கோவை முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி புதிய உச்சத்தை தொட்டு வரும் கொரோனாவால், கோவை மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக, கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரிசோதனையில் குளறுபடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக `பாசிட்டிவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!’ என்ற தலைப்பில் ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
Also Read: `பாசிட்டிவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!
இந்நிலையில், “கொரோனா இல்லாத 4 பேருக்கு, இருக்கு என்று முத்திரை குத்தி என்னையும், எனது குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்” என ஹோப் காலேஜ், மணீஸ் தியேட்டர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட ஓர் வீட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்த பேனரை வைத்த குடும்பத்தினர், “என் அப்பா உடல்நலக்குறைபாட்டால் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறினர். அவருக்கு ஏற்கெனவே இதயப்பிரச்னை, கால்வலி போன்றவை உள்ளன. மேலும், அவருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் பழுதடைந்திருந்தது. அதனால்தான், அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவில் புகாரளித்துள்ளேன். மாநகராட்சி சார்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி எங்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்தனர்.
2-ம் தேதி என் மனைவி, என் குழந்தை, சகோதரி, சகோதரியின் குழந்தை ஆகிய 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவாகியிருப்பதாக மாநகராட்சியில் இருந்து கூறினார்கள். ஆனால், மருத்துவனையில் அனுமதிப்பது தொடர்பாக அவர்கள் ஏதும் கூறவில்லை. இதனால், நான் பலமுறை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று விசாரித்தேன். அங்கும் முறையான பதில் இல்லை.
சந்தேகம் வலுத்தது. கடந்த 4-ம் தேதி ஓர் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து பார்த்தோம். அதில், மாநகராட்சி பாசிட்டிவ் என சொன்ன 4 பேருக்குமே நெகட்டிவ் என்றுதான் ரிப்போர்ட் வந்தது. இதனிடையே, கொரோனா பாதிப்பு என சொல்லி எங்கள் வீட்டை தனிமைப்படுத்திவிட்டனர். அக்கம், பக்கத்தினர் நடவடிக்கைகள் மிகுந்த மன உளைச்சலை தந்தது. பார்க்கும்போதே தீண்ட தகாதவர்களை போல பார்த்தனர். இரண்டரை வயது மற்றும் நான்கரை வயது குழந்தைகளுக்கு பாசிட்டிவ் என சொன்னால், மனது பதற தானே செய்யும். கொரோனா பாதிப்பு என சொன்ன மாநகராட்சி, மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த பேனரை வைத்தோம். தனியாரில் சோதனை செய்து பார்க்க முடிந்ததால், எங்களுக்கு நெகட்டிவ் என்பதை நாங்கள் வெளி கொண்டு வந்துவிட்டோம். அது முடியாமல், பல எளிய மக்கள் கொரோனா முத்திரையை வாங்கி, அக்கம் பக்கத்தினராலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலை மாறவேண்டும். அதற்காகதான் பேனர் வைத்தேன்” என்றார்.
இந்த பேனர் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் நேற்று இரவு அந்த பேனரை அகற்றிவிட்டனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ராஜா, “பேனர் வைத்தவரின் அப்பா மற்றும் அவரது தங்கை ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான், குடும்பத்தில் இருந்த மற்றவர்களுக்கு பரிசோதனை செய்தோம். நாங்கள் எடுத்த சோதனைக்கும், அவர்கள் தனியார் எடுத்த சோதனைக்கும் 5 நாள்கள் இடைவெளி இருக்கிறது.
நோய் எப்போது, எப்படி, யாரிடம் இருந்து வந்தது என தெரியவில்லை. அறிகுறி இல்லாதவர்களுக்கு இடைவெளிவிட்டு சோதனை செய்யும்போது இப்படி வரலாம். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் மாநகராட்சி உதவி எண்களை தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக நாங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திருப்போம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-viral-family-opened-over-banner-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக