சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பென்ஜமின், முகப்பேரில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆதரவாளர்களுடன் 6-ம் தேதி சென்றார். அப்போது தி.மு.கவினருக்கும் அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது அமைச்சர் பென்ஜமின் அநாகரீகமாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக அமைச்சர் பென்ஜமீனும் தி.மு.கவினரும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதன்பேரில் இருதரப்பினர் மீதும் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் பா.பென்ஜமின் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் நொளம்பூர், எஸ் அன்ட் பி கார்டனில் வசித்து வருகிறேன். சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறேன். இந்தச் சூழலில் 6.4.2021-ல் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சம்மந்தமாக ஆய்வு செய்ய சென்றேன். அப்போது சென்னை முகப்பேர் கிழக்கு வீரமா முனிவர் தெரு, எம்.ஜி.ஆர். ஆதர்ஷ் பள்ளி அருகில் பெண்கள் வாக்களிக்க வருவதை தடுக்கும் நோக்கத்துடன் தி.மு.கவினர் பெண்களிடம் பாலியல் தொல்லை உள்ளிட்ட மேலும் பல அராஜ செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதைப் பார்த்த நான் அது சம்மந்தமாக அங்கிருந்த தி.மு.கவைச் சேர்ந்த நவராஜ், நவசுந்தர் மற்றும் தி.மு.க முகவர்களிடம் கேட்டபோது அவர்கள் என்னை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியதோடு மட்டுமல்லாமல் என்னுடைய வெற்றியை தடுக்கும் பொருட்டு எச்செயலும் செய்வோம் என்று மிரட்டினார்கள். என்னுடைய காரையும் வழிமறித்து என்னை தாக்கவும் முயன்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், திருவள்ளூர் மாவட்ட தேல்தல் அலுவலர், மதுரவாயல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகாரளித்தேன். இந்தச் சம்பவத்தை கவனமாக ஆய்வு செய்து பெண்கள் வாக்களிக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் என் மீது சட்டத்துக்கு புறம்பான வகையில் நடந்த தி.மு.கவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Also Read: குமரி: எம்.எல்.ஏ-வின் கட்சிப் பதவி பறிப்பு! - தேர்தல் முடிந்ததும் அதிரடிகாட்டிய காங்கிரஸ்
இதுதொடர்பாக தலைமைக் காவலர் மதியழகன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 143, 294 (b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை முகப்பேர் மேற்கு பள்ளிகூடம் தெருவைச் சேர்ந்த நவராஜ் என்பவர் கொடுத்த புகாரில் ``மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகப்பேர் கிழக்கு 92-வது வட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஆதர்ஷ் பள்ளி பூத் எண் 408, 409,410,411 கொண்ட வாக்குச்சாவடியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலை 9.30 மணியளவில் அ.தி.மு.க அமைச்சர் பென்ஜமின் மற்றும் அ.தி.மு.க பிரமுகர்கள் சுமார் 25 பேர் திடீரென வாக்குச்சாவடி உள்ளே நுழைந்து வாக்காளர்களிடம் அமைதியை சீர்குலைக்க முற்பட்டனர். அதை தடுக்க முயன்ற தி.மு.க மதுரவாயல் வடக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் நவராஜ் ஆகிய என்னையும் என்னுடன் இருந்த பொதுமக்களையும் பார்த்து சாதி மற்றும் அவதூறாக அமைச்சர் பேசினார். அதோடு அவர், மதவெறியை தூண்டும் வகையிலும் தேர்தலில் மக்களின் வாக்கை திசை திருப்பம் வகையிலும் பேசினார். அமைச்சர் என்பதை மறந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அங்கு கலவரத்தை ஏற்படுத்தும் வைகயில் அமைதியான ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலை குலைக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு மாறாக செயல்பட்ட பென்ஜமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரிலும் தலைமைக் காவலர் மதியழகன் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 143, 294 (b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-case-filed-against-minister-benjamin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக