அரசாங்கம் சார்பில் சொல்லப்படும் பொய்களும், விவசாயிகள் சொல்லும் உண்மைகளும்!
விளம்பரம்:
1. வேளாண் மசோதா குறைந்தபட்ச ஆதரவு விலையை எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது. அது எதிர்காலத்திலும் தொடரும்.
உண்மை:
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டம் இது என்று விவசாயிகள் கருதுகின்றனர். சந்தை சக்திகளின் கைகளில் இதை விட்டுவிட்டால், விலையானது 15 முதல் 20 சதவிகிதம் குறையக்கூடும் என்கிற அச்சமும் இருக்கிறது. தற்போது மக்காச்சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 1,850. ஆனால், பீகார், உ.பி மாநிலங்களில் 700 ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகிறது.
2. மண்டி உள்ள முறையே தொடரும்.
உண்மை - ஏற்கெனவே அரசாங்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை (சந்தைக் குழுக்கள்) கன்ட்ரோல் செய்வது வியாபாரிகளே. சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை நிர்ணயிப்பார்கள். தற்போது, இந்தச் சட்டம், அவர்களுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரத்தைத் தருகிறது.
3. வேளாண் மசோதா விவசாயிக்குச் சுதந்திரம் வழங்குகிறது. இப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருளை யாருக்கும், எங்கும் விற்கலாம். மேலும் அது ஒரு நாடு ஒரு சந்தையை நிறுவுகிறது. இப்போது விவசாயிகள் மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக பெரும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுடன் கூட்டிணைந்து அதிக லாபம் ஈட்ட இயலும்.
உண்மை - வழக்கமாகவே ஒரு சில விளைபொருள்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்று விற்பனை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அதனால் பயனடைவது விவசாயி இல்லை, இடைத்தரகர்கள்தாம். இந்த நிலை இன்னும் அப்படியே தொடரும். அப்படியே விவசாயிகள் கொண்டு சென்றாலும் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்குக் கூட கட்டுப்படியாகாது.
4. ஒப்பந்தமானது விவசாயிகள் முன்-நிர்ணய விலையைப் பெறுவதற்கு ஏதுவாக்கும். ஆனால், ஒப்பந்தத்தால் விவசாயியை அவருடைய உரிமைக்கு எதிராகக் கட்டுப்படுத்த முடியாது. விவசாயி எந்த அபராதத்துக்கும் உள்ளாகாமல், எந்த நிலையிலும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் சுதந்திரமானவராக இருப்பார்.
உண்மை - கார்ப்பரேட்டுகள் அரசியலில் கொண்டிருக்கும் செல்வாக்கைப் பற்றி விவசாயிகள் மிகவும் பயப்படுகிறார்கள். கார்ப்பரேட்டுகளின் வழக்கறிஞர்களுக்கு இணையாக இவர்களால் வழக்கறிஞர்களை வைக்க முடியாது. ஏற்கெனவே ஒப்பந்தப் பண்ணையம் என்கிற வகையில் சர்க்கரை ஆலைகளுடன் சிக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருபோதும் காப்பாற்றவே இல்லை.
5. பல மாநிலங்களில், விவசாயிகள் பெரும் கார்பரேட்களுடன் கூட்டிணைந்து கரும்பு, பருத்தி, தேயிலை மற்றும் காபி போன்ற பயிர்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்கின்றனர். இப்போது சிறு விவசாயிகள் பெரும் பலன் பெறுவர். மேலும், அவர்கள் நிச்சய லாபங்களுடன் தொழில்நுட்பம் மற்றும் உபகரணத்தின் பயன்களையும் பெறுவர்.
உண்மை - ஏற்கெனவே சிறு மற்றும் குறு விவசாயிகள்கூட கோழிப் பண்ணைகளை அமைப்பதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். சில பணப்பயிர்களுக்கு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், நவீன சில்லறை, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால், விவசாயிகள் பெருவணிகர்களுடனான ஒப்பந்தங்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/myths-about-new-farm-bills-and-analysis-on-govt-claims
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக