Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

மதுரை: கிசான் திட்டம் டு ஸ்மார்ட் சிட்டி முறைகேடு..! - கண்காணிப்புகுழு கூட்டத்தில் விறுவிறு விவாதம்

மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரநாத் குமார்(தேனி), மாணிக்கம் தாகூர்(விருதுநகர்), ஆட்சியர் வினய் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,

கண்காணிப்புக்குழு கூட்டம்

6 மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய அரசின் மூலம் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "மத்திய அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதா?'' என கேள்வி எழுப்பியதற்கு,

கண்காணிப்புக் குழு கூட்டம்

மதுரை ஆட்சியர் வினய், ``மதுரை மாவட்டத்தில் 11,000 பேர் போலியான கணக்கு மூலம் பி.எம் கிசான் நிதியுதவி பெற்றுள்ளனர், இது கண்டுபிடிக்கப்பட்டு 6,000 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ 7,06,000 திரும்ப பெறப்பட்டுள்ளது. முறைகேடு பற்றி விசாரிக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, 3 நாட்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு முறைகேடாக பெற்ற பணம் திரும்ப பெறப்படும், நடப்பு ஆண்டில் மதுரை மாவட்டத்தில் 16,474 பேர் பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்" என தெரிவித்தார்.

மதுரையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் பற்றியும் அதற்கு செலவான தொகை பற்றியும் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்மார்ட் திட்ட மேலாண்மை அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான விசாகன் பதில் சொல்ல முடியாமல் திணறினார். 6 மாதத்துக்கு முன் நடந்த கூட்டத்தில் ஆணையாளர் சொன்ன செலவுத் தொகைக்கும், தற்போது கூறிய செலவுத் தொகைக்கும் பல கோடி ரூபாய் கூடுதலாக வந்துள்ளதை சு.வெங்கடேசன் சுட்டிக் காட்டினார். இதற்கு வருத்தம் தெரிவித்த மாநகராட்சி ஆணையாளர், முழுமையான திட்ட மதிப்பை உடனே வழங்குவதாக கூறினார்.

சு.வெங்கடேசன்

7 மணி நேரம் நடந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், "மத்திய அரசு சார்பில் மதுரையில் நடைபெரும் 23 திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது, இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த மாநகராட்சியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு அமைக்கப்படும், மதுரை மாவட்டத்தில் 16,474 நபர்கள் பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்து, 11 ஆயிரம் நபர்கள் முறைகேடாக நிதியுதவி பெற்றுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் எடுக்கப்பட்ட மணல் எங்கே கொண்டு செல்லப்பட்டது என அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் முறைகேடு இல்லாமல் விரைவாக செயல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது'' என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/discussion-on-smart-city-scam-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக