கொங்கு மண்டல மக்களை குறிவைத்து சூறையாடியது ஈமு கோழி பண்ணைத் திட்ட மோசடி.. ஏழை எளிய விவசாயிகள் பலரும் சுமார் 1,000 கோடி ரூபாய்க்குமேல் ஈமுவை நம்பி ஏமாந்தனர். கவர்ச்சிகர அறிவிப்புகள், நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் ஸ்கெட்ச் போட்டு இந்த மோசடியில் ஈடுபட்டனர்.
Also Read: மண்ணுளி முதல் ஈமு வரை! (மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 11)
பலநூறு கோடிகளை சுருட்டிய அந்த நிறுவனத்தால், பலர் தற்போது நிற்கதியாகியுள்ளனர். அவற்றை நம்பிப் பணத்தைப் பறிகொடுத்தவர்களில் பலர் உயிரிழந்தும் விட்டனர். ஆனால், ஈமு கோழி மோசடி நிறுவன உரிமையாளர்கள் பலரும் கார், பங்களா என பந்தாவாக வலம் வருகிறார்கள்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் 2013-ம் ஆண்டு ஜே.பி.ஆர் ஈமு அக்ரி பார்ம்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்படி, அந்த நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டு, அதற்கான கொட்டகை, மாத பராமரிப்பு தொகையாக ரூ.6,500 ஆண்டுக்கு ரூ.15,000 போனஸ், இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு முதலீடு செய்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தனர்.
அதேபோல, ரூ.1.5 முதலீடு செய்தால் (ஈமு கோழி குஞ்சுகள் இல்லாமல்) மாதம் ரூ.7,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ் இரண்டு ஆண்டுகளில் முதலீட்டு தொகை திருப்பியளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தினர். அதைப் பார்த்து ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.
ஆனால், சொன்னபடி பணத்தை வழங்காததால், 2014-ம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகாரளித்தனர். மொத்தம் 78 பேரிடம் ரூ.1.67 கோடி மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பிட் (தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு) நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அதன்படி, ஜே.பி.ஆர் ஈமு அக்ரி பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர்கள் பத்மநாபன், ஜெயகுமார், ராஜசேகர் ஆகிய மூவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் மொத்தமாக 58 லட்சம் ருபாய் அபராதம் விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/10-years-jail-for-three-judgment-on-emu-scam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக