Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

முதல்வர் ஆதரவு; அ.தி.மு.க எம்.பி எதிர்ப்பு! - மாநிலங்களவையில் நிறைவேறிய வேளாண் மசோதாக்கள்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹர்சிம்ரத் கவுர் பாதல்

மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், இந்த வேளாண் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து இந்த மசோதாகளுக்கு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர்.

Also Read: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு; மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா! - யார் இந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல்?

முதல்வர் ஆதரவு:

இந்த மசோதாக்களுக்கு தமிழக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிராக பேச, அ.தி.மு.க உறுப்பினரான ரவீந்திர நாத் ஆதரித்து பேசியதுடன் ஆதரவாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. முன்னதாக இந்த மசோதாகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆதரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவர் தனது அறிக்கையில், ``வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அரசியலாக்குகிறார். தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளான் திட்டங்கள் உள்ளன. வேளாண் சட்டங்களால் விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் நிறைவேறிய நிலையில், நாளை காலை 9 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்த்த அ.தி.மு.க எம்.பி!

முன்னதாக அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார். `இந்த வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படும்’ எனக் குற்றம்சாட்டினார். நாட்டின் 30% மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்ட எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ``ஒழுங்கு முறை வேளாண் விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடிகிறது. அவற்றை அழிப்பது பெரு நிறுவனங்களுக்கே சாதகமாக இருக்கும்” என்றார்.

வேளாண் பணி

நேற்று மத்திய அரசின் மூன்று புதிய விவசாயச் சட்டங்களுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்தது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாக்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-mp-opposes-centers-agriculture-bills

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக