Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

அக்டோபரில் தியேட்டர்கள் திறக்குமா... திரையுலகம் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

கொரோனா தினமும் தனது ஹைஸ்கோரை அப்டேட் செய்து கொண்டே இருந்தாலும், தமிழகம் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் இயங்க ஆரம்பித்துவிட்டப் பின்னரும், திரையரங்குகள் திறப்பதில் மட்டும் இன்னும் யோசனைகள் இருக்கின்றன.

அக்டோபர் மாதத்தில் இருந்து திரையரங்குகள் திறக்கப்படலாம் என்கிற அறிவிப்பு விரைவில் வரும் என திரைத்துறையினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன?!

ஒவ்வொரு மாதமும் லாக்டெளனின் தளர்வுகளை அறிவிக்கும் போதும், திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களின் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்படும். ஆனால், அக்டோபரில் இருந்து திரையரங்குள் திறக்கப்பட்டால் அரசாங்கம் கடுமையான விதிமுறைகளையும் பின்பற்ற சொல்லும் என்கிறார்கள், விவரம் தெரிந்தவர்கள். 40 சதவிகிதம் முதல் 50 சதவிகித ஆள்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படவேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். திரையரங்குக்குள் நுழையும் முன் ஒவ்வொருவரின் வெப்பநிலையும் சோதனை செய்யப்பட வேண்டும். ஒரு நாளுக்கு மூன்று காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி. ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடையே குறைந்தது 1.30 மணி நேர இடைவெளி இருக்கவேண்டும்.

Theatres, தியேட்டர்

முதல் காட்சியில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காலியாக விடப்படும் இருக்கைகளில், அடுத்த காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் உட்காரவைக்கப்படவேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் கிருமிநாசினிகள் கொண்டு திரையரங்கை முழுமையாக சுத்தம் செய்யவேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்கலாம் என்கிற அறிவிப்பு, செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்க உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் சலுகைகள் கேட்டு சில கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். அதேபோல், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக க்யூப்பிற்காக வி.பி.எஃப் கட்டணத்தை கட்டிவந்த தயாரிப்பாளர்கள் இனி கட்ட மாட்டோம் என்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலமும், ஆன்லைனில் புக் செய்யப்படும் டிக்கெட்களின் மூலம் திரையரங்கிற்கு கிடைக்கும் தொகையில் தயாரிப்பாளருக்கு பங்கு தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள்.

Qube

"எங்களது படத்தைப் பார்ப்பதற்காகத்தான் மக்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்கிறார்கள், அவர்கள் தியேட்டருக்கு வருவதால்தான் உங்களால் விளம்பரமும் ஒளிப்பரப்ப முடிகிறது" என தயாரிப்பாளர்கள் தரப்பில் லாஜிக்காக காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதற்கு திரையரங்கு உரிமையாளர்களால் சரியான பதிலை கூற முடியவில்லை. திரையரங்க உரிமையாளர்கள் இந்தக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், புதியப் படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

Also Read: திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?

’பொன்மகள் வந்தாள்’, ‘டேனி’, ‘காக்டெய்ல்’, ‘லாக்கப்’ என சில சிறிய படங்கள் மட்டுமே ஓடிடி-யில் நேரடியாக வெளியான நிலையில், அக்டோபர் 30-ம் தேதி, அமேசான் தளத்தில் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படம் ரிலீஸாகும் என்கிற அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் பல பெரிய படங்களை டார்கெட் செய்த ஓடிடி தளங்கள், அதில் சில படங்களை வாங்கும் தறுவாயில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘க.பெ ரணசிங்கம்’ ஜீ5 மற்றும் ஜீ ப்ளெக்ஸ் (DTH) தளத்தில் வெளியாக இருக்கிறது. அதேபோல், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தையும் ஓடிடி ரிலீஸுக்கு விற்றுவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

Soorarai Pottru

இயக்குநர் ஆர்.கண்ணன் அதர்வாவை வைத்து இயக்கியிருக்கும் ‘தள்ளிப்போகாதே’ படமும், சந்தானத்தை வைத்து எடுத்த ‘பிஸ்கோத்’ படமும் ஓடிடி-க்கு கொடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படமும் சிம்புதேவன் இயக்கியிருக்கும் ‘கசட தபற’ படமும் ஓடிடி-யில் ரிலீஸாகும் என்கிறார்கள். இதற்கிடையில், விஷால் நடித்திருக்கும் ‘சக்ரா’ படத்தையும் ஓடிடி-க்கு விற்றிருக்கிறார்கள். ‘ஜகமே தந்திரம்’, ‘பூமி’ படத்தை வாங்குவதற்கு பெரிய போட்டி இருந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் இதனை தியேட்டரில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தியேட்டர் திறக்க மாட்டார்கள் என்றும் அப்படியே திறந்தாலும் மக்கள் வரமாட்டர்கள் என்றும் நினைத்து தனது படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்யவிருந்த சில தயாரிப்பாளர்கள், தமிழகத்தின் தற்போதை நிலையைப் பார்த்து தங்களது படங்களை தியேட்டரிலேயே ரிலீஸ் செய்யலாம் என முடிவை மாற்றியுள்ளனர்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/problems-behind-theatre-reopening-and-other-issues-in-tamil-cinema

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக