார்களாம். தென் மாவட்ட அமைச்சர் ஒருவர்தான் இந்த வரவேற்புக்குழுவில் முன்னிலையில் இருப்பாராம்.

சசிகலா

சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, ஓர் அமைச்சரின் இல்லத்தில் சசி ஆதரவு அமைச்சர்கள் சந்தித்து, இதுதொடர்பாக ஆலோசித்திருக்கிறார்கள். விரைவில் எடப்பாடிக்கு எதிராக, தனி பிரஸ்மீட் நடத்தவும் திட்டம் இருக்கிறதாம்!

வெளியே வந்தப்புறம் சசி பிஸின்னு சொல்லுங்க!

`சசிகலாவின் தீவிர ஆதரவாளர்’ என்று முத்திரை குத்தப்பட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சில தினங்களுக்கு முன்னர் ``மீண்டும் அ.தி.மு.க ஆட்சியே அமையும். அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சராகத் தொடர்வார்” என்று அறிவித்தார். இது பற்றி நாகப்பட்டினம் மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், ``என்னண்ணே... இப்பிடிச் சொல்லிப்புட்டீங்க?” என்று கேட்கவும், “நாம சும்மா இருந்தாலும் எதையாவது கொளுத்திப் போட்டுடுறாங்கப்பா.

ஓ.எஸ்.மணியன்

அப்புறம் தலைமை நம்மை சந்தேகப்படுது. நமக்கும் ஒரு கூட்டம் இருக்குன்னு காட்டணுமில்லை... அதுக்குத்தான் சும்மா அடிச்சுவிட்டேன்” என்றாராம். ஆனாலும், தலைமை கண்டுகொள்ளவில்லை என்பது தனிக்கதை.

`தனியன்’ இல்லை மணியன்!

சென்னை, அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டடத்துக்கு எதிரில் இருக்கிறது நகர ஊரமைப்பு திட்ட அலுவலகம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நகர ஊரமைப்பு திட்ட இயக்குநராக இருந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு அந்தப் பொறுப்புக்கு அதிகாரியே நியமிக்கப்படவில்லை. இதனால், அங்கு புரோக்கர் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு சென்றால் வழிமறிக்கும் புரோக்கர் கூட்டம், `ஆபீஸர்களையெல்லாம் பார்க்க முடியாது. இங்கே நாங்கதான் ஆபீஸர்!’ என்று அடாவடியாக மிரட்டி கல்லாகட்டுகிறதாம். திட்ட இயக்குநர் பதவி நிரப்பப்பட்டால் கல்லாகட்ட முடியாது என்பதால், அதையும் லாபி செய்து தடுக்கிறதாம் புரோக்கர் கூட்டம். இவர்களுக்கு மேலிடத்தின் ஆசீர்வாதம் இருப்பதால் துறையின் உயரதிகாரி ஒருவரே நடவடிக்கை எடுக்க முடியாமல் கையைப் பிசைகிறாராம்!

ஒட்ட நறுக்கணும்... ஓட விடணும்!

சென்னை, மதுரவாயல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியம்பேடு, அயனம்பாக்கம் பகுதிகளில் எக்ஸ்போர்ட் கம்பெனிகளின் குடோன்கள் ஏராளமாக இருக்கின்றன. பெயருக்குத்தான் அவை எக்ஸ்போர்ட் குடோன்கள். ஆளும்கட்சியினர் ஆசியுடன் சில குடோன்களில் கஞ்சா, குட்கா, வெளிநாட்டு மதுபானங்களைப் பதுக்கிவைக்கிறார்களாம். அங்கிருந்துதான் அவை நகரத்தின் சகல பகுதிகளுக்கும் சப்ளை ஆகின்றன. அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர்தான் எல்லாவற்றையும் சரிக்கட்டிவருகிறார்.

குட்கா

மாதம் பிறந்ததும், கவர்மென்ட் கஜானாவிலிருந்து சம்பளம் வருவதற்கு முன்பாகவே ஸ்டேஷனுக்கு `கனமான’ கவர் கரெக்டாக வந்து சேர்ந்துவிடுவதால், போலீஸாரும் உற்சாகமாக `உறங்கு’கிறார்கள். சமீபத்தில் போதைப் பொருள் தடுப்பு போலீஸார் இந்த லிமிட்டில் டன் கணக்கில் கஞ்சாவைப் பிடித்தனர். இது தொடர்பாக ரிப்போர்ட் அளிக்கப்பட்டதில் இன்ஸ்பெக்டர் இடமாறுதல் செய்யப்பட்டார். ஆனாலும், ரொம்ப தூரத்தில் அவரைப் பணிக்கு அமர்த்தாமல் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆளும்கட்சியினர்.

காவலர்களுக்குத் தேவை கடிவாளம்!

புதிதாகப் பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்துவருகிறார்கள். ஆட்சியர் அலுவலகத்தை, பழைய குற்றாலம் இருக்கும் ஆயிரப்பேரி கிராமத்தில் அமைக்க வேண்டும் என்பது முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆசை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் அவருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்தப் பகுதியில் இந்த இருவர் கூட்டணிக்கு சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. தற்போது அடிமாட்டு விலைக்குப்போகும் அந்த நிலங்கள், ஆட்சியர் அலுவலகம் அமைந்தால் கோடிகளை எட்டும். அதனாலேயே ஆட்சியர் அலுவலகத்தை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாகக் காய்நகர்த்திவருகிறார்கள்.

சிவபத்மநாபன்

அங்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டால், ஏராளமான விவசாய நிலங்களும், குளங்களும் பறிபோகும் என்பதால் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், தி.மு.க மாவட்டச் செயலாளரான சிவபத்மநாபன், `ஆயிரப்பேரியில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கக் கூடாது’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார். இப்போது ஆளும்தரப்பினர் தி.மு.க பிரமுகரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.

இதெல்லாம் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாதப்பா!

Also Read: வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில், குடும்பத்தின் மூத்த மகள் பெர்சிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு கிராம உதவியாளர், அங்கன்வாடி சமையலர் போன்ற பணியிடங்களே ஒதுக்கப்பட்டன.

தூத்துக்குடி போராட்டம்

`பெர்சிக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?’ என்று கொந்தளித்தவர்கள், `எங்களுக்கும் இளநிலை உதவியாளர் பணிக்கு இணையான பணி வேண்டும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளித்தனர். ஆனால், சரியான பதில் கிடைக்காததால், செப்டம்பர் 22-ம் தேதி தூத்துக்குடிக்கு முதல்வர் வரும்போது போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்திருக்கின்றனர்.

உயிரின் மதிப்பு எல்லோருக்கும் ஒன்றுதான்... அதில் பாரபட்சம் வேண்டாமே!

சென்னையை ஒட்டியுள்ள நகராட்சி ஒன்றில் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை... சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராகப் பணிபுரிந்தபோது பெண் ஊழியர் ஒருவருடன் செல்போனில் `எசகுபிசகாக’ பேசி மாட்டிக்கொண்டார் அல்லவா... அவரேதான். அந்தப் புகார் வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஏற்கெனவே `குளுகுளு’ ஏரியாவில் இதே போன்ற குற்றச்சாட்டு அந்த அதிகாரி மீது நிலுவையில் இருக்கிறதாம். இப்போது புதுப் புகார் ஒன்று கிளம்பியிருக்கிறது.

Also Read: வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

இவரது லிமிட்டில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. வேலையே செய்யாமல் மொத்தமாகக் கணக்கு எழுதிவிட்டார்களாம். ``இந்த போஸ்ட்டிங்குக்கு வர்றதுக்கு கொட்டிக் கொடுத்திருக்கேன். போட்ட பணத்தை ரெண்டே மாசத்துல எடுத்துடுவேன்’ என்று சவால்விட்டிருக்கிறாராம் அந்த அதிகாரி.

இதுக்குப் பேருதான் துப்புக்கெட்ட தூரு!



source https://www.vikatan.com/news/politics/sasikala-ticked-minister-sengottaiyans-name-to-duraimurugans-sadness-mr-kazhugar-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக