Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நெல்லை மண்சட்டிகள்... வெளிநாடுகளில் திடீர் வரவேற்பு ஏன்?

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுமார் 3,500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் உள்ள குளங்களில் தரமான கரம்பை மண் கிடைப்பதால் இந்தப் பகுதியில் தயாராகும் மண்பாண்டங்கள் அழகாக மிளிர்கின்றன. அகல்விளக்கு, தேநீர் கோப்பை, தண்ணீர் பாட்டில், கார் முதல் வீடுகள் வரை வைக்கப்படும் அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டி எனப் பலவகையான பொருள்கள் மண்ணில் நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. இவற்றிற்கு உள்ளூரில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகரித்துள்ளது.

நெல்லை குறிச்சியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு மண்பாண்ட சங்கத்திலிருந்து சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட 12 வளைகுடா நாடுகளுக்கு மண்ணில் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்கள், பிரியாணி சட்டி மற்றும் சாம்பிராணி கிண்ணம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

மண்பாண்டம் தயாரிப்புக் கூடம்

இது தவிர, ஒவ்வொரு நாட்டிலிருந்து கிடைக்கும் ஆர்டருக்கு ஏற்ப பிரத்யேகமாக மண்பாண்டங்களைத் தயார் செய்து அனுப்புகிறார், குறிச்சியைச் சேர்ந்த முருகன். கொரோனா ஊரடங்கு காலத்தில் கப்பல், விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோடிக்கணக்கிலான மண்பாண்டங்கள் முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது மீண்டும் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார்.

நம்மிடம் பேசிய அவர், ``உலகம் முழுவதுமே மக்களின் பார்வை இயற்கை நோக்கித் திரும்பத் தொடங்கியிருக்கு. பெரிய ஹோட்டல்களில் கூட மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமையல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்குது.

மண்பாண்டம் உற்பத்தியாளர் முருகன்

நிறைய ஹோட்டல்களில் மண் பாத்திரங்களிலே உணவைப் பரிமாறுகிறார்கள். வெளிநாடுகளிலும் மண் பாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதனால் சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, வளைகுடா நாடுகளிலிருந்து எங்களுக்கு நிறைய ஆர்டர் வர ஆரம்பிச்சிருக்கு.

ஆரம்பத்தில் உள்ளூர் வியாபாரம் மட்டுமே செஞ்சுக்கிட்டிருந்தேன். சில வருஷத்துக்கு முன்பு ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் இங்கே வந்து காரில் வைப்பதற்கான ஒரு சிறிய பூச்சட்டி கேட்டார். அவர் விரும்பியபடியே வடிவமைத்துக் கொடுத்தோம். அவருக்கு ரொம்ப ஆச்சர்யமாப் போயிருச்சு.

அதனால், இங்கேயே நாலு நாள் தங்கியிருந்து விதவிதமா செய்யச் சொன்னார். அவர் பேப்பரில் வரைஞ்சு கொடுத்ததை எல்லாம் தத்ரூபமாகச் செஞ்சு காட்டினோம். அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால் கொஞ்சம் பொருள்களைக் கையோடு எடுத்துக்கிட்டுப் போனார். ஜெர்மனியில் அதற்கு நல்ல மவுசு இருந்ததால் எங்களிடம் ஆர்டர் கொடுத்தார். அதுதான் எங்களுக்கு கிடைச்ச முதல் வெளிநாட்டு ஆர்டர்.

மண்பாண்டப் பொருள்கள்

அதுக்குப் பிறகு, எங்களோட பொருள்களின் தரத்தைப் பார்த்து நிறைய ஆர்டர் வர ஆரம்பிச்சிருச்சு. நாங்க முதலிலேயே மண்பாண்டங்களைத் தயாரிச்சு வைப்பதில்லை. எங்களுக்கு ஆர்டர் கிடைச்ச பிறகுதான் பொருள்களைத் தயார் செய்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவோம். வருடம் முழுவதும் எங்களுக்கு வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.

மழைக்காலத்தில் மண்பாண்டங்கள் காய்வதில் நிறையச் சிக்கல் இருக்கும். சற்று தாமதமாகும். அதற்குத் தக்கபடி நாங்கள் ஆர்டர் எடுக்கும்போதே எவ்வளவு நாள் கழிச்சு அனுப்புவோம்கிறதையும் சொல்லிவிடுவதால் வாடிக்கையாளர்கள் எங்களின் நிலைமையைப் புரிஞ்சுக்கிறாங்க.

இப்போது பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மண்ணில் செய்த `டிஸ்போஸபிள் கிளாஸ்' விற்பனை அதிகமாகியிருக்கு. தமிழகத்துக்கு உள்ளே இருந்து நிறைய ஆர்டர் வருது. வேலூர், சென்னை, கோவைனு பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிளாஸ் கேட்டு ஆர்டர் கொடுக்கிறார்கள்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் டீ கப்

வெளிநாட்டு மக்களும் இப்போது மண்பானைகளில் சமையல் செய்ய ஆர்வம் காட்டுறாங்க. அதனால் மண்பானைகள் ஏற்றுமதியும் இப்போ அதிகரிச்சிருக்கு. ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து மண் பாத்திரங்களை அதிகம் ஆர்டர் கொடுக்கிறாங்க. எங்களிடம் தயாராகும் மண்பாண்டங்களில் 95 சதவிகிதம் ஏற்றுமதி செய்வதற்காகவே உற்பத்தி செய்யுறோம்.

முன்பெல்லாம் கையால் மண்பாண்டங்கள் செய்யும்போது குறைவாகவே செய்ய முடிஞ்சுது. ஒரே அளவாகவும் இருப்பதில்லை. ஆனால், இப்போது மெஷின்களின் உதவியுடன் தயாரிப்பதால் தரமும் அளவும் கூடியிருக்கு. குறித்த நேரத்தில் ஆர்டர்களை டெலிவரி செய்யவும் முடிகிறது.

நாங்கள் 2 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலான மண்பாண்டங்களைத் தயாரிக்கிறோம். மெஷின் இயக்கும் வேலையில் ஆண்களும், உற்பத்திப் பொருள்களை அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யும் இறுதிக்கட்டப் பணிகளில் பெண்களும் ஈடுபடுகிறார்கள்” என்றார்.

ஏற்றுமதிக்குத் தயாராக இருக்கும் மண்பாண்டப் பொருள்கள்

மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் பேசியபோது, ``வருடம் முழுவதும் எங்களுக்கு வேலை கிடைக்கிறது. முன்பெல்லாம் கரம்பை மண் கிடைப்பதில் எந்த சிரமமும் இல்லாமல் இருந்துச்சு. இப்போது அரசு அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியதிருப்பதால் இந்தத் தொழில் செய்யும் சில மாற்றுத் தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள். மண்பாண்டத் தொழிலையும் தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்தும் விதத்தில் மண்பாண்டத் தொழிலுக்கு கரம்பை மண் கிடைக்கும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்கள்.

`மண் பானைகளை வாங்குவதற்கான எளிய வழிமுறைகள் என்ன’ என்பது குறித்து அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களிடம் கேட்டதற்கு, ``பானைகளை வாங்கும்போது அதன் சுற்றுப் பகுதிகளில் மூன்று, நான்கு இடங்களில் விரல்களால் சுண்டிப் பார்க்கணும்.

மண்பாண்டத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்

தரமான மண்பானையாக இருந்தால் சுண்டும்போது எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான சத்தம் கிடைக்கும். பானையில் லேசான கீறல் இருந்தால் சத்தத்தில் மாற்றம் இருக்கும். அதை வைத்தே கண்டுபிடிக்கலாம்” என்றார்கள்.

சபாஷ், நல்ல யோசனைதான்!



source https://www.vikatan.com/business/news/pottery-business-booming-in-tirunelveli-due-to-demand-in-abroad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக