பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பிறருக்கு உணவு அளிப்பது சிறந்ததொரு சேவையாகும். ஆனால் ஒருவர் உணவு உண்பது என்பது ஒரு சேவையாக இருக்க முடியுமா? ஒருவர் எந்த அளவுக்கு உண்கிறாரோ அந்த அளவு அவர், தன் நாட்டிக்குச் சேவை செய்ய முடியுமா? இதனால், நாட்டின் பொருளாதாரம் வளருமா? இப்படியெல்லாம் கூட நடக்குமா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்!
மேற்கண்ட ஆச்சரியமான வினாக்கள் அனைத்திற்கும் "ஆம்" என பதில் அளித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஒரு ஐரோப்பிய நாடு.
"சூரியனே மறையாத நாடு", "கிரேட் பிரிட்டன்" என்றெல்லாம் ஒருகாலத்தில் இந்த நாடு புகழப்பட்ட வரலாறு உண்டு. ஆம்! நீங்கள் ஊகித்தது சரிதான். நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த நாடு இங்கிலாந்துதான்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் உள்ள உணவகங்கள் பல மாதங்கள் மூடப்பட்டன. இந்தப் பேரிடர் காலத்தில் பெரும் சரிவைச் சந்தித்த முக்கியத் துறைகளுள் ஹோட்டல் துறையும் ஒன்று. ஹோட்டல் துறையைச் சரிவிலிருந்து மீட்கும் வகையில் இங்கிலாந்து அரசு "Eat Out to Help Out" என்னும் புதுமையான ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது.
விருந்தோம்பல் வர்த்தகத்திற்கு உதவும் வகையிலும், இத்துறையினை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கத்துடனும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திட்டம்:
ஆகஸ்ட் 3 முதல் 31 வரை இங்கிலாந்து முழுவதும் உள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பப்களில் உணவு வகைகள் மற்றும் மது அல்லாத பானங்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்பதே Eat Out to Help Out திட்டமாகும்.
மக்கள் ஹோட்டல்களில் உணவு அருந்துவதை அதிகரிப்பதன் மூலம் விருந்தோம்பல் துறையினை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ``மக்களே வெளியே சாப்பிடுங்கள்; நாட்டுக்கு உதவுங்கள்" என்கிறது இங்கிலாந்து!
செயல்பாடு:
# 50% உணவுக் கட்டண சலுகை திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்களில் மட்டுமே கிடைக்கும்.
# ஒருவருக்கு தலா 10 பவுண்டு (Pound) மட்டுமே அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கும்.
அதாவது இரண்டு பேர் இணைந்து 100 பவுண்டுகளுக்கு உணவு அருந்தினாலும், அவர்கள் அதிகபட்சம் 20 பவுண்டு தள்ளுபடியை மட்டுமே பெற முடியும்.
# குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரே மாதிரியான தள்ளுபடியே வழங்கப்படும்.
# குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச செலவு பொருட்டில்லை. உதாரணமாக ஒருவர் 6 பவுண்டு மதிப்புக்கு மட்டும் உணவு உண்டால் 3 பவுண்டு செலுத்தினால் போதுமானது. அதாவது உணவின் விலையில் 50% அல்லது 10 பவுண்டு இதில் எது குறைவோ அத்தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.
# ஒருவர் விரும்பும் அளவு பலமுறை இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். ஒரே நாளில் பல உணவகங்களில் சாப்பிடலாம். அதற்குரிய தள்ளுபடியைக் கோரலாம்.
# திட்டத்தைப் பயன்படுத்த மக்களுக்கு எந்தவித வவுச்சரும் தேவையில்லை. உணவகங்களின் பிற சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் இணைந்தும் இதைப் பயன்படுத்தலாம்.
# உணவின் அளவு, தரம் மற்றும் சுவையில் எந்த சமரசமும் செய்யப்படாமல் இருப்பதை உணவுப் பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்துகிறது.
# உரிய சமூக இடைவெளியுடன் உணவகங்கள் இயங்குவது சுகாதாரத் துறையால் உறுதிப்படுத்தப்படுகிறது.
அரசின் சலுகைகள்:
* Eat Out to Help Out கொள்கைக்கு நிதியளிக்க இங்கிலாந்து அரசாங்கம் 500 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது.
* இத்திட்டத்தில் இணைந்த ஹோட்டல்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அதிகபட்சம் ஐந்து வேலை நாள்களுக்குள் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை அரசிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
* இத்திட்டம் விருந்தோம்பல் துறையில் உள்ள 1.8 மில்லியன் ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
* சேவை கட்டணங்களில் எந்தவித தள்ளுபடியையும் கோர முடியாது.
கட்டுப்பாடுகள்:
1) உணவு மற்றும் மது அல்லாத பானங்களுக்கு மட்டுமே தள்ளுபடி பொருந்தும். குளிர்பானங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட தின்பண்டங்களும் இதில் அடங்கும்.
2) உணவினை வீட்டிற்கு வாங்கிச் சென்று உண்பதற்கு இத்திட்டம் பொருந்தாது. சலுகை பெற உணவு ஹோட்டல் வளாகத்தில் உட்கொள்ளப்பட வேண்டும்.
3) புகையிலைப் பொருட்கள், மொபைல் ஃபுட் வேன்களில் விற்கப்படும் உணவுகள், தனியார் கட்சி நிகழ்வுகள், திருமண நிகழ்வு அல்லது செயல்பாட்டின் ஒரு பகுதியாக விற்கப்படும் உணவுகள் அல்லது பானங்கள் ஆகியவற்றிற்கு இத்திட்டம் பொருந்தாது.
4) ஒரு குழுவின் தனிப்பட்ட நபர்களின் உணவிற்கான செலவு எவ்வளவு என்பதைப் பொருட்படுத்தாமல், உணவகங்கள் மொத்த கட்டணத்தில் தள்ளுபடியை வழங்கும். உதாரணமாக ஒருவருக்கு 16 பவுண்டு மதிப்புள்ள உணவிற்கான செலவும் அவரது நண்பருக்கு 25 பவுண்டுகளும் செலவு எனில், உணவகம் இருவருக்கும் சேர்த்து 20 பவுண்டுகளைத் தள்ளுபடி செய்யும்.
5) இத்திட்டத்தில் வணிக வளாக உணவகங்கள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள், பணியிட மற்றும் பள்ளி கேன்டீன்கள் ஆகியவை அடங்கும்.
தேர்வு வாய்ப்புகள்:
அரசாங்க வலைத்தளத்திற்குச் செல்வதன் மூலம் மக்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள, தங்கள் அருகிலுள்ள உணவகங்களைத் தேடலாம். அஞ்சல் குறியீட்டின் அடிப்படையில் ஐந்து மைல் சுற்றளவில் உள்ள உணவகங்களை மக்கள் காணலாம்.
ஜிஸி, பிஸ்ஸா எக்ஸ்பிரஸ், நண்டோஸ், மெக்டொனால்டு மற்றும் பில்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களின் கிளைகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
தனித்தனியாக கட்டணம் செலுத்துவதை விட, மொத்தமாக பில் செலுத்துவது லாபகரமாக இருப்பின் மக்கள் குழுவாக இணைந்து பில் செலுத்தும் வாய்ப்பும் உண்டு.
Also Read: `மருத்துவர்கள் என் இறப்பை அறிவிக்கத் தயாரானார்கள்!’ - கொரோனா நினைவுகளைப் பகிரும் இங்கிலாந்து பிரதமர்
விமர்சனங்கள்:
1) Eat Out to Help Out திட்டத்திற்குச் செய்யப்படும் செலவுகளால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2) மக்களின் உணவு நுகர்வு, தேவையின்றி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
3) தேவையற்ற குப்பை உணவுகளை (Junk food) மக்கள் உண்பது அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
4) உடல் பருமன் உள்ளிட்ட உபாதைகளை இத்திட்டம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
திட்டத்தின் வெற்றி:
1) இங்கிலாந்தின் கருவூல புள்ளி விவரங்களின்படி, முதல் மூன்று வாரங்களில் 64 மில்லியன் முறை இத்திட்டம் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2) இந்தத் திட்டத்தில் 84,000 உணவகங்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளதாக கருவூலத்துறை தெரிவித்துள்ளது.
3) இந்தத் திட்டத்தின் மூலமாக உணவக வாடிக்கையாளர் எண்ணிக்கை 50% க்கும் மேலாக அதிகரித்தது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி இத்திட்டம் ஹோட்டல் துறையில் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4) உணவக முன்பதிவு வலைத்தளமான ஓபன்டேபிள் அறிக்கையின்படி கடந்த வாரம் திங்கள் முதல் புதன்கிழமை வரை இங்கிலாந்து உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 61% அதிகமாகும்.
5) இதுவரை 64 மில்லியனுக்கும் அதிகமான முறை 50% உணவின் விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு நபரும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உணவகங்களில் தொடர்ந்து சாப்பிடுவது உறுதியாகியுள்ளது.
6) ஆகஸ்ட்டில் முடிந்த இந்தத் திட்டத்தினை இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என இங்கிலாந்து அரசுக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
* பணப்புழக்கத்தை அதிகரித்தல்,
* ஹோட்டல் துறையை மேம்படுத்தல்,
* மக்களை உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அம்சங்களுடன் அச்சமின்றி வெளியே வர ஊக்குவித்தல்,
* குறைந்த விலையில் உணவு வழங்குதல்,
* பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான ஒரு முன்னோட்டம் உள்ளிட்ட பல்வேறு பாசிட்டிவ் அம்சங்கள் இந்த Eat Out to Help Out என்னும் ஒரு கண்ணியில் இணைந்துள்ளன.
இங்கிலாந்தின் ஹோட்டல் துறையில் பணிபுரியும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களின் வேலைகளைப் பாதுகாக்க உதவும் "Eat Out to Help Out" முன்மாதிரித் திட்டம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடுமையான பொருளாதாரச் சரிவில் உலகமே சிக்கியிருக்கும் சூழலில், மக்களுக்கோ அல்லது ஹோட்டல்களுக்கோ வெறுமனே பணத்தை அளிக்காமல், வியாபார நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் பணத்தைச் செலவிடும் இங்கிலாந்து அரசின் இந்தப் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை உலகப் பொருளாதார நிபுணர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
இங்கிலாந்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திற்குமே "Eat Out to Help Out" போன்று பல்வேறு திட்டங்கள் தற்போது தேவைப்படுவது காலத்தின் கட்டாயம் தான்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/england-government-plan-to-overcome-loss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக