Ad

சனி, 19 செப்டம்பர், 2020

`மோடி தலைமையில் இரட்டை அரசுகள்..!' - ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டும் பா.ஜ.க. பதிலும்

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது, எதிர்பாராத அதிர்ச்சி. ஆனால், `பா.ஜ.க-வுக்கு இதெல்லாம் சகஜமான விஷயம்' என்கின்றனர் எதிர்க்கட்சியினர். இதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் உதாரணம், சுப்பிரமணியன் சுவாமி.

``பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க-வின் சில செயல்பாடுகளை ரொம்பவும் வெளிப்படையாக எதிர்ப்பவர். ஆனாலும், அவர்மீது கட்சிரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சிகள் பேசப்போகும் விஷயத்தை சொந்தக் கட்சியினரையே இப்படி பேசவைத்து, பிரச்னையை நீர்த்துப்போகச் செய்வதான அரசியல் வியூகம் இது’’ என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

சிதம்பரம் ட்விட்டர் பதிவு

அண்மைக்காலமாக மத்திய பா.ஜ.க அரசில் அங்கம்வகிப்பவர்களே ஒருவிஷயத்தில் எதிரெதிர் நிலைப்பாட்டுடன் பேசிவருவது அதிகரித்துவருகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்னை மற்றும் பொருளாதார சரிவு குறித்த விவகாரங்களில், அரசுத்தரப்பிலிருந்தே முரண்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், `பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஒரு அரசு செயல்படுகிறதா அல்லது இரண்டு அரசுகள் செயல்படுகின்றனவா?' என்ற சந்தேகக் கேள்வியை ட்விட்டர் வழியே எழுப்பியிருக்கிறார்.

அதாவது, `கடந்த ஆறு மாதங்களாக இந்திய - சீன எல்லையில் எந்தவிதமான ஊடுருவல்களும் நடக்கவில்லை' என்கிறார் உள்துறை இணையமைச்சர். ஆனால், மத்தியப் பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் எல்லையில் சீனாவின் அத்துமீறலைக் கண்டிக்கிறார்கள்.

அதேபோல், `நாட்டின் பொருளாதார வளர்ச்சி இனி 'V' வடிவில் விரைவானதாக இருக்கும்’ என்கிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர். ரிசர்வ் வங்கியின் ஆளுநரோ, `விரைவான பொருளாதார வளர்ச்சியைக் காண முடியாது’ என்கிறார். இவைதான் ப.சிதம்பரத்தின் சந்தேகத்துக்கான காரணங்கள்.

இது குறித்துப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், ``மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெளிவானதொரு பார்வை இல்லாததுதான் இதுபோன்ற முரண்பாடான கருத்துகளுக்குக் காரணம்.

அருணன்

அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - 23.9 ஆக சரிந்துவிட்டது. ஆனாலும்கூட என்னோடு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க-வினர், `நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது' என்று வாய்கூசாமல் சொல்கின்றனர். ஒருவேளை அதானி, அம்பானி பொருளாதாரத்தைச் சொல்கிறார்களோ என்றுதான் நான் சந்தேகிக்கிறேன். ஏனெனில், இந்த கொரோனா காலகட்டத்திலும்கூட அம்பானி உலக அளவிலான பணக்காரர்கள் வரிசையில் 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

ஆக, `இவர்களுக்கு ராமாவதாரம் பற்றித் தெரியும்; கிருஷ்ணாவதாரம் பற்றியும் தெரியும். ஆனால், பொருளாதாரம் பற்றித் தெரியாது' என்று மீம்ஸ்களில் சரியாகத்தான் எழுதுகிறார்கள். மத்திய அமைச்சரேகூட, பொருளாதாரச் சரிவு பற்றிய கேள்விக்கு `எல்லாம் கடவுள் செயல்' என்றுதானே பதில் சொல்கிறார்...

Also Read: நிர்மலா சீதாராமன்: ட்விட்டரில் டிரெண்ட் ஆன #ResignNirmala... என்ன காரணம்?

இதுமட்டுமல்ல.... `ஆண்டுதோறும் இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்று சொல்லித்தான் ஆட்சிக்கே வந்தது மத்திய பா.ஜ.க அரசு. ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டும் இதுவரையில் நாடு முழுக்க இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன.

மக்களிடையே பணப்புழக்கம் இல்லை. எனவே, வருமானவரி செலுத்தாத மக்களின் குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாகக் கொடுக்கலாம். அதையும்கூட, `100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ போல், `200 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ எனப் புதிதாக ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆளும்கட்சியினரோ, `தற்சார்பு, தற்சார்பு' என்று சொல்லிக்கொண்டே இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்

ஒரே அரசாங்கத்தில் ஒருவர் எதிர்ப்பார்; இன்னொருவர் ஆதரிப்பார் என்ற இந்த நிலைப்பாட்டைத்தான் `சாணக்கிய தந்திரம்' என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். ஒருவகையில் இது சாணக்கிய தந்திரம்தான்... ஏனெனில், `மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை எப்போதும் மூடநம்பிக்கையிலேயே வைத்திருப்பதுதான் அரசாங்கத்தின் வரிவருவாய் பெருக்கத்துக்கு நல்லது’ என்றே சாணக்கியரும் அர்த்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறார். அதைப் படித்தறிந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தானே பிரதமர் மோடியையும் வழிநடத்துகின்றனர்.

ஆக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் நடப்புகளையும்கூட இவர்கள் வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதில்லை. `எதிரிகள் நம் எல்லைக்குள் புகுந்து நமக்குச் சொந்தமான இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார்களா இல்லையா... நம் வீரர்கள் 20 பேர் இறந்துவிட்டனரே...’ என்ற கேள்வியைக் கேட்டால், `சீனா நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட கைகலப்பில், நம் வீரர்கள் 20 பேர் இறந்துவிட்டனர்; அவர்கள் தரப்பில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயினர்' என்று சொல்கிறார்கள். ஆனால், நமது தரப்பில் சொல்லப்படும் இந்தத் தகவலை சீனா இப்போதுவரை உறுதிப்படுத்தவே இல்லை.

இதற்கிடையே பிரதமரோ, `எல்லையில் ஊடுருவலே நடக்கவில்லை' என்று சொல்லிவருகிறார். மாறாக, அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் போன்றவர்கள் ஊடுருவல் நடந்ததாகச் சொல்லிவருகிறார்கள். இப்படி மாறி மாறி இரட்டை நாக்குடன் இவர்கள் பேசிவருவதன் பின்னணி, பிரச்னையை மக்களிடமிருந்து திசைதிருப்பும் யுக்திதான்.

`சீனச் செயலியைத் தடை செய்கிறோம்' என்று இங்கே மக்களிடையே வீரம் காட்டும் இதே மத்திய அரசுதான், அண்மையில் ரஷ்யாவில் சீன அமைச்சரை நேருக்குநேர் சந்தித்து புதிதாக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வந்திருக்கிறது. ஆக, சொந்த நாட்டு மக்களிடம் வீரத்தைக் காட்டும் மத்திய பா.ஜ.க அரசு, எல்லையில் எதிரிகளிடம் ஏன் வீரத்தைக் காட்டுவதில்லை... பாகிஸ்தான் என்றால் பாய்வது, சீனா என்றால் பம்முவது என்ற இரட்டை நிலைப்பாடு ஏன்?'' என்கிறார் ஆவேசமாக.

நரேந்திர மோடி

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ஜோதிமணி, ``இங்கே இரண்டு அரசாங்கங்கள் நடைபெறுகின்றனவா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், இங்கே நடந்துகொண்டிருப்பது அரசாங்கமே அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில், 52 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலிலும்கூட நாட்டின் பிரதமர், மயில் வளர்ப்பில்தானே அக்கறையாக இருக்கிறார்!

எல்லையில், சீன ராணுவம் நமது நாட்டுக்குள் 38,000 சதுர கி.மீ தூரத்துக்கு அத்துமீறிப் புகுந்துவிட்டதாக ராணுவ அமைச்சரே நாடாளுமன்றத்தில் சொல்கிறார். ஆனால், பிரதமரோ `சீனா' என்ற பெயரைக்கூட இன்றைய தேதிவரை உச்சரிக்க பயப்படுகிறார். இப்படி வாய்திறந்து பேசுவதற்கே பயப்படுபவரைத்தான் மிகப்பெரிய வீரராக, பலூன்போல் பெரிதாக ஊதிக் காண்பிக்கிறார்கள். இந்த ஒரு வேலை மட்டும்தான் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறதே தவிர, பொருளாதாரம், விவசாயம், வேலையின்மை, கொரோனா என நாட்டின் முக்கியப் பிரச்னைகளைப் பற்றி அமைச்சர்கள் தீவிரமாக விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, இந்த அரசாங்கத்தில் யாரொருவருக்கும் ஒரே கருத்து இல்லை.

கொரோனா நிவாரணங்களுக்காக எம்.பி-க்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்வதால், யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால், எம்.பி-க்களின் தொகுதிகளுக்காகச் செலவிடப்படும் நிதியையே பிடித்தம் செய்கிறார்கள். அந்தவகையில், தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாயை பிடித்தம் செய்துவிட்டார்கள். இந்த நிதியை வைத்துத்தான் கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆக, நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய கிராமங்களின் வளர்ச்சியைக் கிடப்பில் போட்டுவிட்டு, நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு 20,000 கோடி ரூபாயை கொட்டிக்கொடுக்கிறார்கள்.

ஜோதிமணி

இதுமட்டுமா.... பிரதமர் மோடிக்கென்றே பிரத்யேகமாக ஒரு விமானத்தையே அரசு சார்பில் வாங்கியிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கால் வருமானம் தடைப்பட்டு, சோற்றுக்கு வழியில்லாமல் குடிமக்கள் பசியோடு முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், பிரதமரோ தன் ஆடை அலங்காரத்துக்கும் ஆடம்பரப் பயணத்துக்கும் செலவழித்துக்கொண்டிருக்கிறார். இது அரசாங்கம் அல்ல... அலங்கோலம். அதனால்தான் பா.ஜ.க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரே ராஜினாமா செய்துவிட்டார்.

அதுசரி... நாட்டின் பொருளாதாரத்தையே கடவுளின் கைகளில் ஒப்படைத்துவிட்டவர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?'' என்றார் கொதிப்புடன்.

மத்திய பா.ஜ.க அரசின் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்... ``ரிசர்வ் வங்கி ஆளுநர் என்பவர் எப்போதுமே, தன்னிடம் இருக்கும் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மட்டுமே பேசுவார். அந்தவகையில், இந்த கொரோனா காலகட்டத்திலுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு, `நாட்டின் வளர்ச்சி வேகமாக இருக்க வாய்ப்பில்லை' என்கிறார்.

அதேசமயம் தலைமைப் பொருளாதார ஆலோசகரோ, எதிர்காலத்தில் என்னென்ன வழிகளிலெல்லாம் நாட்டின் பொருளாதாரம் உயரப்போகிறது என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு அவரது கணிப்பைச் சொல்லியிருக்கிறார். எனவே, இதை 'மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு' என்றெல்லாம் விமர்சிக்கக் கூடாது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதார நெருக்கடியே இந்தியாவுக்கு இனி வரப்பிரசாதமாக அமையப்போகிறது. அதாவது, உலகம் முழுவதுமுள்ள பெரு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வந்திருக்கின்றன. குறிப்பாக, உலக அளவில் சீனாவுக்கு தற்போது கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்நாட்டுக்கு வரக்கூடிய தொழில் வாய்ப்புகளெல்லாம் இந்தியாவுக்கு வருகின்றன.

நாட்டின் பொருளாதாரமே சரிந்துவிட்டது என்று இப்போது குற்றம் சொல்பவர்களெல்லாம், இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தைத்தான் உதாரணம் காட்டுகிறார்கள். ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்துறையுமே முடங்கிக்கிடக்கும்போது, எப்படிப் பொருளாதாரம் வளர்ச்சி பெற முடியும்... பொருளாதாரம் என்பதே உற்பத்தியைச் சார்ந்ததுதானே... ஆக, நாட்டின் சூழலைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், `பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது' என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால், அவர்களை முட்டாள்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Also Read: ஜி.டி.பி சரிவு : `காந்தி கணக்கு’க்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?

இந்தியப் பொருளாதாரம் எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கப்போகிறது. அதில் தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டுமானால், எட்டு வழிச்சாலை போன்ற ஆக்கபூர்வத் திட்டங்களை அமல்படுத்துவதில் நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

`பா.ஜ.க-வில் இரண்டு அரசாங்கங்கள் நடக்கின்றனவா...’ என்று கேட்கும் ப.சிதம்பரம், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 10 அரசாங்கங்கள் நடந்துகொண்டிருந்தது பற்றி என்றைக்காவது கேள்வி கேட்டிருக்கிறாரா?

சோனியா, ராகுல், மன்மோகன், ப.சிதம்பரம் என ஆளுக்கொரு அரசு நடத்திக்கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். எனவே, பா.ஜ.க அரசிலும் இரண்டு அரசாங்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அவர்கள் பார்வையில் சொல்கின்றனர். ஏன் இரண்டு என்ற எண்ணிக்கையோடு சுருக்கிவிட்டார்கள்... அவர்களது பார்வையில், இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

ப.சிதம்பரம்

மத்திய பா.ஜ.க அரசு என்பது, பிரதமர் மோடி தலைமையிலான ஒற்றை அரசாங்கம். உறுதியான அரசாங்கம். அதனால்தான் சீனாவின் ஊடுருவல் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. நமது இந்த ராஜதந்திரத்தால், உலக நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன. ஜப்பான் காலம் காலமாக சீனாவை எதிர்த்துவருகிறது. ஆனால், இன்றைக்கு அமெரிக்காவும் சீனாவை வலுவாக எதிர்க்கிறது என்பது புதிய திருப்பம்.

சீனாவோடு நெருக்கம் காட்டிவந்த ரஷ்யாகூட, லடாக் எல்லைப் பிரச்னையில் சீனாவுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக, ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரே முனையில் நின்று, இந்தியாவை ஆதரிக்கக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பவர் பிரதமர் மோடி. இது உலக அளவில் மிகச் சிறப்பான சாதனை.

Also Read: வேலூர்: `மயக்க ஸ்பிரே அடித்துக் கடத்தல்; 7 மாத கர்ப்பம்!’ - மாணவிக்கு நேர்ந்த கொடுமை

`ரஷ்யாவில், இந்தியா - சீனா இடையே ஒப்பந்தங்கள் நிறைவேறினவே...' என்று கேட்கிறார்கள். பொதுவாக பேச்சுவார்த்தைக்கு ஒரு நாடு வர முடியாது என்று சொல்லுமேயானால், அது உலக நாடுகளின் ஆதரவை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை. பேச்சுவார்த்தையின் மூலமாகத்தான் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. அதேநேரம், கடந்தகால வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நமது எல்லையைக் காக்க எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்.

இந்தப் போராட்டத்தில், நமது ராணுவ வீரர்கள் 20 பேரை இழந்திருக்கிறோம். நம்மைவிட அதிக எண்ணிக்கையிலான வீரர்களை சீனா இழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை சீனா ஒப்புக்கொள்ளவில்லையே என்று எதிர்க்கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்கள், 'இந்த விஷயத்தை சீனா மறுக்கவும் இல்லையே...’ என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நரேந்திர மோடி

எனவே, பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று நம்பும் இந்தியா, அந்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியாகத் தனது கடைசி கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது. நமது எல்லையில் சீனா ஊடுருவுதல் முயற்சியை மேற்கொண்டது என்பது உண்மை. ஆனால், அதற்கான எதிர்வினையாகக் குன்றுகளின் வழியே கீழிறங்கி, இந்தியா கொடுத்த பதிலடி சிறப்பாக அமைந்துவிட்டது. கடந்தகாலங்களில் மிகத்தந்திரமாக நம்மை ஏமாற்றி வெற்றிபெற்ற சீனாவின் தந்திரங்களையெல்லாம் நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். எனவே, இந்த நேரத்தில் தேசப்பற்றோடு நாம் இந்தியாவின் நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

Also Read: `வட இந்தியாவைவிட தமிழக விவசாயிகள் தெளிவானவர்கள்!' - நபார்டு வங்கி தலைவர் பாராட்டு

தேவையின்றி ஒருபோதும் பேசுவது இல்லை என்பதுதான் பிரதமர் மோடியின் வெற்றி ரகசியம். எனவே, சீனா செய்துவரும் தவறுகளையெல்லாம் ஆதாரபூர்வமாக உலக அரங்கில் எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியின் அர்த்தமற்றக் கேள்விகளுக்கும், ப.சிதம்பரத்தின் பொய்யான உரைகளுக்கும் பதில் சொல்லாமல் இருந்ததால்தான் உலக அரங்கில், மோடியால் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இல்லையென்றால், ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒருமுகமாக இந்தியாவை ஆதரித்திருப்பார்களா?

ராகுல் காந்தி

பா.ஜ.க பற்றி முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வெளிவருவதற்கு தீனி போடுகிறவர்களாக காங்கிரஸ் கட்சியினர் இருக்கின்றனர். அதனால்தான், இந்த எல்லைப் பதற்ற நாள்களில்கூட, இதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் கிடைக்குமா என்ற வெட்கக்கேடான செயலில் இறங்கியிருக்கின்றனர். எனவே, இவர்களுக்கெல்லாம் நமது பிரதமர் பதில் சொல்லிக்கொண்டிருந்தாரென்றால், உலக அரங்கில் நம்மைப் பற்றி பல்வேறுவிதமாக நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், தேவையற்ற நேரங்களில் ஒருபோதும் அவர் பேசுவது இல்லை. தேவையான நேரத்தில் ஆழமாகப் பேசுவதிலும் அவர் தவறுவதே இல்லை!'' என்றார் விளக்கமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/do-we-have-two-governments-or-one-under-modi-asks-chidambaram-and-bjps-reactions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக