1822-ம் ஆண்டு... குஜராத் மாநிலத்திலிருக்கும் நவ்சாரி என்கிற ஊரில் நுசர்வன்ஜி பிறந்தபோது, `இந்தப் பையன் பின்னாளில் ஏழு மாடிக் கட்டடம் கட்டி அமோகமாக வாழ்வான்’ என ஜோசியர்கள் கணித்தார்கள். இந்த மாதிரி கணிப்பெல்லாம் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது ஜோசியர்கள் சொல்வதுதான் என ஊரிலிருந்த மூத்தவர்கள் இந்த ஆருடத்தை சாதரணமாக எடுத்துக்கொண்டனர். ஆனால், நுசர்வன்ஜி அவருடைய குடும்ப வழக்கப்படி, கோயிலில் பூசாரியாக ஆக விரும்பவில்லை. அதற்கு மாறாக, தானே சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டுமென்கிற உந்துதலில் 1850-களில் நவ்சாரியை விட்டு பம்பாய்க்குச் சென்றார். அன்று அவர் விதைத்த விதை இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்து தரணியெங்கும் டாடாவின் பரணி பாடிக் கொண்டிருக்கிறது.
நுசர்வன்ஜி ஆரம்பித்த டாடா...
1822-ம் ஆண்டு ஆரம்பித்து 2017-ம் ஆண்டு வரையிலான டாடா குழும வரலாற்றையும், அதன் தலைமைப் பொறுப்பிலிருந்த ஜாம்ஷெட்ஜி நுசர்வன்ஜி டாடாவிலிருந்து இன்றைக்கு இருக்கும் நடராஜன் சந்திரசேகரன் வரை கடந்த 195 வருட காலத்தில் அவர்கள் டாடா குழும கட்டமைப்புக்கும், வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் நாட்டுக்கும் செய்த அரிய, அதிகம் அறியப்படாத பணிகள் குறித்து நேர்த்தியாக ஆதாரங்களுடன் எளிமையாக சொல்லக்கூடிய புத்தகம் `தி டாடாஸ் – ஹவ் எ ஃபேமிலி பில்ட் எ பிசினஸ் அண்ட் எ நேஷன்’ (The Tatas – How A Family Built A Business And A Nation). கிரிஷ் குபேர் மராத்தியில் எழுதிய இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் விக்ராந்த் பாண்டே. அதிலிருந்து சில சுவாரஸ்யப் பக்கங்கள்...
ரூ.40 லட்சம் லாபம்...
நுசர்வன்ஜி பம்பாய்க்கு வந்தபின் காட்டன் வியாபாரத்தில் ஈடுபட்டார். 1839-ம் ஆண்டு அவருக்கும் மனைவி ஜீவன் பாய்க்கும் பிறந்தவர் ஜாம்ஷெட்ஜி. படிப்பில் சூரர். அன்றைக்கு பம்பாய் நகரவாசிகள் நன்கொடை சேர்த்து 2,29,000 ரூபாயில் கட்டப்பட்ட எல்ஃபின்ஸ்டன் (அப்போது பம்பாயின் கவர்னராக இருந்தவரின் பெயர் லார்ட் எல்ஃபின்ஸ்டன்) கல்லூரியில் சேர்ந்து படித்தார். நுசர்வன்ஜியின் மைத்துனரான `தாதாபாய் டாடா’ ஹாங்காங்கில் இருந்த அலுவலகத்தின் மூலம் முத்துகள், வாசனைத் திரவியங்கள் என பல பொருள்களை விற்பனை செய்ய ஆரம்பிக்கையில் பிரான்ஸ் நாட்டுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது. 1868-ம் ஆண்டு அபிசீனியாவுக்கும் பிரிட்டிஷாருக்கும் ஏற்பட்ட போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு உணவு, போர்வைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சம்பந்தப்பட்ட வேலைக்கான ஒப்பந்தம் இவருக்குக் கிடைத்தது. அப்போது காட்டன் வியாபாரத்தில் நொடித்திருந்த நுசர்வன்ஜிக்கு இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 40 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
இது அவரது தொழில் ஆர்வத்தையும் மகன் ஜாம்ஷெட்ஜியின் தொழில் ஆர்வத்தையும் மீண்டும் தூண்டிவிட பம்பாயில் நொடித்துப் போயிருந்த அலெக்சாண்ட்ரியா மில்லை வாங்கி அதை திறம்பட நடத்திவந்தார். அதன்பின் 1877-ம் ஆண்டு `எப்ரஸ் இண்டியா’ என்கிற மில்லை நாக்பூரில் ஆரம்பித்தார்.
தொழிலாளர் நலன் கருதி முதன்முதலாக பிராவிடண்ட் ஃபண்ட், தொழிலாளர்களுக்கான காப்பீடு ஆகிய திட்டங்களையும், குடும்ப தினம், விளையாட்டு தினம் என பல நிகழ்வுகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல பரிசுகள் அளிக்கப்படுவதை வழக்கத்துக்குக் கொண்டு வந்து தொழில்துறையில் புதுமை ஏற்படுத்தினார்.
அதன்பின் பம்பாயில் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த தரம்ஸி மில்லை வாங்கி அதற்கு சுதேசி மில் எனப் பெயரிட்டு நடத்த ஆரம்பித்தார். மில்லைப் புதுப்பித்து வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்பதற்காக ஷாம்ஜெட்ஜி கடினமாக உழைத்தார். அன்றிலிருந்து இன்று வரை டாடா குடும்பத்தினரிடம் இந்த கடின உழைப்பு, நெருக்கடியின்போது துவண்டு விடாமல் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற நிதானம், தொழிலை மேலும் விருத்தி செய்வது எப்படி என்ற முயற்சி, எதிலெல்லாம் புதுமைகள் செய்யலாம் என்ற மாற்று சிந்தனை, சமூகத்துக்கும் நாட்டுக்கும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் என்ன நன்மை என்கிற சிந்தனை போன்றவைகளில் துளியும் மாறுதல் இல்லை.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு கதை...
டாடா குழுமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நிறுவனத்துக்குப் பின்னாலும் ஒரு சுவராஸ்யமான பின்னணி இருக்கிறது (ஒவ்வொன்று பற்றியும் ஒரு புத்தகம் எழுதலாம்!). ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஆரம்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது, அதனால் அவர்கள் மேற்கொண்ட பிரச்னைகள் என்ன, அதை எப்படி எதிர்கொண்டார்கள் என பல சுவராஸ்யமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றில், மகாராஷ்ட்ராவில் இருக்கும் மலைவாசஸ்தலமான பஞ்சாக்னியில் விவசாயம் செய்து, பெங்களூருக்கும் மைசூருக்கும் இடைப்பட்ட பகுதியில் நிலம் வாங்கி `டாடா சில்க் ஃபார்ம்’ அமைத்து அங்கிருக்கும் விவசாயிகளைப் பட்டு உற்பத்தியில் ஈடுபட ஊக்குவித்ததோடு அவர்களுக்குப் பயிற்சியளிக்க ஜப்பானிலிருந்து நிபுணர்களை வரவழைத்து `மைசூர் சில்க்’ என்கிற ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
டாடா ஸ்டீல்ஸ் உருவானது எப்படி?
1907-ம் ஆண்டுக்கு முன்பு ஆரம்பித்த எந்தவொரு நிறுவனமும் (எம்ப்ரஸ் மில், சுதேசி மில், இண்டியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிட்டெட் போன்றவை) டாடா என்கிற பெயரைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1907-க்குப்பின் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பெயரில் டாடாவின் பெயர் இணைக்கப்பட்டது. இதில் முதலாவது TISCO (இப்போது டாடா ஸ்டீல்). இரும்பு, உருக்குத் தொழிற்சாலை ஆரம்பிப்பது ஜாம்ஷெட்ஜியின் கனவாக இருந்தது. ஆனால், அவர் காலத்தில் அது உருப்பெறவில்லை. ஆனால், தந்தையின் கனவை அவரது தனயன் தொராப் நிறைவேற்றினார். முதலாம் உலகப்போரின் மீது இந்நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. இதைப் போற்றும் வகையில் `மயூர்பஞ்ச்’ என்றழைக்கப்பட்ட அந்தப் பகுதிக்கு `ஜாம்ஷெட்பூர்’ எனவும் அங்கிருக்கும் ரயில் நிலையத்துக்கு `டாடா நகர்’ எனவும் லார்ட் கெம்ஸ்ஃபோர்டால் அப்போதே பெயரிடப்பட்டது.
இந்திய அறிவியல் கழகம்...
இந்தியாவில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் போல ஒன்று அமைக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் பல தடைகளையும் மீறி அமைக்கப்பட்டதுதான் பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் (IISc). இதற்கு ஜாம்ஷெட்ஜி ரூ.1,25,000 நன்கொடை அளித்தார். 1896-ம் ஆண்டு தனக்குச் சொந்தமான 17 கட்டடங்களையும், நிலத்தையும் விற்று அதை இந்த அமைப்பின் உருவாக்கத்துக்குக் கொடுத்தார். அதன்பின் பலரும் நன்கொடை அளிப்பார்கள் என நினைத்தார். ஆனால், யாரும் முன்வராத நேரத்தில் மைசூர் மகாராஜா 371 ஏக்கர் நிலமும், ரூ.5 லட்சம் நன்கொடையும் அளித்தார். இதையறிந்து வேறு சிலரும் நிலமும், பணமும் அளிக்க முன்வந்தனர். இன்றைக்கு இக்கழகம் உலகளவில் புகழ்பெற்ற ஓர் அமைப்பாக இயங்கி வருகிறது.
அந்தக் காலகட்டத் தேவையையும் மீறி தொலைநோக்குப் பார்வையோடு இக்குழுமம் ஆரம்பித்த சில முக்கிய அமைப்புகளும், நிறுவனங்களும்:
ஏசிசி (1912),
டாடா ஏவியேஷன் சர்வீஸஸ் (1932, பின்னாளில் ஏர் இந்தியா),
டாடா கெமிக்கல்ஸ் (1938),
டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (1945),
டெல்கோ (1945),
டாடா கம்யூட்டர் சிஸ்டம்ஸ் (1968, பின்னாளில் டிசிஎஸ்) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நேருவுக்கு எதிராக ஜே.ஆர்.டி டாடா....
அன்றைய பிரதமர்கள் நேருவுக்கும், இந்திராகாந்திக்கும் மிகவும் நெருக்கமாக ஜே.ஆர்.டி இருந்து வந்தாலும் தொடர்ந்து அவர்களது சோஷலிசக் கொள்கைகளையும், நாட்டுடைமையாக்குவதையும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார். தனது நட்பின் மூலம் சலுகைகள் பெற விரும்பாதவர். அவருக்கு முன் இருந்தவர்கள் விட்டுச் சென்ற டாடா கலாசாரப் பண்புகளை டாடா சன்ஸின் சேர்மனாக இருந்த அறுபதாண்டு காலமும் பின்பற்றி வந்தார். அவருக்குப்பின் யார் என்பது பரவலாகப் பேசப்பட்ட போது 1991-ம் ஆண்டு ரத்தன் டாடாவைத் தெரிவு செய்தார். ரத்தன் டாடாவுக்குப்பின் 2012-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி தெரிவு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பின் 2017-ம் ஆண்டு நடராஜன் சந்திரசேகரன் தெரிவு செய்யப்பட்டார்.
பறவைகளுக்காக பரிதவித்த டாடா
டான்ஜானியா அரசு சோடா ஆஷ் தொழிற்சாலை நிறுவ டாடா குழுமத்தை அணுகியபோது அது அந்நாட்டு ஃப்ளாமிங்கோ பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரிய வந்ததால் மிகவும் லாபகரமான அத்தொழிலில் ஈடுபட மறுத்துவிட்டது. இது டாடா கலாசாரத்துக்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்.
டாடா குழுமத்தின் 150 ஆண்டுக்கும் (டாடா சன்ஸ் ஆரம்பித்த ஆண்டு 1868) மேலான வரலாற்றில் இதுவரை ஜாம்ஷெட்ஜி நுசர்வன்ஜி டாடா, சர் தொராப்ஜி டாடா, சர் நெளரோஜி சக்லத்வாலா, ஜே.ஆர்.டி டாடா, ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்திரி ஆகியோர் தலைமைப் பொறுப்பிலிருந்து அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறும் எதிர்காலத்தில் என்ன துறை சிறப்பாக செயல்படும் என்று அறிந்து அதற்கேற்ப டாடா குழுமத்தை பல துறைகளுக்குக் கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆங்கிலேயரால் இகழப்பட்ட போதும், இந்திய அரசினால் பல தடைகள் ஏற்பட்ட போதும் அதை படிப்பினையாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது இக்குழுமம்.
தங்களது உழைப்பாலும், அழுத்தமான நெறிமுறைகளாலும் இன்றைக்கு இக்குழுமத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 7 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இன்றைக்கு இதன் வருமானம் ஏறக்குறைய 136 பில்லியன் டாலர், இதில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வெளிநாட்டில் இயங்கிவரும் இதன் நிறுவனங்களிடமிருந்து வருகிறது. இன்றைக்கு இக்குழுமத்தின் தலைவராக பார்சியல்லாத ஒருவர் செயல்பட்டுவருவதும் இக்குழுமத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை.
தொழில், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் நாட்டின் முன்னேற்றத்துக்கும், சமூக நலனுக்கும் இக்குழுமம் செய்திருக்கும் அளப்பரியப் பணியைத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இப்புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும்.
source https://www.vikatan.com/business/news/how-the-tata-group-became-a-business-empire
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக