Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கொல்கத்தா: பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 2 பேரில் ஒருவருக்கு பாசிட்டிவ் - கலக்கத்தில் அரசு

இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமடைந்திருக்கும் கொரோனா நோய் பரவல் கடந்த சில வாரங்களாக மேற்கு வங்கத்திலும் வேகமெடுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 14,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் 10,000-ஐ தாண்டியிருக்கிறது.

கொல்கத்தாவில் நேற்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 2,970 பேருக்கு நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேற்கு வங்கத்தில் பரிசோதனை மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது .

மாநிலம் முழுவதும் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் முடிவுகள் கொல்கத்தா மக்களையும், சுகாதாரத்துறையினரையும் மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தி வருகின்றது. கொல்கத்தாவில் பரிசோதனை செய்து கொண்டவர்களில் அதிகபட்சமாக 45%-55% பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கொல்கத்தாவின் கொரோனோ பரிசோதனை மையத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், ``கொல்கத்தாவில் கடந்த சில வாரங்களில் தீவிரம் அடைந்திருக்கும் நோய்த்தொற்று பரவலுக்குப் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாததே காரணம். அதே போல் லேசான அறிகுறிகள் உணரப்பட்டாலும் மக்கள் அஜாக்கிரதையாகப் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். தற்போது, அனைவருக்கும் பரிசோதனை செய்வதில் 2 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில் தலைநகர் கொல்கத்தா நகரின் பங்களிப்பு 50-லிருந்து 60 சதவிகிதமாக இருக்கிறது.

பரிசோதனைகள் அதிகப்படுத்தும் போது இன்னும் ஏராளமானவர்களுக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும். 2021 ஏப்ரல் மாத தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 25,766 மாதிரிகளில் வெறும் 1,274 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதாவது பாதிப்பு 4.9 சதவிகிதம். ஆனால், நேற்றைய தினம் 55,060 மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 14,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 25.9 சதவிகிதம். ஒரே மாதத்திற்குள் 6 மடங்கு உயர்ந்திருக்கிறது. பரிசோதனைகளை விரிவுபடுத்தினால் மட்டுமே கொல்கத்தாவில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முடியும்" என்றார்.

கொரோனா சிகிச்சை

கொல்கத்தா நகரத்தின் கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மாநில சுகாதாரத்துறை மருத்துவமனைகளில் 60 சதவிகித படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது. மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க லேசான பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு வருவோரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நிலைமை சீராக இருந்தாலும், மாநில அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/kolkatta-corona-for-one-in-every-two-persongs-testing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக