Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

`நீட் ரிசல்ட் வரட்டும்... சூர்யா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்' - அண்ணாமலை ஆருடம்

பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கோவை சுங்கம் பகுதியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தமிழ்நாட்டில் அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது. கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானது தான். மும்மொழி கல்வி கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக உள்ளது.

அண்ணாமலை

Also Read: தஞ்சை: `மோடி பிறந்தநாளில் பேசும் அளவுக்கு நடிகர் சூர்யா பெரிய ஆள் இல்லை!’- ஜீவஜோதி

புதிய கல்வி கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துள்ளார்கள். தமிழகத்தில், இரு மொழி கல்விக் கொள்கை தொடருமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அவரது கருத்து. ஆனால், தமிழக மக்கள் மும்மொழி கொள்கை வேண்டுமென தான் நினைக்கின்றனர்.

பெரியாரின் கொள்கைகளில் பலவற்றை ஏற்க மாட்டோம். அதேநேரத்தில் மக்களின் சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறோம். பிறந்தநாளின்போது, வாழ்த்து தெரிவிப்பது அரசியல் நாகரிகம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். மாணவர்கள் மூன்று மொழிகளை படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும். இந்தி மொழி விவகாரத்தில் தி.மு.க இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது.

அண்ணாமலை

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள்.

நடிகர் சூர்யா நல்ல மனிதர், நல்ல நடிகர். நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை வரம்பை தாண்டும் வகையில் இருந்தது. சூர்யாவின் கேள்விகளுக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் சொல்லும். நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூர்யா நீட் குறித்தத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.

அண்ணாமலை

மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகத உள் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. சமூக வலைதளங்களில் அநாகரிகமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/annamalai-speak-about-suriya-over-neet-exam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக