ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. முக்கியமாக, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் தினசரி 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Also Read: கோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தில் வழக்கு பதிவு!
நேற்று மட்டும் கோவை முழுவதும் 579 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16,662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 315 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிரச்னைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
முக்கியமாக, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. இதையடுத்து, அவர் அன்று மாலை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க வைத்துவிட்டு, ‘படுக்கை இல்லை’ என அனுப்பிவிட்டனர்.
இதுகுறித்து அந்த நபர் நம்மிடம் கூறுகையில், ‘இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போதே, மாநகராட்சியில் இருந்து எனக்கு அழைத்து, ‘காலை 9 அளவில் ஆம்புலன்ஸ் வரும் தயாராக இருங்கள்’ என்றனர். நானும் தயாராக இருந்தேன். ஆம்புலன்ஸ் வரவில்லை.
நம்மால், நம் வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நான் கொடிசியாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு சென்றேன். அங்கும் படுக்கை இல்லாமல் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழல். என்னை மாதிரியே கொரோனா பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் வெளியில் நின்று கொண்டிருந்தோம். வெளியில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை.
காலையில் இருந்து காத்திருந்து மதியம்தான் உள்ளே அனுமதித்தனர். நாங்கள் அப்படியே வெளியில் நிற்பது, மற்றவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை தானே?. எனவே, படுக்கைகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கோவையில் சலூன் கடை நடத்தி வருகிறார். அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி, கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா மையத்துக்கு அலைந்துள்ளார். இரண்டு நாள்கள் போராட்டத்துக்குப் பிறகுதான் அவரை கொடிசியாவில் அனுமதித்துள்ளனர். “சிகிச்சை அளிப்பதில் எந்தக் குறையும் இல்லை என்றாலும், படுக்கை கிடைப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது.
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, விளக்கம் கேட்க சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர்களுக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்!
source https://www.vikatan.com/news/tamilnadu/no-bed-in-coimbatore-for-corona-affected-peoples
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக