புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி, ஜெயலெட்சுமி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய விண் அறிவியல் போட்டியில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் `நாசா'வுக்கு செல்ல நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 மாணவர்களில், ஜெயலெட்சுமியும் ஒருவர். ஏழ்மை நிலையிலிருந்த ஜெயலெட்சுமிக்கு, அமெரிக்கா செல்வதற்கான பண உதவிகளை மாவட்ட நிர்வாகமும், சில தொண்டு நிறுவனங்களும் செய்தன.
அந்த நேரத்தில்தான், `கிராமாலயா' என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஜெயலெட்சுமிக்கு உதவ முன்வந்தது. ``உங்கள் தேவையைச் சொல்லுங்கள்..." என்று ஜெயலெட்சுமியிடம் தொண்டு நிறுவனத்தினர் கேட்டனர். அதற்கு ஜெயலெட்சுமி, ``அமெரிக்கா செல்லத் தேவையான பண உதவி கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
``சரி, வேறு என்ன உதவி வேண்டும்?' என்று தொண்டு நிறுவனத்தினர் கேட்ட கேள்விக்கு ஜெயலெட்சுமி வைத்த கோரிக்கை, இன்று அவர் கிராமத்தையே முன்மாதிரி ஆக்கியுள்ளது. அம்மக்களின், குறிப்பாக அந்த ஊர்ப் பெண்களின் பல ஆண்டு அவஸ்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
அப்படி என்ன கேட்டார் ஜெயலெட்சுமி?
``எனக்கு என்று எந்தத் தேவையும் இல்லை. ஆனால், எங்கள் கிராமத்திற்கு நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமாக, கழிப்பறைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் ரொம்பவே சிரமப்படுகிறோம். உங்களால் அதற்கு உதவ முடியுமா?" - ஜெயலெட்சுமியின் இந்த வேண்டுகோளிலிருந்து ஆரம்பமானது, ஒரு நல் முயற்சி.
ஜெயலெட்சுமியின் கிராமமான ஆதனக்கோட்டையை முழுவதும் ஆய்வு மேற்கொண்ட `கிராமாலயா' தொண்டு நிறுவனம், அங்கு கழிப்பறை வசதி இல்லாத 125 வீடுகளில், 118 வீடுகளுக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளனர். மீதமுள்ள வீடுகளின் கழிப்பறைகளுக்கான கட்டுமானமும் இன்னும் சில நாள்களில் முடியவிருக்கின்றன. இதுவரை திறந்தவெளிகளைப் பயன்படுத்தி வந்த கிராம மக்களுக்கு, இப்போது அவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை சுகாதாரத்தையும், பாதுகாப்பு உணர்வையும் பரிசளித்துள்ளது.
தன் ஆதனக்கோட்டை கிராமத்தை முன்மாதிரி சுகாதார கிராமமாக மாற்ற முயற்சி எடுத்த ஜெயலெட்சுமிக்கும், `கிராமாலயா' தொண்டு நிறுவனத்துக்கும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜெயலெட்சுமியிடம் பேசினோம்.
``நான் `நாசா' போவதற்கான உதவிகள் செய்றதுக்காகத்தான், `கிராமாலயா' தொண்டு நிறுவன நிறுவனர் தாமோதரன் சார் என்கிட்ட பேசினார். அந்த நேரத்தில எனக்கு பல நல்ல உள்ளங்கள்கிட்டயிருந்தும் நிறைய உதவிகள் கிடைச்சிருந்தது. `வேற என்ன உனக்குத் தேவை இருக்கும்மா?'னு கேட்டாரு. அவர் அப்படிக் கேட்ட நிமிஷம், எங்க ஊருல நானும், என் வயசுப் பிள்ளைகளும், ஊருல இருக்க எல்லா பெண்களும் கழிப்பறை இல்லாததால திறந்தவெளியைப் பயன்படுத்திவந்த அவஸ்தைகள் எல்லாம்தான் சட்டுனு நினைவுக்கு வந்துச்சு.
அதை அவர்கிட்ட சொல்லி, ``எங்க ஊர்ல, கழிப்பறை வசதி இல்லாதவங்களுக்கு அதைக் கட்டிக் கொடுக்க முடியுமா சார்?"னு கேட்டேன். உடனே சார் மலர்ந்துபோய், ``ஏற்படுத்திக்கொடுத்திட்டா போச்சு..."னு சொன்னார்.
நம்பவே முடியல... அடுத்த சில நாள்கள்லேயே `கிராமாலயா'விலிருந்து எங்க ஊருக்கு ஆள்கள் வந்தாங்க. சர்வே எடுத்தாங்க. சிமென்ட், செங்கல்னு வந்து இறங்கிச்சு. சுவர் எழும்புச்சு. கொஞ்ச நாள்ல கழிப்பறை தயாராகிடுச்சு. எனக்கு மட்டுமல்ல... எங்க கிராமத்துக்கே ஆச்சர்யம் விலகல. இப்போ, `கிராமாலயா' குழுவில் நானும் ஒரு மெம்பரா இருக்கேன்.
ஒரு கழிப்பறைக்கான பட்ஜெட் 20,000 ரூபாய். அதற்காக, பேங்க் ஆஃப் அமெரிக்காகிட்ட இருந்து நிதி உதவி (Corporate Social Responsibility நிதி) பெற்றும், ஒவ்வொரு வீட்டினரிடமிருந்தும் அவங்க கழிப்பறைக்கான தளம் அமைக்க ஒரு சிறிய தொகை பெற்றும்னு, அந்தக் செலவுகளைக் கையாண்டாங்க.
குளியலறையுடன் கூடிய கழிவறை இது. ரொம்ப தரமா, நேர்த்தியா கட்டிக்கொடுத்திருக்காங்க. சுற்றுவட்டார கிராமங்கள்ல இப்போ எங்க கிராமம் முன்மாதிரி கிராமமா இருக்கு. `கிராமாலயா'வின் இந்த உதவியை எங்க கிராமத்தினர் எப்பவும் மறக்க மாட்டோம்.
ஒரு நல்ல எண்ணத்துக்கும் முயற்சிக்கும் இத்தனை பெரிய பலன் கிடைச்சிருக்கிறதை பார்த்ததுக்கு அப்புறம், எங்க மொத்த மாவட்டத்தையும் முன்மாதிரி மாவட்டமா ஆக்கணும்ங்கிற அடுத்த இலக்கு பிறந்திருக்கு!"
நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெயலெட்சுமி.
source https://www.vikatan.com/news/general-news/student-jayalakshmis-question-brought-toilet-to-entire-village-homes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக