Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கேரளா: `மக்கள்தான் எனது பாடபுத்தகம்’ - சட்டசபையில் 50 ஆண்டுகள் கண்ட உம்மன் சாண்டி!

கேரள சட்டசபையில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் அங்கம் வகிக்கும் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு பாராட்டு விழாக்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி சட்டசபை தொகுதியில் 1970-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்ற உம்மன் சாண்டி தொடர்ச்சியாக அந்த தொகுதி மக்களால் சட்டசபைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார். வேறு தொகுதிக்கு மாறாமல் ஒரே தொகுதில் போட்டியிட்டு ஐம்பது ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் உம்மன் சாண்டி.

புதுப்பள்ளி தொகுதியின் மீதான அதீத பாசத்தால் திருவனந்தபுரத்தில் சொந்தமாக கட்டிய வீட்டுக்கும் 'புதுப்பள்ளி' என பெயர் வைத்திருக்கிறார் உம்மன் சாண்டி. உம்மன் சாண்டி கடின உழைப்பாளி என கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார். பாராட்டு விழாக்களால் நெகிழ்ந்த உம்மன் சாண்டி கூறுகையில், "இதை நான் எனக்கு கிடைத்த கிரெடிட்டாக நினைக்கவில்லை. இது மக்களின் அன்பும், கரிசனையாலும் கிடைத்த வெகுமதி. சாதாரணமாக என்னைப்பற்றி கூறுபவர்கள் 'இவர் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் இருப்பார்' என்பார்கள். அது உண்மைதான். எனக்கு அதிகமான அனுபவங்கள் மக்களிடம் இருந்துதான் கிடைத்துள்ளது.

உம்மன் சாண்டி

சாதாரண மக்களிடம் பேசும்போதுதான் புதிய புதிய தகவல்களும், புதிய சிந்தனைகளும் கிடைக்கின்றன.

நான் செய்தித்தாள்களைப் படிப்பேன் மற்றபடி வாசிப்பது மிகவும் குறைவுதான். வாசிப்பதற்கான நேரமும், வாய்ப்பும் கிடைக்காததுதான் அதற்கு காரணம். எனக்கு கிடைக்கும் அனுபவங்களும், அறிவும் மக்களை சந்திப்பதன் மூலமே கிடைக்கின்றன. மக்களிடம் இருந்து மிகப்பெரிய அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து அறிவைப் பெறுவதை நான் எனது சம்பாத்தியமாக நினைக்கிறேன்.

வில்லேஜ் ஆப்பீசரும், பஞ்சாயத்து செக்கரட்டரியும் செய்யும் வேலையை நீங்கள் செய்கிறீர்களே என நான் மக்களை சந்திக்கும்போது பலரும் என்னிடம் சொல்லுவார்கள். ஆனால் பஞ்சாயத்து செக்கரட்டரிகளுக்கும், வில்லேஜ் ஆப்பீசர்களாலும் செய்யமுடியாத சில தடங்கல்கள் ஒவ்வொரு விஷயங்களிலும் உண்டு. அந்த தடைகளை குறித்த அறிவை அதன் மூலம் கஷ்டங்களை அனுபவிக்கும் பாவப்பட்ட மக்கள் நமக்கு தருகிறார்கள். அவர்களின் கஷ்டங்களில் இருந்துதான் நாம் அதை உணர்ந்துகொள்ள முடியும். மக்கள்தான் எனது பாடபுத்தகம்.

உம்மன் சாண்டி

சட்டசபையில் ஐம்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலகட்டமாகும். ஐம்பது ஆண்டுக்கு முந்தைய அரசியலும், இன்றைய அரசியலுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அது நல்லதுக்கான வித்தியாசங்கள் அல்ல. அரசியல் என்பது மக்களின் நன்மைக்கானதாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்க வேண்டும். பல சமயங்களில் அதில் இருந்து தடம் மாறி போய்விடுகிறது. 1970-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டபோதும், அதைத் தொடர்ந்து நான் போட்டியிட்டபோதும் பிரகடன பத்திரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அரசியல் கொள்கைகளும், செயல்பாடுகளும் தேர்தலின்போது சர்ச்சை செய்யப்படும். ஆனால் இன்று அதெல்லாம் மாறிப்போகிறதோ என நினைக்கவேண்டியிருக்கின்றது. அது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது" என்றார்.



source https://www.vikatan.com/news/india/kerala-ex-cm-oommen-chandy-finishes-50-years-in-kerala-assembly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக