பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan occupied kashmir - PoK) பகுதியை சேர்ந்த மக்களை பாகிஸ்தான் அரசு மிருகங்களை போல, அடிமைகளை போல நடத்துவதாக ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் Pok சமூக ஆர்வலர் சஜ்ஜாத் ராஜா புகார் அளித்ததோடு ஐ.நா. விடம் உதவி கோரியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது ஜம்மு - காஷ்மீர் மாகாணம், இந்தியா - பாகிஸ்தான் என எந்த நாட்டுடனும் இணையாமல் சுதந்திரமாக இருந்து வந்தது. ஆனால், பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தபோது, இந்தியாவின் உதவியை நாடிய காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிறகு, இந்திய ராணுவம் களம் இறங்கியது.
அன்று முதல் சிறப்பு அந்தஸ்து கொண்ட இந்திய மாநிலமாக காஷ்மீர் மாறிய நிலையில்., ஒருங்கிணைந்த ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ (Pakistan occupied kashmir - Pok) என்று அழைக்கப்படும். ஆசாத் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் சுயாட்சி கொண்ட இரு நிர்வாகப் பிரதேசங்களாக இருந்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் விலங்குகளைப் போலவும் அடிமைகளை போலவும் நடத்துகிறது என்று சஜ்ஜாத் ராஜா ஐ.நா. வில் குற்றம் சாட்டினார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா., சபையின் மனித உரிமை அமைப்பின் 45 வது அமர்வில் , Pok பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தேசிய சமத்துவக் கட்சியின் (ஜே.கே.ஜி.பி.எல்) தலைவருமான பேராசிரியர் முகமது சஜ்ஜாத் ராஜா பேசும்போது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், பாகிஸ்தான் அரசால் விலங்குகளைப் போல நடத்துவதைத் தடுக்குமாறு ஐ.நா. சபையிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தல் சட்டம் 2020 எங்கள் அரசியலமைப்பு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. ஐ.நா தீர்மானங்களை அப்பட்டமாக மீறி பாகிஸ்தானுடன் இணைப்பதை எதிர்க்கும் எங்கள் நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், “நாங்கள் எங்கள் சொந்த வீட்டில் துரோகிகளாக கருதப்படுகிறோம். எங்கள் அரசியல் நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என அறிவிப்பதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நம் மக்களை படுகொலை செய்வதற்கும் காணாமல் போனவர்களாக அறிவிப்பதற்கும் ஒரு அதிகாரத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லையின் இருபுறமும் உள்ள இளம் மனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் மூளைச் சலவை செய்கிறார்கள் என்று பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இந்தியாவுடனான பினாமி போரில் அவர்களை அடிமைகளாக பயன்படுத்துகிறது என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, உலக சிந்தி அமைப்பின் பொது செயலாளர் லகு லுகானா பேசியதாவது: "பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால், சிந்தி மக்கள் காணாமல் போவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும 60 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதத்தை பரப்பும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர்.
பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து ஐ.நா அமைப்பு அவர்களை காப்பாற்றி, தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். பாகிஸ்தான் அரசை பொறுப்பாக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்று கூறினார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/pakistan-treating-us-like-animals-said-by-pok-activist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக