Ad

சனி, 5 செப்டம்பர், 2020

பாதியாகக் குறைந்த தொகை; கடுகடுத்த நீதிபதி! - கட்டாயக் கல்வியில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பள்ளிக்கல்வி வட்டாரத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. `நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதை சீரியஸாகப் பார்க்க வேண்டியது வரும்' எனக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழக்கில் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்.

Also Read: RTI அம்பலம்: தேய்கிறதா கட்டாய கல்வி உரிமைச் சட்டம்!

கொரோனா பெருந்தொற்றால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் தவித்துவருகின்றனர். ` 75 சதவிகித கட்டணத் தொகையைத் தவணை முறையில் வசூலித்துக் கொள்ளலாம்' என்ற உத்தரவு இருந்தும், முழுப் பணத்தையும் செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்தித்துக்கொண்டிருக்கின்றன தனியார் பள்ளிகள்.

ஆர்.டி.இ சட்டம்!

இது ஒருபுறம் இருக்க, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விவகாரம் பள்ளிக் கல்வித்துறைக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆர்.டி.இ சட்டப்படி, குழந்தைத் தொழிலாளி, ஆதரவற்றவர், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதித்தவர், பட்டியலினத்தவர், மாற்றுத்திறனாளி, ஆண்டு வருவாய் 2 லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கு தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்க வேண்டும். இதன்படி, கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. தற்போது வரை 15,000 தனியார் பள்ளிகளில் 8 லட்சம் மாணவர்கள் ஆர்.டி.இ சட்டப்படி கல்வி பயின்றுவருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

பாதியாகக் குறைந்த தொகை!

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.27,000 வரையில் வழங்கப்பட்டுவந்த தொகையையும் மாநில அரசு 11,000 ரூபாயாகக் குறைத்துவிட்டதில் தனியார் பள்ளி நிர்வாகங்கள், பெரும் கொதிப்பிலுள்ளன. மத்திய அரசு தன்னுடைய பங்கைக் கொடுத்துவிட்டாலும், மாநில அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பள்ளிக் கல்வித்துறைச் செயலரை காணாலிக் காட்சி விசாரணையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்.

ஒரு பைசாகூட வரவில்லை!

நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, தனியார் பள்ளிகள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணனிடம் பேசினோம். ``ஆர்.டி.இ சட்டப்படி, நலிவடைந்த பிரிவினராக உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அதற்காகப் பணம் எதையும் வாங்கக் கூடாது. அதற்கு பதிலாக அந்தப் பணத்தை அரசே செலுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கிவருகிறது. இதனுடன் மாநில அரசும் தனது பங்கைக் கொடுத்துவந்தது. ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கப்பட்ட தொகையை, கடந்த ஆண்டில் 11,000 ரூபாயாகக் குறைத்துவிட்டனர். அந்தப் பணத்தில் இன்றளவும் பாதித் தொகையைத்தான் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. 2020-21-ம் ஆண்டில் ஒரு பைசாவைக்கூட தமிழக அரசு கொடுக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம்

எனவே, `எங்களுக்கு அரியர் பணத்தை வழங்க வேண்டும்; பாதியாகக் குறைத்த தொகையை சரிசெய்து உயர்த்தி வழங்க வேண்டும்' என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். இந்த வழக்கு காணொலிக் காட்சி மூலமாக விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ், `அவர்கள் ஒப்புக்கொண்ட 11,000 தொகையையாவது கணக்கிட்டுக் கொடுத்தார்களா?' எனக் கேள்வி எழுப்பினார். `அதையும் கொடுக்கவில்லை' என்றோம். உடனே, `இந்தத் தொகையை ஆறு வார காலத்துக்குள் வழங்க வேண்டும்' எனக் கடந்த 20.7.2020-ல் உத்தரவு பிறப்பித்தார்.

நிதி இல்லையா?

அப்படியும் எங்களுக்குத் தொகை வழங்கப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணத்தைக் கொடுப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை அவகாசம் கேட்டது. அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, `கோர்ட் உத்தரவு இருந்தும், கொடுக்காமல் இருப்பதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டி வரும். இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ, `எங்களிடம் நிதி இல்லை' எனக் காரணம் சொல்கின்றனர்.

மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டிய தொகையை பள்ளிக் கல்வித்துறை உடனே வழங்க வேண்டும்; 11,000 ரூபாய் என்பது மிகவும் குறைவான தொகை, அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்றார்.

தனியார் பள்ளிகள் செய்வது என்ன?

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் ஒருவரிடம் பேசினோம். ``அரசிடம் நிதி இல்லை என்பதாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆர்.டி.இ சட்டப்படி பல்வேறு விதிகள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இல்லாத இடத்தில்தான் இந்தச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்க்க முடியும். அதேபோல், இலவசத் திட்டங்கள் எதுவும் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது. ஆனால், மாணவர்களுக்கான செலவுகள் என வகைப்படுத்தும்போது, வேறு சில செலவுகளையும் தனியார் பள்ளிகள் பட்டியலில் வைத்துவிடுகின்றனர்.

Also Read: கல்வி உரிமைச் சட்டத்துக்காக 41,343 வழக்குகள் - உலக வங்கி அதிர்ச்சித் தகவல்

கட்டண வரையறை தொடர்பாக, கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் அரசு தொகையை ஒதுக்குகிறது. அந்த வரிசையில், ஆசிரியர் சம்பளம், மின் கட்டணம் ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான் 11,000 ரூபாய் என்ற அளவில் அரசு கொடுத்துவருகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதி, லட்சங்களில் மட்டும்தான் உள்ளது. ஆனால், இதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது. இதற்காகக் கூடுதல் நிதி கேட்டு தமிழக முதல்வர், மத்திய அரசுக்குக் கடிதங்களையும் எழுதியிருக்கிறார். கொரோனா காலம் என்பதால், நிதியை ஒதுக்கீடு செய்வதில் சற்று தாமதமாகியிருக்கிறது’’ என்றார் விரிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/controversy-over-right-to-education-act-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக