தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பணியிலிருந்த அரசு அலுவலர்களுக்கு காலை 10 மணி வரை டிபன் வரவில்லை. பாதுகாப்புப் பணியிலிருந்த ஆந்திர போலீஸ் ஒருவர், `நான் பி.பி பேஷன்ட், மாத்திரை போட வேண்டும். ஆனால் இன்னும் டிபன் வரவில்லை. சாப்பிடலன்னா மயக்கம் வந்துரும்’ எனப் பசியால் அவதிப்பட்டு தெலுங்கில் புலம்பிக்கொண்டிருந்தார். இதை கவனித்த ஒருவர், அவரைத் தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு அழைத்துச் சென்று சாப்பிடவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. வாக்குப்பதிவு குறித்த அவசியத்தைப் புரிந்துகொள்ளவும், ஜனநாயகத்தின் நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளவும் பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருந்தனர். பிள்ளைகள் தன் அம்மாவிடம் ஓட்டு குறித்து ஆர்வமாகக் கேட்டதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது.
கொரோனா பரவுதலைத் தடுப்பதற்கான பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. தன்னார்வலர்கள் வாக்காளர்களுக்கு உடலின் வெப்பத்தை செக் செய்த பின்னர் கையுறை கொடுத்து அதை அணிந்த பிறகே உள்ளே அனுமதித்தனர். வாக்குச்சாவடிக்குள் வட்டமிட்டு சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாக்குச்சாவடிக்கு வெளியே அப்படியான ஏற்பாட்டைப் பல இடங்களில் செய்யவில்லை.
இதனால் வாக்களிப்பதற்காக சமூக இடைவெளி இல்லாமலேயே வாக்காளர்கள் வரிசையில் நின்றனர். பணியிலிருந்த அரசு அலுவலர்கள் அதைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. டெம்பரேச்சர் செக் செய்யும்போது உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் ஓரமாக உட்கார வைத்துவிடுகின்றனர். இதனால் கிராமப் பகுதிகளில் பலர் ஓட்டுப் போடாமலேயே சென்றனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க-வினர் லோடு ஆட்டோக்களில் வாக்காளர்களை அழைத்து வந்திருந்தனர். வாக்குச்சாவடியில் பணியிலிருந்த அரசு அலுவலர்கள், போலீஸார் ஆகியோருக்குக் குறித்த நேரத்தில் உணவு வழங்கவில்லை என்ற புலம்பலைக் கேட்க முடிந்தது. இதனால் பலரும் பசியால் அவதிப்பட்டபடியே பணிபுரிந்தனர்.
குறிப்பாக ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருங்குளம் வாக்குச்சாவடியில் பணிக்கு வந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் ஒருவர், `எனக்கு பி.பி இருக்கு. நேரத்துக்குச் சாப்பிடலைன்னா சரியா வராது. ஆனா பத்து மணி ஆச்சு. இன்னும் டிபன் வரலை’ எனப் புலம்பிக்கொண்டிருந்தார். ஆந்திராவிலுள்ள தன் குடும்பத்தினரிடம் போன் செய்தவர் இப்ப வரைக்கும் டிபன் வரலை. எங்களை அரசும் கண்டுக்கலை, கட்சிக்காரங்களும் கண்டுக்கலை. என்னால பசியைக் கட்டுப்படுத்த முடியலை. மயக்கம் வர்ற மாதிரி இருக்கு’ எனத் தெலுங்கில் புலம்பிக்கொண்டிருந்தார்.
இதை கவனித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு அந்த போலீஸை அழைத்துச் சென்று சாப்பிடவைத்த பிறகு கொண்டு வந்து விட்டார். அவர்கிட்ட, `எனக்குத் தமிழ் தெரியாது. நான் பிபி பேஷன்ட். பசி தாங்க முடியாம என் வீட்டுக்கு போன் பண்ணிப் புலம்பினேன். நீங்க என்னை அழைச்சுக்கிட்டு போய் சாப்பிடவெச்சீங்க. ரொம்ப நன்றி’ எனத் தமிழ் கலந்த தெலுங்கில் கூறிவிட்டு பி.பி மாத்திரையைப் போட்டார். இதுபோல் பல இடங்களில் சாப்பாடு தாமதமாகவே வந்ததாகப் பணியிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில் சத்யா என்ற பெண் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து வந்திருந்தார். ஆனால் பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க முடியாமல் நீண்டநேரம் வாக்குச்சாவடிக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தவர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அய்யம்பேட்டை வாக்குச்சாவடி ஒன்றில் அர்ச்சனன் என்ற 55 வயது முதியவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்த நிலையில் திடீரென மயங்கிக் கீழே விழுந்து, இறந்துவிட்டார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அழுதுகொண்டே வாக்குச்சாவடிக்கு முன் திரண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/election/an-spot-visit-to-thanjore-polling-booths
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக