Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

மயிலாப்பூர், ராமேஸ்வரம், சதுரகிரி... மகாளய அமாவாசையால் குவிந்த மக்கள்... அரசின் அலட்சியம் ஏன்?

ஒவ்வொரு மாத அமாவாசைக்கும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம். குறிப்பாக, தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையாதலால், ``கொரோனா தொற்று காரணமாக 144 (CrPc) தடை உத்தரவு உள்ளதால், மகாளய அமாவாசை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை), தேவிபட்டிணம் (நவபாஷனம்), மாரியூர் (சாயல்குடி) ஆகிய கடற்கரைகளில் பக்தர்கள் நீராடவோ, தர்ப்பணம் செய்யவோ கூடாது" என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

தர்ப்பணம்

இதேபோல, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பேரிடர் காலத்தில், பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக்கூட தடை விதிக்கப்பட்ட 144 தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று தமிழகமெங்கும் மக்கள் தடை உத்தரவுகளை மீறி பெரும் கூட்டமாகக் கூடியுள்ளனர்.

ராமேஸ்வரம்

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய மற்ற இடங்களை விட, புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானது என்று கருதப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் மகாளய அமாவாசை தினத்தன்று ராமேஸ்வரம் வந்து திதி கொடுத்துவிட்டு, அக்னி தீர்த்தத்தில் நீராடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள சூழலால், திதி கொடுக்கவும் தீர்த்தங்களில் நீராடவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ராமேஸ்வரம் கோயில்

இருந்தபோதிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோயிலுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலையிலிருந்தே ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்த மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. தனிமனித இடைவெளி என்பது இல்லாத சூழலே நிலவியது. கடும் தடை நிலவிய சூழலிலும், அக்னி தீர்த்தம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சிலர் புனித நீராடினர்.

சதுரகிரி

விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷம் போன்ற விசேஷ நாள்களில் மட்டுமே பக்தர்கள் மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஐந்து மாதங்களாகக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்

இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இங்கு, செப்டம்பர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நான்கு நாள்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதலே மலைக்கு மேலே செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. 60 வயதுக்கு அதிகமானோர் மேலே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்வு நடந்தது. விழாக்கோலம் ஒருபக்கமிருக்க, தரிசனத்தின்போது கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள், போலி தரிசன சீட்டு விற்பனை செய்யப்பட்டது, உண்டியல்கள் மறைவான இடங்களில் வைக்கப்பட்டு நேரடி காணிக்கை வாங்கியது, பக்தர்கள் காணிக்கை கொடுத்த பொருள்கள் மாயமானது என்று பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பின.

சயன கோலத்தில் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர்.

அதேபோல இந்த வருடமும் அந்தக் கோயிலைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள் புகைந்துகொண்டிருக்கின்றன. கொரோனா காலத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் எதையுமே பின்பற்றாது இந்தக் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஜூலை 1-ம் தேதி காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் கோயில் அர்ச்சகர்கள் பலருக்குக் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. சில அர்ச்சகர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தும் உள்ளனர். அப்படியிருந்தும், இந்தக் கோயிலை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்துவந்தது.

ஊரடங்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்

இந்நிலையில் நேற்று புரட்டாசி மாதப் பிறப்பு, அதோடு மகாளய அமாவாசை என்பதால், நேற்று காலை முதலே வரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் சுவாமி தரிசனத்துக்கு வந்தது. கோயில் நிர்வாகம் தரப்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

சென்னை

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மகாளய அமாவாசை தினத்தன்று கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் மற்றும் கடற்கரைகளில் மக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுவது சென்னையில்தான்.

கபாலீஸ்வரர் கோயில்

நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் அதிகாலை முதலே பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வந்தனர். நேரம் செல்லச் செல்ல கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் தர்ப்பணம் கொடுக்க அலைமோதியது. அந்தப் பகுதியே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் சூழல் நிலவியது. முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் சமூக இடைவெளி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போனது. இதே நிலைதான் மற்ற பகுதிகளிலும் நிலவியது. காவலர்களும் இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ முன்வரவில்லை. அங்கு போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்யும் பணிகளையே செய்து வந்தனர்.

திருத்தணி, திருவண்ணாமலை, சேலம், வேதாரண்யம், குமுளி போன்ற பல்வேறு இடங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதுதான் மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். இது போன்ற மக்கள் கூட்டங்கள், கட்டுக்குள் இருக்கும் கொரோனா தொற்றைக் கட்டவிழ்த்து விடும் செயலாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சதுரகிரி கோயில் மலைப்பாதை

அதிகரித்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில், பொதுப் போக்குவரத்து முதல் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இதுபோன்ற செயல்கள், குறைந்திருந்த கொரோனா எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வழிவகை செய்யும்.

பொதுவாக, பெருமளவு மக்கள் கூடும் இடங்களில் ஒன்றான, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூடுவது தடுக்கப்பட்டது. இதுபோல இன்னும் சில இடங்களிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்படி அனைத்து இடங்களிலும் கண்டிப்புடன் தடையை அமல்படுத்தாமல், மாற்று வழியும் செய்யாமல், எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் மக்களை ஆயிரக்கணக்கில் கூடவிட்டதற்கு, அரசின் அலட்சியமே காரணம். இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளுக்கும் அரசே பொறுப்பு.



source https://www.vikatan.com/news/temples/social-distancing-norms-violated-in-tamilnadu-temples-during-mahalaya-amavasai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக