Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

காலத்தால் மறக்கப்பட்ட ஒரு ஆளுமை..! - இந்திய முதல் பொதுத்தேர்தலின் பின்னணி #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

15 ஆகஸ்ட் 1947ல் முதல் சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியா ஒருங்கிணைந்து வளர்ந்து செழித்து இன்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நிற்கிறது. தன் 74 வது சுதந்திர தினத்தையும் கொண்டாடித் தீர்த்துவிட்டது. ஏறக்குறைய 200 வருட அதிகாரபூர்வ பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுயராஜ்யம் என்று சொல்லப்படுகின்ற விடுதலை அடைந்த நாள் அது.

ஜனநாயகம் என்பது ஆப்ரஹாம் லிங்கன் சொன்னதுபோல் ''மக்களில், மக்களால், மக்களுக்காக ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துவது''. இதை நடத்திக் காட்ட தேர்தல் என்ற ஒன்று நடந்தாக வேண்டும். வாக்கு செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. ஜனநாயகம் என்ற அமைப்பு நிலைப்பட குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பரந்துவிரிந்த ஒரு நாட்டின் முதல் தேர்தலை 1951ல் சுகுமார் சென் என்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நடத்திக்காட்டினார். காலத்தால் மறக்கப்பட்ட ஒரு மக்கள் நாயகன் சுகுமார் சென்!

சுகுமார் சென்

14 ஆகஸ்ட் 1947:

நாடு ஒரு புதிய விடியலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. இத்தனை வருட சுதந்திர போராட்டத்தின் தாகத்தை அறுவடை செய்யும் நாள் இதோ வந்துவிட்டது. 1915ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா வந்ததிலிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு புது தலைமையும் ஒரு புது நிறமும் அகிம்சை என்ற புது கொள்கையும் கிடைத்தது. நாட்டு மக்களை புற்றீசல் போல் உலகம் இதுவரை கண்டிராத அகிம்சை என்ற புது சித்தாந்தத்தின் வழி காந்தி ஈர்த்தார்.

பலவகை அறவழிப் போராட்டத்தின் மூலமும் சட்ட மறுப்பு போராட்டத்தின் மூலமும் சுதந்திர காற்றை சுவாசிக்க விழைந்த காந்தியும் அன்றைய காங்கிரஸ் இயக்கமும் ஒரு பெரும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெருவெங்கும் தோரணங்கள் கட்டி மக்கள் ஆடிப் பாடி கூத்தாடி சுதந்திரத்தை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தனர்.

அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட் பேட்டனிடமிருந்து அதிகாரம் கை மாறுவதை குறிக்கும் விதமாக அன்றைய இந்திய பிரிமியர் நேரு நாடாளுமன்றத்தில் மக்களை தட்டி எழுப்பும் ஒரு உன்னதமான உரையை, 'Tryst with Destiny' என்ற பெயரில் நிகழ்த்தினார். இருபதாம் நூற்றாண்டில் ஒரு தலைவரால் நிகழ்த்தப்பட்ட முக்கிய உரைகளில் இந்த உரை இன்றும் ஒரு முக்கிய உரையாக பார்க்கப்படுகிறது.

'At the stroke of the midnight hour' என்று நேரு தன்னுடைய வசீகரக் குரலில் பிரகடனப்படுத்தும் பொழுது அதை அன்றைய நாடாளுமன்றத்திற்கு வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மக்கள் புரிந்தும் புரியாமலும் ஆரவாரம் இட்டனர். அப்பொழுதுதான் பிறந்திருந்த புதிய நாடான பாகிஸ்தான் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்பாகவே நாங்கள் எங்களுடைய நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடுவோம் என்று அறிவித்து கொண்டாடி முடித்திருந்தது.

Tryst with Destiny speech

15 ஆகஸ்ட் 1947:

சுதந்திர நாடாக அறிவித்து இந்தியா ஜனநாயக பாதையை மேற்கொள்ளும் என்று சொல்லி இந்திய மூவர்ணக் கொடியை ரெட் ஃபோர்டின் லாகூரி கேட்டின் முகப்பில் ஏற்றி வைத்தார் பிரதமர் நேரு. நாடு பெரும் கொண்டாட்டத்தில் நிலைகொண்டது.


26 ஜனவரி 1950 :

இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த நாள். ஒரு பெரும் இந்திய நாட்டை தட்டி எழுப்பி, தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் அதிகாரத்தை பெற்று, அந்த அதிகாரத்தை சட்டமாகவும் வடித்தாகி விட்டது. அடுத்த மிகப்பெரிய வேலை என்னவென்றால் இந்திய திருநாட்டின் தேர்தலை நடத்தியாக வேண்டும். இந்த மிகப்பெரிய வேலையை நடத்தி காட்டுவதற்காக நேரு அணுகிய நபர்தான் அன்றைய மேற்கு வங்காளத்தின் தலைமை செயலாளர் சுகுமார் சென். கலாச்சார ரீதியாக பூலோக ரீதியாக மொழிவாரியாக வேறுபட்டிருந்த இவ்வளவு பெரிய நாட்டில் முதல் தேர்தலை நடத்தி காட்டுவது என்பது ஒரு மிகப் பெரிய சவால். பாரத நாட்டின் முதல் பொதுத் தேர்தலை இத்தகைய பின்புலத்தில் இருந்து தான் அணுக வேண்டியதாகி உள்ளது.

சுகுமார் சென்னும் இந்திய முதல் பொதுத் தேர்தலும் 1951- 52 :

சுதந்திரம் அடைந்து நான்கு வருடங்களுக்குள் இந்திய திருநாட்டின் முதல் பொதுத் தேர்தலை 1951ல் நடத்தி காட்டினார் அன்றைய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென். 1921ல் ஐசிஎஸ் எனப்படுகிற இந்தியன் சிவில் சர்வீஸில் இணைந்தார் சுகுமார் சென்.

கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியிலும் பின் லண்டன் பல்கலைக்கழகத்திலும் படித்தவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் பல படிநிலைகளில் உயர்ந்தவர் உச்சபட்சமாக 1947ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் மேற்கு வங்காளத்தின் தலைமை செயலாளராக நியமனம் பெற்றார்.

Election

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை வகுத்ததாகட்டும், தேர்தல் ஆணையத்தை ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவியதாகட்டும், தன்னுடைய நுண் கணித அறிவின் மூலம் தேர்தலை நடத்திக் காட்டும் முறைகளை வடிவமைத்ததாகட்டும் எல்லா புகழுக்கும் சொந்தக்காரர் இவர்தான். இன்று பெரும்பாலும் அதிகம் அறியப்படாத, அதிகம் பேசப்படாத பெயர் இவருடையது.

இருபத்தோரு வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்கு என்று அறிவித்து முதல் இந்திய பொதுத் தேர்தலை 1951ல் நடத்தியது என்பது ஒரு மிகப்பெரும் நாவலே எழுதும் அளவிற்கு ஒரு நீண்ட நெடிய பாரதக் கதை.

இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா இதைப் பற்றி தன்னுடைய 'India After Gandhi' ல் விலாவாரியாக விளக்கியுள்ளார்.

இன்றைக்கும் இந்திய பொது தேர்தல் ஐந்து கட்டமாக அல்லது ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தும் இவ்வளவு வசதிகள் இருந்தும் தேர்தல் நடத்துவது என்பது ஒரு பெரும்பாடாக உள்ளது. நிலைமை இன்றும் இப்படி இருக்க, 1951ல் எப்படி இதை சாத்தியப்படுத்தினார்கள் என்பது ஒரு மிகப்பெரும் வியப்பான விஷயம்.

தேர்தல் என்ற ஜனநாயக முறைக்குள் எல்லோரையும் கொண்டு வந்தது ஒருபெரும் மதி நுட்பம் நிறைந்த சிந்தனையின் வெளிப்பாடு. சுதந்திரம் கொடுத்துவிட்டு நம்மைவிட்டு விலகிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்திய முதல் பொதுத் தேர்தலை கிண்டல் செய்யும் தொனியில் தலையங்கம் தீட்டினர். 'இதுதான் ஒருங்கிணைந்த இந்தியாவில் நடக்கும் முதலும் கடைசியுமான பொதுத்தேர்தல்', என்ற வகையில் எழுதப்பட்டது. அதை எல்லாவற்றையும் பொய்யாக்கி இந்தியா இன்றும் தேர்தல் வழி ஜனநாயகப் பாதையை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அடித்தளமிட்ட நிறைய ஆளுமைகளில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஆளுமை சுகுமார் சென்.

Election

1951 பொதுத்தேர்தல் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை சொல்வதற்காக சில எண்களை இங்கே குறிப்பிடலாம். பிரம்மாண்டம் என்பதையும் தாண்டி ஒரு முன் அனுபவமோ அல்லது ஒரு முன்மாதிரியோ இல்லாத ஒரு நிலையில் அன்றைய தேதிக்கு உலகத்தின் மிகப்பெரிய பொதுத் தேர்தல் இது.

21 வயது நிரம்பிய வாக்காளர்கள் மொத்தம் 17.6 கோடி மக்கள். இவர்களில் 85 சதவீதம் பேர் எழுதப்படிக்க தெரியாதவர்கள். அந்த முதல் பொதுத்தேர்தல் 4500 இடங்களுக்கான தேர்தல். இவற்றுள் 489 இடங்கள் லோக்சபா தேர்தலுக்கானது. மீதமுள்ள இடங்கள் மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கானது.

இந்தியாவெங்கும் 2.24 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இவற்றை கண்காணிக்க 56,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

16,500 குமாஸ்தாக்கள் ஆறுமாத ஒப்பந்தத்தில் தங்கள் தங்கள் தொகுதிகளின் வாக்காளர்களின் பட்டியலை தயார் செய்ய நியமிக்கப்பட்டனர். 8,200 டன் இரும்புக் குழம்பில் செய்யப்பட்ட 20 லட்சம் இரும்பு பெட்டிகள் தயார் செய்யப்பட்டன. இந்தப் பெட்டிகளை எல்லா வாக்குச் சாவடிகளிலும் கொண்டுபோய் வைக்க 2.8 லட்சம் வேலையாட்கள் வேலை பார்த்தனர். அவற்றை கண்காணிக்க 2.24 லட்சம் காவல் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர். பெருவாரியான மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் வேட்பாளர்களை அடையாளம் கண்டுகொள்ள கட்சிகளின் தேர்தல் சின்னங்கள் உருவாக்கப்பட்டன.

Election

வாக்குரிமை பெற்ற எல்லா குடிமக்களையும் சந்தித்து வாக்காளர் பட்டியல் சேகரிக்கப்பட்டது. கள்ள ஓட்டை தடுப்பதற்காக மிக ஜாக்கிரதையாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. 3.8 லட்சம் பேப்பர் ரீம்கள் இவற்றை தயார் செய்ய உபயோகப்படுத்தப்பட்டன.

இதில் அக்காலத்தில் பெண்கள் தங்கள் கணவனின் பெயரில்தான் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்கள். கணவன் பெயரையோ அல்லது தந்தை பெயரையோ போட்டு இன்னாரின் மகள் அல்லது மனைவி என்று குறிப்பிடப்படுவார்கள். எடுத்துக்காட்டாக ராஜனின் மனைவி அல்லது சுந்தரின் மகள் என்ற ரீதியிலேயே தங்கள் பெயர்களை பட்டியலில் இணைத்திருந்தார்கள். இவர்களையெல்லாம் இனம் கண்டு கொண்ட சுகுமார் சென் 2.8 கோடி பெண் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கினார். அதனால் இப்பெண்கள் அந்தத் தேர்தலில் வாக்களிக்க கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அதற்குப் பின் நடந்த தேர்தலில் இந்தக் குறைபாட்டை களைந்தார் சுகுமார் சென்.

இவ்வளவு பெரிய நாட்டின் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி 68 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 25 அக். 1951 முதல் 21 பிப். 1952 வரை தேர்தல் நடத்தப்பட்டது. கள்ள ஓட்டை தடுப்பதற்காக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அழிக்கமுடியாத 'மை' முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 3,89,816 Phials of Ink பயன்படுத்தப்பட்டதாக ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற சிறுசிறு நுணுக்கங்களையும் வேலைகளையும் சேர்த்து தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தும் முறை வடிவமைக்கப்பட்டது. இன்றும் இந்திய முதல் பொதுத்தேர்தலை குறித்தும் சுகுமார் சென்னின் சிம்ம சொப்பனத்தை குறித்தும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

சுகுமார் சென்

இவரின் வேலை திறனை பார்த்து வியந்த வட ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடான சூடான் அரசாங்கம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைமைகளை பின்பற்றி அவர்கள் நாட்டின் முதல் தேர்தலையும் நடத்த விழைந்தது. சுகுமார் சென் - ஐ அவர்கள் நாட்டின் தேர்தலை நடத்துவதற்காக சூடான் அழைத்துச் சென்றது. அந்த தேர்தலையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அவரைப் போற்றும் விதமாகவும் இதை நினைவு கூறும் வகையிலும் சூடான் நாட்டில் ஒரு தெருவிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின் 1957ல் இந்தியாவின் இரண்டாவது பொதுத் தேர்தலையும் நடத்தினார் சுகுமார் சென். இந்தத் தேர்தல் இதற்கு முந்தைய தேர்தலை விட இந்திய அரசாங்கத்திற்கு செலவு கம்மியாக பிடித்தது. ஏனெனில், இதற்கு முந்தைய தேர்தலில் உபயோகப்படுத்தப்பட்ட வாக்கு செலுத்தும் பெட்டிகளை மிக பத்திரமாக சுகுமார் சென் பாதுகாத்து வைத்திருந்தார்.

Also Read: பெற்றோர்களின் மனமாற்றம்..! - அரசுப் பள்ளிகள் இனி செய்ய வேண்டியது என்ன? #MyVikatan

நாட்டுக்கு அவர் நிகழ்த்திக் காட்டிய இத்தகைய சேவையை கௌரவிக்கும் விதமாக 1954ல் முதன்முதலாக பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டபோது இவருக்கும் தரப்பட்டது. இன்றும் இந்திய தேர்தல் ஆணையம் சுகுமார் சென் நடத்திக்காட்டிய 1951 தேர்தலை மையமாக வைத்துதான் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்துகிறது.

சுகுமார் சென்னை பற்றி வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கூறும்பொழுது, ‘The man who had to make the election possible, a man who is an unsung hero of Indian democracy.’, என்கிறார்.

ஆளுமைகள் வானத்திலிருந்தெல்லாம் குதிப்பதில்லை. நடைமுறைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நடைமுறை சாத்தியக்கூறுகளையும் புரிந்து கொண்டு,மிக சமயோசிதமாக அதை அணுகி முடிவு எடுப்பவர்களே மிகப் பெரிய ஆளுமைகளாக உருவெடுக்கிறார்கள்.

அதைப் போன்ற ஒரு ஆளுமைதான் திரு. சுகுமார் சென். ஆனால் காலத்தால் மறக்கப்பட்ட ஆளுமை.

- மணிசங்கரன். பா.ந.

நெல்லிக்குப்பம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-sukumar-sen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக