Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

வெள்ளை மாளிகைக்கு வந்த கொடிய விஷம் தடவிய கடிதம்... குறிவைக்கப்பட்டாரா ட்ரம்ப்?! - தீவிர விசாரணை

வெள்ளை மாளிகைக்கு வரும் அனைத்து கடிதங்களும் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் முன்பே, சோதனை செய்யப்படும். அப்படி ஒரு கடிதத்தைச் சோதனை செய்தபோது, அதில் கொடிய வகை விஷமான ரிசின் தடவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் கனடாவிலிருந்து வந்திருக்கக் கூடும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

ட்ரம்ப்

இந்த கடிதம் அனுப்பப்பட்ட முகவரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன், கனடா அதிகாரிகளும் இணைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாது, எஃப்.பி.ஐ மற்றும் அமெரிக்க ரகசிய சேவையும் விசாரணை செய்துவருகிறது. இதுவரை கடிதத்தை அனுப்பியது யார் என்ற விவரங்கள் தெரியவரவில்லை.

ரிசின் எனப்படும் நஞ்சு, ஆமணக்கு பிசினிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகை நஞ்சை உட்கொண்டாலோ, சுவாசித்தாலோ அல்லது செலுத்தப்பட்டாலோ வாந்தி, குமட்டல் மற்றும் உட்புற ரத்தப்போக்கு ஏற்படும். அதோடு உடலுறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். இந்த வகை நஞ்சுக்கு மாற்றுமருந்து இல்லை, இந்த நஞ்சு எடுத்துக்கொண்ட அளவை பொறுத்து 36 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

இதற்கு முன்பு பலமுறை அமெரிக்க அதிபர்களுக்கு விஷயம் தடவிய கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கும் ரிசின் தடவிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2018-ம் ஆண்டு ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக, அமெரிக்கக் கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/deadly-poisoned-letter-send-to-us-president-donald-trump-at-white-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக