Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சென்னை: 2-வது மாடியிலிருந்து தள்ளி விடப்பட்ட மாணவன்! - கொலை வழக்கில் தாய், மகன் கைது

சென்னை அரும்பாக்கம், திருவேங்கடகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர், கொத்தனராக வேலைப்பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீராம் (19). இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். குப்புசாமிக்கு அந்தப்பகுதியில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டில் ராஜா என்பவர் குடும்பத்துடன் லீஸிக்கு குடியிருந்து வந்தார். லீஸ் பணம் தொடர்பாக குப்புசாமிக்கும் ராஜாவுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

கொலை

இந்தநிலையில் குப்புசாமி வீட்டின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீடு காலியானது. அந்த வீட்டுக்கு ராஜாவின் மகன் சங்கர் (28) பூட்டு போட்டு வைத்தார். அதனால் அந்த வீட்டுக்குள் குப்புசாமி குடும்பத்தினர் செல்ல முடியவில்லை. சம்பவத்தன்று அந்தப் பூட்டை குப்புசாமியின் மகன் ஸ்ரீராம் உடைக்க முயன்றார். அதைப்பார்த்த சங்கர், அவரின் அம்மா பானு ஆகியோர் பணத்தை கொடுத்துவிட்டு பூட்டின் மீது கையை வை என கூறியுள்ளனர். அதற்கு ஸ்ரீராம், எங்கள் வீட்டுக்கு உங்களை யார் பூட்டு போடச் சொன்னது என்று கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது 2-வது மாடியிலிருந்து ஸ்ரீராமை சங்கரும் பானுவும் கீழே தள்ளி விட்டுள்ளனர். அதனால் மாடியிலிருந்து கீழே விழுந்த ஸ்ரீராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக இறந்தார்.

கொலை செய்யப்பட்ட ஸ்ரீராம்

Also Read: சீர்காழி: கோலம்போட வந்த ஆசிரியர் கொலை! - விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது

இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், ஸ்ரீராமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பானு, சங்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள சங்கருக்கு சிறுநீரக கோளாறு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/college-student-murdered-in-chennai-mother-son-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக