நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட கல்ஹல்லா காப்பு காட்டிற்குள், கால்நடைகளை மேய்க்கவும் விறகு சேகரிக்கவும் குரும்பர்பாடியைச் சேர்ந்த பழங்குடிகள் செல்வது வழக்கம்.
அப்படிச் சென்றவர்களில் ஒருவரான கெளரி என்ற ஐம்பது வயது பழங்குடி பெண்ணை நேற்று முன்தினம் (31.09.2020) புலி தாக்கியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்தலியே பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் கண்ணெதிரே நடைபெற்ற இந்த துயரம் முதுமலை சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அந்த புலி, ஏன் மனிதனை தாக்கியது என்பதற்கான காரணத்தை அறியவும், அடுத்த தாக்குதல் நடக்காமல் இருக்கவும் குறிப்பிட்ட, புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``இந்த சம்பவம் எங்களுக்கு ரொம்ப வருத்தமான ஒன்னா இருக்கு. மொதல்ல அந்த புலி எதுனு கண்டு பிடிக்கனும், அப்பறம் அந்த புலிக்கு உடம்புல எதும் பிரச்னைகள் இருக்கா? இல்ல வயசு ஜாஸ்தியா? இந்த மாதிரி சில விஷயங்களை தேடிக்கிட்டு இருக்கோம்.
இதுக்காக 15 இடத்துல கேமரா டிரோப்பிங் வச்சிருக்கோம். அப்பறம் ட்ரோன் மூலமாவும் தேடுறோம். கொஞ்ச நாளைக்கு காட்டுக்குள்ள பழங்குடிகள் யாரையும் போக வேண்டாம்னு சொல்லிருக்கோம். அடுத்த அட்டாக் நடக்காம தடுக்கும் வேலையில் கவனமா இருக்கோம்” என்றார்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``விசாரணையில் இது ஆட்கொல்லி புலியாக இருக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் புலியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அச்சமடையத் தேவையில்லை" என்றார்.
source https://www.vikatan.com/living-things/animals/tiger-searching-operation-in-mudumalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக