Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

வெண்ணிலா கேன்டீன்... சேர் மிட்டாய் கடை..! - தொட்டியம் குளு குளு நினைவுகள் #Nostalgia #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திருவிழா என்றாலே கொண்டாட்டம்தான். திருவிழா காப்புக்கட்டு முதல் உறவினர்களை அழைப்பது, திருவிழா நெருங்கும் சமயம் அவர்களுடைய வருகைக்காகக் காத்திருப்பது, கிடாவெட்டு விருந்து, வாண வேடிக்கை, திருவிழா கடை வீதி சுற்றுதல் என மனதிற்கு மகிழ்ச்சி தரும் பல நிகழ்வுகள் உண்டு. வருடமொருமுறை அனுபவித்த அது போன்றதொரு தருணங்களின் தொகுப்பை முக்கியமாக தொட்டியம் மதுரை காளியம்மன் திருவிழா அனுபவங்களை நான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் தவறாது நடைபெறும் இந்த மதுரை காளியம்மனை பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையுடன் இந்த பதிவை தொடங்குவதே சிறப்பாக இருக்கும்.

தொட்டியத்தை சேர்ந்த பறை இசைக்கலைஞர் ஒருவர் ஒருமுறை மதுரைக்குத் தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்குத் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார்.

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

அங்கு காளியம்மன் திருவிழாவில் அந்த உறவினருடன் சேர்ந்து இவரும் பறை இசைக்க, தொட்டியத்துகாரரின் வாசிப்பால் ஈர்க்கப்பட்ட காளியம்மன் விழா முடிந்து ஊர் திரும்பியவருடன் தொட்டியத்திற்குப் பயணப்பட்டதாகவும் அதனால் அந்த மதுரைக்காரரும் தன் உறவினருடன் சேர்ந்து கொள்ள அம்மனுடன் சேர்த்து மூன்று பேரும் தொட்டியம் வந்து அது முதல் அம்மன் இங்கு இருந்து அருள்பாலித்து வருவதாக வரலாறு.

இன்றும் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் அந்த இரு பறை இசை கலைஞர்களுக்கு சிலை இருக்கிறது அம்மனுடன் சேர்த்து அவர்களுக்கும் மரியாதையை செய்யப்படுகிறது.

இந்த காளியம்மன்தான் மதுரையை அழித்து தெய்வமாக வானுலுகம் சென்ற கண்ணகி (கோவலன்) என்றொரு கூற்று இருக்கிறது. அதன் உண்மை தன்மை பற்றிய எந்தத் தரவுகளும் என்னிடமில்லை.

என்னுடைய பால்ய வயதுகளில் எப்போதும் என் அம்மாவுடன் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரு நாள்களுக்குப் பிறகு அவர்களுடனேயே நானும் திரும்பி வந்துவிடுவேன். முன்னரே நான் என்னுடைய மகேந்திரமங்கலம் பற்றிய பதிவில் குறிப்பிட்டது போல் என் அம்மாவினுடைய குடும்பம் மிக பெரியது. என் அம்மாவுடன் பிறந்தவர்களில் முதலில் பிறந்த அக்கா தொட்டியத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்கள். தொட்டியம் திருவிழாவிற்கு அவர்களிடமிருந்து வருடந்தோறும் அழைப்பு வந்துவிடும். அப்பொழுது எல்லாம் அஞ்சலட்டையில் தகவலை என்னுடைய அண்ணாக்கள் யாராவது எழுதி அனுப்புவார்கள்.

பங்குனி உத்திரத் திருவிழா!

பெரும்பாலும் ஆறுமுகம் அண்ணா என்று என் வயதொத்த சகோதரர்கள் அனைவரும் அழைக்கும் ஸ்ரீதர் அண்ணாதான் கடிதம் எழுதுவார். இப்போது கைபேசி மூலம் நேரடியாக பேசி அழைப்பு விடுக்கிறார். எங்களுடைய ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் யாரும் பெரும்பாலும் தங்கள் அம்மாக்களின் உடன் பிறந்த சகோதரிகள் அனைவரையும் அம்மா என்றே அழைப்போம். சின்னம்மா என்றோ பெரியம்மா என்றோ மிக அரிதாகவே அழைப்போம்.

ஆறுமுகம் அண்ணாவுக்கும் எங்களுக்குமான வயது வித்தியாசம் சற்று அதிகம்தான் என்றாலும் அவருடனான எங்களுடைய பிணைப்பு ஒரு நண்பர்களுக்கு இடையேயான பிணைப்பு போன்றது. எந்தக் குடும்ப விசேஷத்திற்குச் சென்றாலும் அனைவரும் அவர் எங்கிருக்கிறார் என்றே தேடுவோம். அவரும் எங்களுக்கு முன்பே வந்துவிட்டால் நாங்கள் உள்ளே நுழையும்போதே எங்களை பார்த்து கை அசைப்பார்.

என்னுடைய பெரியம்மாவின் வீடு நூறு வருடங்கள் பழமையான வீடு (இந்த வீடு பற்றிய மிக சுவரசியமான ஒரு கதை உண்டு, அதை பிறிதொரு சமயம் விரிவாக பேசுவோம்). வீட்டை ஒட்டியே வயல்கள் ஆரம்பிக்கும். வாழை மற்றும் நெல் வயல்கள் இருக்கும். வீட்டின் பின்புறம் சமையல் கட்டு இருக்கும். ஒரு பெரிய கருவேப்பிலை மரம் இருக்கும். ஒரு அடி பம்பு இருக்கும். வீடு சுற்றி எப்பொழுதும் ஒரு மண்ணின் ஈர மணம் இருந்து கொண்டே இருக்கும்.

நிறைய பேர் இருப்போம் கிடைத்த இடத்தில் படுத்து கொள்வோம். மொட்டை மாடி திண்ணை உள்ளே வெளியே என்று எங்கேனும் ஓரிடத்தில். அனைவருக்கும் பாய் மற்றும் ஒரு போர்வை நிச்சயம் கிடைக்கும். தலையணை கிடைத்தால் அதிர்ஷ்டம். அல்லது இருவர் சேர்ந்து ஒரு தலையணையில் தலை வைத்து படுத்து கொள்வோம்.

காலை எழுந்தவுடன் பல் விளக்கிய பிறகு ஆறுமுகம் அண்ணா, "ரோட்டுக்கு போலாம் வரியாடா...." என்று கூப்பிடுவார்.

"எதுக்குண்ணா..." என்றால் "அப்ப நீ வீட்லயே டீ குடி....." என்று கேலியாகச் சொல்வார்.

"வேணாம் வேணாம் நானும் உங்க கூட வரேன் ..." என்று கிளம்பி விடுவோம். இது பற்றி எங்கள் பெரியம்மா ஏதும் சொல்ல மாட்டார். நிறைய மனிதர்கள் (வந்திருக்கும் உறவினர்களும் சேர்த்து) இருக்கும் வீட்டில் அனைவருக்கும் காலை நேரத்தில் இது போல் காபியோ அல்லது டீயோ வைத்து பரிமாறுவது சற்று சிரமமான காரியம். குறைவான பாலில் நிறைவான நீர் கலந்து அதீத இனிப்பு சுவையுடன் இருக்கும் ஒரு கிராமத்து டீ கடையின் டீ போலவே இருக்கும். அதனாலேயே அண்ணாவுடன் கேன்டீன் காபி குடிக்க சென்றுவிடுவோம்.

டீக்கடை

பிறகு வீட்டிற்கு வந்து காலை உணவை முடித்துவிட்டு வயலுக்குச் செல்லும்போது என்னையும் சில சமயம் அழைத்து செல்வார். எங்களுடைய பெரியம்மாவின் வயலில் பெரும்பாலும் நெல் அல்லது வாழை பயிரிடுவார்கள். வாழைக்கு குலை தள்ளும் சமயம் காற்றினால் வாழை ஒடியாமல் இருக்க வாழை மரத்திற்கு அருகில் சவுக்கு நட்டு முட்டு கொடுத்து ஒரு கதம்ப கயிற்றினால் கட்டிவிடுவார்கள். அது போன்ற சமயங்களில் நானும் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டிருப்பேன்.

மாலை ஒரு ஐந்து மணி வாக்கில் மீண்டும் வெண்ணிலா கேன்டீன் (Canteen) செல்வோம். வாழைக்காய் பஜ்ஜியும் மெது வடையும் போடுவார்கள். கூடவே ஒரு தக்காளி சட்னியும் கொடுப்பார்கள். நிச்சயம் இரண்டு பஜ்ஜி இரண்டு வடை சாப்பிடுவேன். பிறகு காபியோ அல்லது டீயோ குடித்துவிட்டுச் சிறிது நேரம் அவருடைய நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பர். நானும் அதுவரை அவர்களுடன் பொழுதை கழித்து விட்டு ஒரு ஏழு அல்லது ஏழரை மணி வாக்கில் வீட்டிற்கு வருவோம்.

கிராமம்

இரவு உணவை முடித்துவிட்டு இரவு காட்சி சினிமா வெங்கடேஸ்வரா (மிக பழைய திரையரங்கம், இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் போட்டியிட இயலாமல் இன்று சிதிலடமைந்துவிட்டது) திரையங்கத்திலோ அல்லது மாணிக்கம் திரையரங்கத்திலோ ஏதேனும் புதிய திரைப்படத்திற்கு கூட்டி சென்று முந்தய காட்சி முடியும் தருவாயில் அவருடைய நண்பர்களான திரையரங்க மேலாளர்கள் (Theater Manager) உதவியுடன் எங்களை அமர வைத்துவிட்டு தூங்கிவிடுவார். இடைவேளை நேரத்தில் வந்து ஏதேனும் நொறுக்கு தீனி வாங்கி கொடுத்து விட்டு சென்று விடுவார். படம் முடிந்ததும் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப அழைத்து செல்வார். நான் தனியாகவும் அல்லது மூன்று நான்கு பேரோ இது போல அந்த நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு தவறாமல் கூட்டி செல்வார்.

திருவிழா நாள்களில் மாலை நேரத்தில் கடைவீதி சுற்றுவதற்காக ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து கிளம்புவோம். எங்கள் அண்ணாவுடைய சலவை செய்த வெள்ளை வேட்டி (ஆறுமுகம் அல்லது மனோகர் அண்ணாவுடையது) எப்போதும் வீட்டில் நிறைய இருக்கும். அதிலிருந்து ஆளுக்கு ஒரு வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டு கிளம்புவோம். பள்ளி நாள்களில் அவ்வாறு வேட்டியை கட்டிக்கொண்டு சுற்றுகையில் நாங்களும் பெரிய மனிதன் போல உணர்வோம். கடை தெருக்களைச் சுற்றுவோம்.

திருவிழா

திருவிழா சமயம் போட பட்டிருக்கும் மிட்டாய் கடைகளை வேடிக்கை பார்த்தபடியே கூட்டத்தில் நடந்து செல்வதே ஒரு இனிமையான அனுபவம். யாருடைய கையிலும் பெரிதாக காசு ஒன்றும் இருக்காது. எப்போதாவது அந்த சேர் மிட்டாய் கடையில் (அந்தக் காலத்தில் நிறுத்தும் அளவையை பழைய சேர் முறையில் நிறுத்து கொடுத்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். இனிப்புகளை ஒரு சேர் இரண்டு சேர் என்று எடையிட்டு கொடுப்பார்களாம்) பெரிய பூந்தி வாங்கி சாப்பிடுவோம். எனக்கு அது மிகவும் பிடிக்கும். அதன் பிறகு திருச்சி BG நாயுடு ஸ்வீட்ஸ் கடையிலும் மயில் மார்க் மிட்டாய் கடையிலும் பெரிய பூந்தி சுவை அருமையாக இருக்கும். திருச்சி செல்லும்போது முடிந்தால் இந்த இரண்டு கடையில் ஏதேனும் ஒன்றில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.

அங்கே அருகில் ஒரு கடையில் பால் மல்லி காபி போடுவார்கள். உங்களுக்கு சுக்கு மல்லி காபி பற்றி தெரிந்திருக்கும். அந்த கடையில் அந்த சுக்கு மல்லி காபியில் சூடான பாலைக் கலந்து கொடுப்பார்கள். மிகுந்த சுவையாக இருக்கும். அப்படியே அங்கு விற்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு கொண்டே சுற்றிக்கொண்டிருப்போம். இரவு அங்கே ஒரு சைவ உணவகம் (பெயர் மறந்துவிட்டது) உண்டு. அந்த உணவகத்தில் புரோட்டாவும் குருமாவும் சாப்பிட்டு விட்டு இரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணி வரை சுற்றி கொண்டிருந்து விட்டு வீட்டிற்குத் திரும்பி வருவோம். கிடைத்த இடத்தில பாயை விரித்து உறங்கி விடுவோம்.

காலை எழுந்து காலை உணவை முடித்து விட்டு ரம்மி விளையாடுவோம். பின் மதிய உணவு முடிந்து வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காவிரி ஆற்றுக்குச் சென்று துணிகளை துவைத்து காய வைத்து இரண்டு மணிநேரம் ஆற்றில் ஆனந்தமாகக் குளியல் போட்டுவிட்டு வீட்டிற்கு வருவோம். தொட்டியத்தில் நாங்கள் இருக்கும் நாள்களில் இதுதான் எங்களுடைய வாடிக்கை.

கிடாவெட்டு இல்லாத திருவிழாவா? இங்கும் கிடாவெட்டி விருந்து வைக்கும் நாளில் எங்களுடைய உறவினர்கள் அனைவரும் வருவார்கள். நான் சைவம் (?) (முட்டை மட்டும் சாப்பிடுவேன்) என்பதால் அன்று மட்டும் எனக்கு ரசம் மற்றும் மோருடன் உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் அவித்த முட்டை அல்லது ஆம்லெட் இருக்கும்.

கறி விருந்து

பெரிய தேரும் சிறிய தேரும் ஊரை சுற்றி கடைசியாக வானபட்டறை மைதானத்திற்கு வரும் இறுதி நாளுடன் திருவிழா நிறைவடையும். அன்றுதான் வாணவேடிக்கை நடக்கும். சுமார் மூன்று மணி நேரம் நடக்கும் இந்த வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அன்று மட்டும் தொட்டியத்தில் இரவு பத்து மணி அளவில் எங்கும் மனித தலைகளாகவே இருக்கும். பல ஆயிரம் மக்கள் அன்று இரவு அங்கே கூடுவார்கள். ஊர் மக்கள் பல குழுவாகப் பிரிந்து இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிக்குப் பொருளுதவி செய்து நடத்துவார்கள். சிறப்பான வாணவேடிக்கை நிகழ்த்தும் குழுவிற்குப் பரிசுகளும் உண்டு. இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பே சுமார் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு இதற்காக செலவு செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய கல்லூரி காலம் வரை நான் தவறவிடாமல் கலந்து கொண்ட திருவிழாக்களில் மிக முக்கியமானது இந்தத் தொட்டியம் திருவிழா என்றால் மிகையில்லை. அதன் பிறகு ஓரிரு முறைகள் திருவிழா சமயம் சென்றாலும் அங்கு தங்கி மேலே சொன்னது போல் அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பெங்களூருவிலிருந்து என்னுடைய ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தொட்டியம் பேருந்து நிலையத்தை கடக்கையில் காரிலிருந்து என்னுடைய தலை தானாக கேன்டீன் இருக்குமிடத்தை நோக்கி திரும்பும். அந்த ஒரு நொடி பொழுதில் நான் மேற்சொன்ன அனைத்து நினைவுகளும் மனதில் சரேலென்று வந்து போகும்.

தேர் திருவிழா

சமீபத்தில் சில நாள்களுக்கு முன்பு ஆறுமுகம் அண்ணாவை ஒரு புதுமனை புகு விழாவில் சந்தித்தேன். விழா முடிந்து கிளம்புகையில் கேட்டார்.

"ஆனந்தா... இருடா கேன்டீன்ல காபி குடிச்சுட்டு போலாம்...." என்று உரிமையுடன் கூப்பிட்டார். ஆனால் நேரமின்மை காரணமாக அவருடைய அழைப்பை மனம் விரும்பிய போதும் மறுத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

தொட்டியம் சுற்று பகுதிகளில் கேன்டீன் என்று அனைவரும் அழைக்கும் ஒரு இடக்குறியீடாக (Landmark) இன்றும் அந்த அதே இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது வெண்ணிலா கேன்டீன். நீங்களும் தொட்டியம் வழியாக மாலை மற்றும் காலை வேளைகளில் பயணிக்க நேர்ந்தால் சில நிமிடம் நிறுத்தி வெண்ணிலா கேன்டீனில் காபி அல்லது டீயுடன் மெது வடையும் பஜ்ஜியும் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்.

அன்புடன்,

ஆனந்தகுமார் முத்துசாமி

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தேர்தல் களம்

தமிழகத் தேர்தல் களம் முடிவுகளை எதிர்பார்த்து அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/nostalgic-memories-about-madurai-thottiyam-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக