Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

திருச்சி:`எல்லோருக்கும் பணம் கொடுத்தாங்க; எங்களுக்குக் கொடுக்கலை!' - வாக்குச்சாவடியில் நடந்த களேபரம்

``தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் மாறி மாறி எல்லோருக்கும் பணம் கொடுத்திருக்காங்க. எங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கலை... எங்களைப் பார்த்தா மனிதராகத் தெரியவில்லையா?" என்று நாடோடியின மக்கள் வாக்குச்சாவடியில் பிரச்னையில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி. இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் அன்பில் மகேஷ், அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ப.குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் முருகானந்தம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சோழசூரன், தே.மு.தி.க சார்பில் செந்தில்குமார் உட்பட பலர் போட்டி போடுகிறார்கள். இந்தத் தொகுதியில் முக்குலத்தோருக்கு அடுத்தப்படியாக முத்தரையர், பட்டியலினத்தவர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன. களத்தில் தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.

இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் கடும் போட்டி நிலவுவதால், இரு கட்சிகளுமே வெற்றி பெற மக்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பணம், முழுமையாக போய்ச் சேரவில்லை என்று தேவராயநேரி பகுதியில் வாழும் நாடோடியின மக்கள் வாக்குச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடோடியின மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம். ``இங்கு 700-க்கும் மேற்பட்ட நாடோடியின மக்கள் வாழ்ந்துகொண்டிருகிறார்கள். தி.மு.க-காரங்க ரூபாய் 500. அ.தி.மு.க ரூ.1,000னு எல்லாருக்கும் பணம் கொடுத்துருக்காங்க. ஆனா எங்க பகுதியில ஒருத்தருக்குக்கூட பணம் கொடுக்கலை. இதைக் கேட்டதுக்கு `தலைமை உங்களுக்குப் பணம் கொடுக்கலை’ன்னு சொன்னாங்க. கட்சிக்காரங்ககிட்ட கேட்டோம். அவங்க `எல்லாத்துக்கும் பணம் கொடுக்கச் சொல்லி கரெக்ட்டா பணம் அனுப்பிட்டாங்க.

போராட்டம்

உங்க தொகுதிப் பொறுப்பாளர்களிடம் கேளுங்க’ என்றார்கள். மீண்டும் அவங்ககிட்ட கேட்டா `பணம் வரலை. வந்தா தர மாட்டோமா’ன்னு சொல்றாங்க. தி.மு.க -அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் மாறி மாறி எல்லாருக்கும் பணம் கொடுத்திருக்காங்க. எங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கல... எங்களைப் பார்த்தால் மனுஷங்களாத் தெரியவில்லையா, எங்களை ஒதுக்க என்ன காரணம்? அந்த ஆத்திரத்தில்தான் நாங்கள் பிரச்னையில் ஈடுபட்டோம். இது தவறா..." என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/people-protest-in-polling-booth-for-not-giving-money

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக