பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
நாம் அனைவரும் அடிப்படையாகத் தேடுவது பணம் ஒன்று மட்டுமே என்பது நிதர்சனம். ஏனெனில் பணம் பொதுச் செலவாணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதனால், நம் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்யக் கூடிய பொருளாகி விடுகிறது. பணத்தால் வாங்க முடியாதவை, நம் ஒரு கை விரல்கள் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும். மற்றவை யாவற்றுக்கும் பணமே வழி.
பணச்சேர்க்கை விளையாட்டில் பெரும்பாலானோர் தேவைக்காகவே கோதாவில் இறங்குகிறார்கள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல மிகச் சுலபமாக தேவை என்பது போய் ஆசை ஆதிக்கம் கொள்கிறது. ஆசைக்கு அளவு கிடையாது என்பதால் பணத்தேடல் சுழலிலிருந்து மீள்வது கஷ்டம். அது விரைவில் பேராசை அளவில் போக ஆரம்பித்து பல கெட்ட காரியங்களுக்கு வழி வகுக்கிறது. இருக்கிற பணம் போதும் என்று சொல்லக்கூடிய நம் நண்பர்களின் பெயர்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லிவிட முடியும்.
ஏன் நாம் அனைவரும் இந்தக் காகிதத் தேடலில் திருப்தி இல்லாமல் இருக்கிறோம் என்பதை இரண்டு, மூன்று கோணங்களில் பார்க்கலாம்.
பரிணாமத்தின் அடிப்படை தக்கனபிழைத்தல்(Survival of the fittest). நாகரிகத்துக்கு முன்பு, பலம் வாய்ந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் பிழைத்தார்கள். பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின், அந்தப் பணம், பலத்துக்கு இணையாகிவிட்டது. இப்போது பணம் கொண்டவர்கள் பிழைக்கிறார்கள். பணம் பெருக்குதல் நம் பிழைப்புக்கு முதன்மை என்பது முற்றும் சரியே. ஆனால், ஓர் அளவுக்கு மேல் பணம் பிழைப்புக்கு அவசியமில்லை.
உணவு, இருப்பிடம், கல்வி, ஆரோக்கியம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் போக பெரிய வீடு, வாகனம் என்ற ஆடம்பரங்கள் எவரின் பிழைப்புக்கோ, ஆத்மார்த்தமான மகிழ்ச்சிக்கோ பெரிதும் உதவுவதில்லை. இருந்தும் நாம் அதன்பின் ஓடுவது, தக்கனபிழைத்தலின் வெளிப்பாடு.
நாம், நமக்கு அடுத்து இருப்பவரைவிட பலசாலியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கெடுபிடி வந்தால் அவர்தான் பிழைப்பார். நம் கதி, அதோகதி! இந்தப் பரிணாம உந்துதல், கெடுபிடி இல்லாத காலத்திலும் நம்மை ஆதிக்கம் செய்கிறது.
இந்த உள்ளுணர்வுதான் நம் வீட்டின் சதுர அடி அளவை பக்கத்து வீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. நாம் உல்லாச கார் வாங்கியபோது இருந்த உற்சாகம், அடுத்த வீட்டில் அதே மாதிரி ஒரு கார் வந்ததும் சட்டென தொலைகிறது. நேற்று ஓட்டியபோது பெருமையாக இருந்த அதே கார் இன்று சப்பென்று போய்விடுகிறது. இதே போட்டி உணர்வுதான், நம் கல்யாணங்களுக்கு கடன் வாங்கியாவது தடபுடல் விருந்து அளிக்க வைக்கிறது.
இவையெல்லாம் மற்றவர்களுக்கு நாம் காண்பிக்கும் பலம். கெடுபிடி வந்தால், 'நான் பிழைப்பேன், நீ அவ்வளவுதான்!' என்று நாம் அடிக்கும் தம்பட்டம். நமக்குத்தான் தெரியும் நாம் வாங்கிய கடன்.
நாம் அனைவருமே பிழைக்கக்கூடிய வகையில் நாகரிக சமூகம் வளர்ந்து விட்டது. இருப்பினும் நம் பரிணாமப் போட்டி இயல்பு நம்மைவிட்டு நீங்கவில்லை. இது பெரும்பாலும் நம் அறியாமையின் விளைவு.
ஒருவரின் செல்வத்துக்கும் அவர் மனநிலை மகிழ்ச்சிக்கும் இருக்கும் தொடர்பை பலர் ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்களின் தீர்ப்பு...
'ஓர் அளவுவரை செல்வம் மனமகிழ்ச்சியை அதிகரிக்கிறது. ஒருவரின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும்வரை பணம் ஒரு வரம். ஓர் அளவுக்கு மேல் மகிழ்ச்சியின் மேல் பணத்தின் மணம் மறைகிறது.'
இருப்பினும், நாம் செல்வத்தை பிழைப்பிற்கான பலத்துக்கு ஈடாகப் பார்க்கும் வரையில் நமக்குப் போதும் என்ற மனம் வர வாய்ப்பில்லை. இதை உணர்ந்தவர்கள் பொதுநலக் கோட்பாடை(socialism) முன்வைத்தனர். பல நாடுகள் இதை அமல்படுத்த முயன்றபோதும், எங்கும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இதன் முதல் காரணம், இது மனித உள்ளுணர்வுக்கு ஒவ்வாமல் இருப்பதே. அதனால்தான், தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் முதலாளித்துவம்(capitalism) வெல்கிறது.
இந்த அமைப்பிலும் நிறைய ஓட்டைகள். பணம் படைத்தவருக்கு அதைப் பெருக்குவது மிகவும் சுலபம். இல்லாதவருக்கு மிகவும் கடினம். அதனால் பெருத்தவர் மேலும் பெருத்து, சிறுத்தவர் மேலும் சிறுத்துப் போகிறார்கள். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பெரிதாகின்றன. இது வெகுநாள் நீடித்தால் ஒரு புரட்சியில் முடிவடையலாம்.
இந்த வகையில் முதலாளித்துவத்துக்கும், பொதுநலத்துக்கும் இடையே ஒரு சமநிலை கொண்டிருப்பது ஸ்கேண்டிநேவிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க் வகையறா. அவர்கள் பொருளாதார ஒழுங்குமுறைகளை சரிவர கைப்பிடித்து, எல்லா மக்களுக்கும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறுமாறு செய்கின்றனர். அதே நேரம், புதுத்தொழில் தொடக்கம் போன்ற முன்னேற்ற விஷயங்களுக்குத் தடை போடுவதில்லை. அதனால், அங்கு வாழும் மக்கள் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சிகரமானவர்கள் என்று பெயர் பெறுகிறார்கள்.
அமெரிக்காவில் பெரிய கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், நஷ்டம் ஏற்படும்போதும் அதிக சம்பளமும், சன்மானமும் பெறுகிறார்கள். அப்படி இல்லாமல் ஸ்கேண்டிநேவிய தேசங்களில் கொஞ்சம் ஒழுங்குமுறைகள் விதிக்கப்படுகின்றன. ஏற்றத் தாழ்வுகள் சற்றே குறைந்து காணப்படுகின்றன. எல்லா நாடுகளும் அவ்வாறு இருக்க முயலலாம்.
எரிக் பெர்ன்(Eric Berne) என்ற புகழ்பெற்ற மனோதத்துவ மேதை, The Games People Play என்கிற எளிய, அற்புதமான புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் அவர் படைத்த transactional analysis என்கிற மனோதத்துவ முறை மிகவும் பிரபலமாகிவிட்டது.
அதன் அடிப்படை, 'நான் சரி, நீயும் சரி(I am OK, You are OK)' என்கிற மனநிலை. அது தவறி, 'நான் சரி, நீ சரியில்லை(I am OK, You are not OK)' என்கிற மனநிலை வந்துவிட்டால், நாம் பகட்டுச் செலவுகள், நடிப்பு நண்பர்கள் என்று தேர்ந்தெடுத்து அடுத்தவர் கண்களுக்கு நாம் சிறப்பானவர்களாகத் தெரிவதில் கவனம் செலுத்தி நம்மை நாமே ஏமாற்றத் தொடங்கிவிடுகிறோம்.
அடுத்தவர் கணிப்பை சிறிதும் பொருட்படுத்தாது நாம் செய்யும் எந்தக் காரியமும் நமக்கு நீண்ட நாள் மகிழ்ச்சி தருவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாம் என்றும் அடுத்தவருடன் போட்டி போடாத வரையில் மகிழ்ச்சி குறைவதில்லை.
- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி
சான் ஹோஸே, அமெரிக்கா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/secret-of-scandinavians-being-worlds-happiest-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக